வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (03/05/2018)

கடைசி தொடர்பு:12:01 (03/05/2018)

தியானம், கோயில், தோட்டம், காகம்... நடிகை ஊர்வசி ஸ்ட்ரெஸ் விரட்டும் வழிகள்! #LetsRelieveStress

மனசை சரிபண்ண நான் முக்கியமா ஃபாலோ பண்ணுறது என்ன தெரியுமா? - நடிகை ஊர்வசி சொல்லும் சூத்திரம்

தியானம், கோயில், தோட்டம், காகம்... நடிகை ஊர்வசி ஸ்ட்ரெஸ் விரட்டும் வழிகள்! #LetsRelieveStress

டிகை ஊர்வசி, தமிழ்ச் சினிமாவின் ஆகச் சிறந்த குணச்சித்திர நடிகைகளில் ஒருவர். ஹீரோயினாக நடிப்பதாக இருந்தாலும், காமெடி காரெக்டர் என்றாலும் வெளுத்துவாங்குவார். 'சின்ன சாவித்திரி' என்றே  இவரைப் பலரும் சினிமாவில் அழைப்பார்கள். 'முந்தானை முடிச்சு' தொடங்கி இன்றுவரை தமிழ், மலையாளம் உள்ளிட்ட 600 படங்களில் நடித்து முடித்துவிட்டார். அவரிடம் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்ட தருணங்களையும், அவற்றிலிருந்து அவர் விடுபட்டவிதங்கள் பற்றியும் கேட்டோம். 

''என் அப்பா வி.பி.மாதவன் நாயர், அந்தக் காலத்தில் மலையாள நாடக உலகில் புகழ்பெற்ற நடிகராக  இருந்தவர். கறுப்பு-வெள்ளை காலம் முதல் வண்ணப் படங்கள்வரை பலவற்றில் நடித்திருப்பவர். அப்போ மலையாளம், தெலுங்கு, தமிழ்ப் பட ஷூட்டிங் எல்லாமே சென்னையிலதான் நடக்கும். அதனால நாங்க குடும்பத்தோட சென்னைக்கே  வந்துட்டோம். 

நான் படிச்சது, வளர்ந்தது, எல்லாமே சென்னையில்தான். அப்பத்தா, அம்மம்மானு...  எல்லாரும் கூட்டுக் குடும்பமா இருந்ததால படிக்கிற காலத்துல எனக்கு பெருசா மன அழுத்தம், மன இறுக்கமெல்லாம் ஏற்பட்டதில்லை. 

ஊர்வசி

சின்ன வயசுலேயே குழந்தை நட்சத்திரமா சினிமாவுக்கு வந்துட்டதால தொழில்ரீதியாகவும் பெருசா மன அழுத்தம் ஏறட்டதில்லை. ஆனா, என் அப்பா மரணம் அடைஞ்சப்போ எனக்கு 12 வயசுதான். இப்போ இருக்கிற அளவுக்கு, அப்போ எனக்கு அவ்வளவு விவரம் தெரியாது. 

'அப்பா இனி வரவே மாட்டார். இனி பார்க்கவே முடியாது’ங்கிறதெல்லாம் போகப் போகத்தான் தெரிய ஆரம்பிச்சுது. அப்ப என் மனசுல ஏற்பட்ட வலியை என்னால மறக்கவே முடியாது. 


மெள்ள மெள்ள அதிலிருந்து விடுபடத் தொடங்கினேன். அதன் பிறகு பார்த்தால், என் தம்பி பிரின்ஸின் மரணம். அவன் அப்போதான் மெள்ள மெள்ள நடிகனாகி 'கொஞ்சும் கிளி' என்னும் படத்தில் ஹீரோவாக அறிமுகமானான். ஆனா, 17 வயசுல இறந்துபோனான். அவனைச் சின்ன வயசுலருந்து நான்தான் தூக்கி வளர்த்தவ. அந்த இறப்பு எனக்குத் தாங்கிக்க முடியாததாக இருந்தது.  

கூட்டுக்குடும்பமாக இருந்ததால், பெரியவங்க எனக்கு ஆறுதல் சொன்னாங்க. மனசைக் கொஞ்சம் கொஞ்சமா தேத்திக்கிட்டு படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சிட்டேன்.  ஒரு நாளைக்கு மூணு படம், நாலு படம்னு எல்லாம் ஷூட்டிங்குல கலந்துக்கிட்டேன். வேலைதான் என் கவலைகளை மறக்க உதவியது.

ஒரு நாளில் ஒரு முறையாவது என் தம்பியை நினைச்சுக் கவலைப்படாம இருந்ததே இல்லை. அதன் பிறகு எனக்குத் திருமணமாகி,  நான் தாயாகி, என் மகள் பிறந்த பிறகுதான் ஓரளவுக்கு என் மனம் சரியானது. வாழ்க்கைன்னா இப்படித்தான். அதை ஏத்துக்கப் பழகிக்கணும்னு தோண ஆரம்பிச்சுது. 

ஊர்வசி

மற்றபடி தொழில்ரீதியாக நான் யாரையும் போட்டியாக நினைச்சதே கிடையாது. எந்த ஈகோவும் கிடையாது. யார்கிட்டேயும் பிரச்னை என்றாலோ, மனம் வருந்தும்படி நான் பேசிவிட்டாலோ உடனே அவங்ககிட்ட நானே வெளிப்படையாகப் பேசிவிடுவேன். 

கிட்டத்தட்ட 600 படங்கள் வரை  நடிச்சிட்டேன். அதனால எனக்கு வேலை விஷயமா மன அழுத்தம் ஏற்பட்டதில்லை. அதே மாதிரி பணம், காசு இல்லைனு எப்பவுமே கவலைப்பட மாட்டேன். சாப்பிடுறதுக்கு ஈர வெங்காயமும், பழைய சாதமும் இருந்தாலும் திருப்தியாச் சாப்பிடுவேன். ஃப்ரைடு ரைஸும் சில்லி சிக்கனும் இருந்தாலும் திருப்தியாச் சாப்பிடுவேன். உணவு, உடை, உறைவிடம், பணம் போன்ற  லௌகீக விஷயங்களை நான் பெருசா எடுத்துக்கிட்டதில்லை.

உறவுகளின் பிரிவுதான் எனக்குப் பெரும் துன்பம் தரும். மரணம்கிறதுக்குத்தான் மாற்று ஏற்பாடே கிடையாது. இதுக்கு எந்த  பரிகாரங்களும் கிடையாது. ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கு. அதுதான் என்னை உடைஞ்சு போகப் பண்ணிடுச்சு. சமீபத்துல என் அக்காவின் மரணம்... அவளுக்கு ஐம்பது வயசுகூட ஆகலை. திடீர்னு இறந்துட்டா. மறுபடியும் நான் உடைஞ்சு போயிட்டேன். ஆனா, 'வாழ்க்கைங்கிறது இப்படித்தான்’னு எனக்கு நானே ஆறுதல்பட்டுக்கிட்டேன். நம்மைவிட எவ்வளவோ பேர் கஷ்டத்தில் இருக்காங்கனு மனசை சரிபண்ணிக்குவேன். 

ஊர்வசி -கல்பனா

மனசை சரிபண்ண நான் முக்கியமா ஃபாலோ பண்ணுறது தியானம்தான். எவ்வளவு கூட்டம், எவ்வளவு சத்தம் இருந்தாலும், நான் தியானம் பண்ணத் தொடங்கிடுவேன். 

எந்தக் கோயில் பக்கத்தில் இருந்தாலும் போய் அந்த தெய்வத்தை வணங்க ஆரம்பிச்சிடுவேன். கோயிலாக இருந்தாலும் சரி, சர்ச்சாக இருந்தாலும் சரி, மசூதியாக இருந்தாலும் சரி அங்கிருக்கும் வணக்க வழிபாட்டின்படி தெய்வத்தை வணங்குவேன். 

பதினஞ்சு, இருபது நிமிடங்களில் எனக்கு ஏற்பட்டிருந்த ஸ்ட்ரெஸ் போயிடும். என் கணவர் மற்றும் குழந்தைகளுடன் சிவன் கோயிலுக்குச் செல்வேன்.  குறிப்பாக, சிதம்பரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் சிவன் கோயில்களுக்குப் போவேன். சிவ வழிபாடு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.   

அப்புறம் என் வீட்டைச் சுற்றித் தோட்டம் போட்டிருக்கேன். அந்த மரங்கள், செடிகள், கொடிகளுக்கு தண்ணி ஊற்றுவது, அதுங்களுக்கு இயற்கை உரம் வைக்கறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். செடிகள், கொடிகள்கிட்ட ஃப்ரெண்ட் மாதிரி பேசுவேன். அதுங்க காற்றில் தலையசைத்து பதில் சொல்லும். மனசு லேசாகிடும். 

காலை, மதியம், சாயங்காலம்னு மூணு வேளையிலும் காகங்களுக்கு சாதம், தண்ணீர் வைப்பேன். அவை கூட்டமாக வந்து சாப்பிடும்போது மனதில் பெரிய விடுதலையும் மகிழ்ச்சியும் கிடைக்கும். சில நேரங்களில் சமையல் தாமதமானால் கிச்சன் ஜன்னலுக்கு வந்து கரைய ஆரம்பிக்கும். இப்படி சின்னச் சின்ன விஷயங்கள்தான் சந்தோஷம் தந்து என் மனதை எளிதாக்கும்.  குழந்தையாக இருந்து வயதானவர்களாக நாம் ஆகலாம். ஆனால், நமக்குள்ளிருக்கும் குழந்தைத் தன்மையை நாம் இழக்கக் கூடாது. அதுதான் நம்மை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும்'' எனக்கூறி விடை கொடுத்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்