வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (04/05/2018)

கடைசி தொடர்பு:16:39 (04/05/2018)

சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம் எலுமிச்சை! - மருத்துவம் விளக்கும் உண்மைகள்! #LemonBenefits

சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்க எலுமிச்சை உதவுமா? - மருத்துவம் சொல்வது என்ன?

சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம் எலுமிச்சை! - மருத்துவம் விளக்கும் உண்மைகள்! #LemonBenefits

லுமிச்சை, ஆண்டு முழுக்க, எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய பழம். விலையும் அதிகமில்லை. இது அள்ளித்தரும் ஆரோக்கியப் பலன்களோ அபாரமானவை. உதாரணமாக, உடல் எடை குறைக்க வேண்டுமா? தினமும் காலையில் வெந்நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்தை பிழிந்து குடிக்கலாம். இது உடலில் உள்ள கழிவுகளை அகற்றி, செரிமான சக்தியை வலுப்படுத்தும். மெள்ள மெள்ள உடல் எடை குறைய ஆரம்பிக்கும். ``செரிமானப் பிரச்னைகளைத் தீர்ப்பதோடு, சருமம், முடி தொடர்பான பல பிரச்னைகளைத் தீர்க்க உதவும். அதோடு சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்’’ என்கிறார் சர்க்கரைநோய் நிபுணர் தர்மராஜன்.  

``எலுமிச்சையில் வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம் ஆகியவை அதிகம் காணப்படுகின்றன. இதிலிருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, நம்மைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். உடற்பயிற்சிக்கு முன் எலுமிச்சைச் சாறு அருந்தினால், உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் உடல் சோர்வு, களைப்பு நீங்கும்.

எலுமிச்சை

`உடலில் தேவையான அளவு வைட்டமின் சி இருப்பவர்களுக்குச் சர்க்கரை நோய் பாதிக்கும் அபாயம் வெகு குறைவு’ என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். அதோடு, `காய்கறிகளையும் பழங்களையும் அதிகமாகச் சாப்பிட்டால், சர்க்கரைநோய் வருவதை ஓரளவுக்குத் தடுக்கவும் செய்யலாம்’ என்கின்றன சில ஆய்வுகள். மெட்ஃபார்மின் (Metformin) போன்ற சர்க்கரைநோய்க்கான சில மருந்துகளுடன், வைட்டமின் சி நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது டைப் 2 சர்க்கரைநோயைக் கட்டுக்குள்வைத்திருக்க உதவும். ஓர் ஆய்வில், சர்க்கரை நோயாளிகளுக்கு மெட்ஃபார்மினுடன் பன்னிரண்டு வாரங்களுக்கு வைட்டமின் சி மாத்திரைகளைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உணவுக்கு முன்னரும், உணவுக்குப் பின்னரும் ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் மற்றும் ஹீமோகுளோபின் (HbA1C Glycosylated Haemoglobin) அளவு, மற்ற சர்க்கரை நோயாளிகளுக்கு இருப்பதைவிடக் குறைவாக இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இத்தனை நன்மைகள் கொண்ட வைட்டமின் சி, நம்மூர் எலுமிச்சையில் குறைவில்லாமல் கிடைக்கிறது.

ஒருவருக்கு ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் சி அளவில் பாதியை, ஓர் எலுமிச்சைப் பழம் கொடுத்துவிடும். `இதிலிருக்கும் வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், ஃபோலேட் (Folate) ஆகியவை சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல... சர்க்கரைநோயைத் தடுக்க நினைப்பவர்களுக்கும் மிகச் சிறந்தது’ என்கிறது அமெரிக்கன் டயாபடீஸ் அஸோசியேஷன்.

வைட்டமின் சி-யை மாத்திரையாக உட்கொள்ளும்போது, அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால், பக்கவிளைவுகள் ஏற்படலாம். இயற்கையாக எலுமிச்சை கிடைக்க, செயற்கை வைட்டமின் சி நமக்கு எதற்கு? நாம் எலுமிச்சைப் பழத்தை பயன்படுத்தும்போது, அதன் புளிப்புத் தன்மை காரணமாக, குறைவாகத்தான் உட்கொள்வோம். எனவே, அதிக அளவில் வைட்டமின் சி உடலில் சேர்ந்துவிடுமோ என்கிற பயம் தேவையில்லை. வைட்டமின் சி ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட். இதனால் சர்க்கரைநோயால் ஏற்படும் இதயம் (Cardiovascular) தொடர்பான நோய்களையும் பக்கவாதத்தையும் தவிர்க்கலாம்.  

சர்க்கரை

ஓர் எலுமிச்சையில் சராசரியாக 2.4 கிராம் நார்ச்சத்து இருக்கிறது. இது ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்குத் தேவையான நார்ச்சத்தில் 9.6 சதவிகிதம். நார்ச்சத்து மிகுந்த உணவை உட்கொள்வதால், ரத்தத்திலுள்ள குளூக்கோஸ் மற்றும் ட்ரைகிளைசரைடு (Triglyceride) அளவைக் குறைக்கும்; அதோடு, இன்சுலின் (Insulin) தேவையையும் குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் இதய நோய்களைத் தடுப்பதிலும், உடல் எடையைக் குறைப்பதிலும் நார்ச்சத்தின் பங்கு முக்கியமானது. நார்ச்சத்து நிறைந்திருக்கும் உணவு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சீராக வைத்திருக்க உதவும். மேலும், சர்க்கரை நோயாளிகளின் பசியைக் கட்டுப்படுத்தி, அடிக்கடி உணவு உட்கொள்ளும் வேட்கையையும் குறைக்கும். எலுமிச்சையிலிருக்கும் பொட்டாசியம் இதயத்துக்கு உற்ற நண்பன். இது, ரத்த அழுத்தத்தைக் குறைத்து, பக்கவாதம் மற்றும் மாரடைப்பைத் தடுக்க உதவும். உடலில் சேரும் அதிக கால்சியத்தால், ரத்த நாளங்கள் கடினமாவதை (Atherosclerosis) பொட்டாசியம் குறைக்கும். இன்றைக்கு நம்மில் பலர் பதப்படுத்தப்பட்ட உணவை நிறையச் சாப்பிடுவதால், ரத்தத்திலுள்ள சோடியத்தின் அளவு அதிகரித்துவிடும். இதற்கும் தீர்வு தரக்கூடியது பொட்டாசியம். இது, எலுமிச்சையில் நிறைந்துள்ளது.  

எலுமிச்சை

சர்க்கரை நோயாளிகள், செரிமானத் திறனை சீராக வைத்திருக்க வேண்டும். சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்கவில்லை என்றால், மற்ற உடல் உறுப்புகளுடன் வயிறும் பாதிக்கக்கூடும். இதனால் வயிற்றில் உள்ள அமிலங்கள், உணவுக்குழாயின் உட்பக்கத்தை அரிக்க ஆரம்பிக்கும். (Acid Re-flux). அதனால், உணவு செரிமானமாவதற்கு ஆகும் நேரமும், உணவு வயிற்றைவிட்டு வெளியேறத் தேவைப்படும் நேரமும் அதிகரிக்கும். இதைக் குணப்படுத்த மருந்துகள் இருந்தாலும், எலுமிச்சைச் சாறு அவற்றைவிடச் சிறந்த இயற்கையான தீர்வு. எலுமிச்சையிலிருக்கும் குறைந்த கலோரியும் கொழுப்பும் சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம். ஓர் எலுமிச்சையில் 17-24 கலோரிகளே இருக்கின்றன. எலுமிச்சைச் சாற்றில் 11 கலோரிகளே உள்ளன. எனவே, எலுமிச்சையைப் பழமாகவோ, சாறாகவோ தாராளமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சாலடுகளிலும், அசைவ உணவுகள் சமைக்கும்போதும் எலுமிச்சைச் சாற்றை சுவைகூட்டுவதற்குப் பயன்படுத்தலாம். வறுத்த அல்லது வேகவைத்த காய்கறிகளை எலுமிச்சைச் சாற்றுடன் சேர்த்தும் சாப்பிடலாம். சிலருக்கு எலுமிச்சை ஏற்றுக்கொள்ளாது என்பதல், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு சேர்த்துக்கொள்வது நல்லது.

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு... எலுமிச்சையையும் அளவோடுதான் உட்கொள்ள வேண்டும். அதிகமாக உட்கொண்டால் அசிடிட்டி (Acidity) மற்றும் நெஞ்செரிச்சல் வருவதற்கான வாய்ப்பு உண்டு. சிலருக்கு சிட்ரஸ் அலர்ஜி (Citrus allergy) இருக்கும். அவர்கள் எலுமிச்சையைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது. இதிலிருக்கும் அமிலத்தன்மை, பற்களிலிருக்கும் எனாமலை அரித்துவிடும் என்பதால், இதன் சாற்றை அருந்தியவுடன் வாயைக் கொப்பளித்துவிட வேண்டும். எலுமிச்சையிலிருக்கும் வைட்டமின் சி, உடலில் இரும்புச்சத்து சேர உதவிபுரியும். எனவே, உடலில் தேவைக்கு அதிகமாக இரும்புச்சத்து இருப்பவர்கள், எலுமிச்சையைத் தவிர்ப்பது நல்லது. சிறுநீரகக்கல் பிரச்னை இருப்பவர்களும் இதன் அதீத வைட்டமின் சி காரணமாக தவிர்ப்பது நல்லது. எலுமிச்சையில் இத்தனை நன்மை இருக்கிறதே என்பதற்காக சர்க்கரைநோய் உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை நிறுத்திவிடக் கூடாது. மருந்துகளோடு, எலுமிச்சையைச் சேர்த்துக்கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்குக் கூடுதல் நன்மை தரும். இயற்கை உணவே அருமருந்து. எலுமிச்சைக்கு `வெல்கம்’ சொல்வோம்!  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்