கோடைக்காலம்... குழந்தைகளுக்கு டயாப்பர் பயன்படுத்தும்போது கவனமா இருங்க!

தொலைதூரப் பயணங்களின்போது, தர்மசங்கடத்தைத் தவிர்க்க, குழந்தைகளை பல மணி நேரம் டயாப்பரில் வைத்திருக்கிறார்கள் சில தாய்மார்கள். அது சரியா?

கோடைக்காலம்... குழந்தைகளுக்கு டயாப்பர் பயன்படுத்தும்போது கவனமா இருங்க!

குழந்தைகள் இருக்கும் வீட்டில் தவிர்க்க முடியாத பொருளாகி விட்டது டயாப்பர். தொலைதூரப் பயணங்களின்போது, தர்மசங்கடத்தைத் தவிர்க்க, குழந்தைகளைப் பல மணி நேரம் டயாப்பரில் வைத்திருக்கிறார்கள் சில தாய்மார்கள். அப்படி நெடுநேரம் குழந்தைகளுக்கு டயாப்பர் உடுத்தி வைத்திருப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள்.  குறிப்பாக, கோடைக்காலத்தில் கண்டிப்பாக டயாப்பரை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள் அவர்கள்.  

டயாப்பர்

இதுகுறித்து விவரிக்கிறார்,  குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ரகுராம். 

``டயாப்பரை குறைவான நேரமே பயன்படுத்த வேண்டும். அதுவும் துணி டயாப்பர் பயன்படுத்துவதே நல்லது. அதிகபட்சம் மூன்று முதல் நான்கு மணி நேரத்துக்குமேல் பயன்படுத்தக்கூடாது. அதிக நேரம் பயன்படுத்துவதால் சிறுநீர், மலம் ஏற்படுத்தும் ஈரப்பதத்தால் குழந்தையின் சருமத்தில் `டயாப்பர் டெர்மடிடிஸ்’ (Diaper Dermatitis) எனப்படும் தோல் அலர்ஜி ஏற்படும். இதனால் குழந்தைகளின் பின்புறமும், தொடைப்பகுதிகளும்  சிவந்து போகும். அரிப்பும் ஏற்படும், எனவே,  குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை டயாப்பரை மாற்ற வேண்டும். 

டயாப்பர் போடுவதற்கு முன், மருத்துவர் ஆலோசனைப்படி  அதற்கென உள்ள ஜெல், க்ரீமை தடவ வேண்டும். அந்த க்ரீமில் `ஸிங்க்’ (Zinc) என்ற வேதிப்பொருள் இருப்பதால், அது தோலின் மேல்புறம் ஒரு லேயராக (Layer) செயல்பட்டு சிறுநீர், மலம் போன்றவை குழந்தையின் தோலில் ஒட்டிக்கொள்ளாமல் பாதுகாக்கும். மேலும், பூஞ்சைத் தொற்றுகள் (Fungal infections) ஏற்படாமலும் தடுக்கும்.

குழந்தை

கோடைக்காலத்தில் அதிகநேரம் டயாப்பர் பயன்படுத்தினால், அதிகப்படியான வியர்வை, சிறுநீர், மலம் காரணமாக தோல் அரிப்பு, பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படும். சருமம் சிவந்தோ, தடித்தோ காணப்பட்டால் உடனடியாக மருத்துவரைப் பார்த்து சிகிச்சை மேற்கொள்வது நல்லது. தொற்றுகள் ஏற்பட்டுவிட்டால், குளிர்ந்த நீரை துணியில் நனைத்து அப்பகுதிகளில் அடிக்கடி ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஆடைகள் அணிவிக்காமல் காற்றோட்டமாக விடவேண்டும்.

`டயாப்பர் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அப்படிப் பயன்படுத்துவதாக இருந்தால், அரை மணிநேரத்துக்கு ஒருமுறை குழந்தை சிறுநீர், மலம் கழித்திருக்கிறதா? என்பதைச் சோதித்துப்பார்க்க வேண்டும். சிறுநீர் அல்லது மலம் கழித்திருந்தால், உடனடியாக டயாப்பரைக் கழற்றி, அந்தப் பகுதிகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.  குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்டால், வேறு நிறுவன டயாப்பர்களை மாற்றிப் பயன்படுத்துவது நல்லது...’’ என்கிறார் மருத்துவர் ரகுராம். 
குழந்தை

தாய்மார்களுக்கு சில யோசனைகள்:

* குழந்தைகளுக்கு 2 வயது வரை மட்டும் டயாப்பர் பயன்படுத்தலாம். கழிவறைகளைப் பயன்படுத்த 2 வயதிலிருந்தே பழக்கப்படுத்த வேண்டும்.

* வெளியூருக்குச் செல்லும்போது மட்டும் டயாப்பர் பயன்படுத்துவது நல்லது.

* இரவு முழுவதும் ஒரே டயாப்பரை பயன்படுத்தக்கூடாது. 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

* ஒருமுறை பயன்படுத்தி கழற்றிய டயாப்பரை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.

* டயாப்பரை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.

* குழந்தைகள் விளையாடும் இடங்களில் பழைய டயாப்பர்களை வீசாதீர்கள். 

 * இறுக்கமானதாக இல்லாமல், தளர்வான டயாப்பர்களைப் பயன்படுத்த வேண்டும்.

* டயாப்பர் அணியாத நேரங்களில், குழந்தையின் உடலை  துடைத்து காற்றாட வைத்திருங்கள். 

* சூப்பர் அப்சர்வ் காட்டன் டயாப்பர்களைப் பயன்படுத்துவதே நல்லது.

* ஈரம் அதிகமாகிவிட்டதா என்று அடிக்கடி டயாப்பரை கவனிக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!