Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோடைக்கு இதம் தரும் கரும்பு ஜூஸ்... யாரெல்லாம் குடிக்கலாம்? #BenefitsOfSugarcaneJuice

இது அக்னி நட்சத்திரக் காலம் என்பதால் வெளுத்து வாங்குகிறது வெயில். இதைச் சமாளிக்க உதவுபவை ஜூஸ், கூழ், பழங்கள், மோர் போன்றவைதாம். கோடைக்காலம் தொடங்கியதுமே சாலையோரத்திலும் நடைபாதைகளில் ஃப்ரூட் ஜூஸ், சர்பத், கூழ், தர்பூசணி போன்றவற்றின் வியாபாரம் களைகட்ட ஆரம்பித்துவிடும். நம் தாகம் தணிக்கும் இது போன்ற பானங்களில் கரும்பு ஜூஸுக்கு முக்கிய இடம் உண்டு. கரும்பு ஜூஸ் விற்கும் கடைகள் முன்னெப்போதையும்விட இப்போது அதிகரித்திருக்கின்றன.

கரும்புச்சாறு கடை

இதற்கான பிரத்யேக மெஷினில் கடைக்காரர் நீளமான கரும்புகளை ஒரு பக்கம் ஒன்றிரண்டாகவிட்டு மற்றொரு பக்கம் எடுத்தால், கரும்பு நசுங்கி சக்கையாகி, அதிலிருந்து ஃப்ரெஷ்ஷான ஜூஸைப் பிரித்துக் கொடுத்துவிடும். செயற்கைக் குளிர்பானங்களில் என்னென்ன இருக்கின்றன என்பது தெரியாமலேயே வாங்கி அருந்துவதைவிட, இப்படி இயற்கை முறையில் நம் கண்ணெதிரே பிழிந்து கொடுக்கும் கரும்பு ஜூஸ் அருந்துவதில் பலருக்கும் அலாதியான விருப்பம் உண்டு. கரும்பின் இனிப்புச் சுவைக்கும் நிகர் அது மட்டும்தான்.

ஆனால், கரும்பு ஜூஸ் குடிக்கும்போதே `இதில் ஐஸ் சேர்த்துக் குடிக்கலாமா... எலுமிச்சை, இஞ்சியெல்லாம் ஏன் சேர்க்கிறார்கள்... அதிகம் குடித்தால் சர்க்கரைநோய் வருமா..?’ என்றெல்லாம் பலருக்கும் சந்தேகங்கள் எழும்.

இந்தக் கேள்விகளை சித்த மருத்துவர் வேலாயுதத்தின் முன் வைத்தோம்.

``கரும்பு, நம் வாழ்வியலோடு தொடர்புடையது. சங்க இலக்கியங்களிலும், சித்த மருத்துவ நூல்களிலும் கரும்பின் மகிமை குறிப்பிடப்பட்டிருக்கிறது; அதோடு கரும்புக்கும் நம் முன்னோர்களுக்கும் இடையேயான தொடர்புகளும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. விழாக்கள், விசேஷங்களின்போது கரும்புக்கு முக்கிய இடம் கொடுத்தார்கள் தமிழர்கள். இன்றைக்குப் பொங்கல் பண்டிகையின்போது மட்டும் கரும்பைக் கொண்டாடுவது என்று சுருங்கிவிட்டது அதன் முக்கியத்துவம்.

கரும்பு

எல்லாக் காலத்துக்கும் ஏற்ற ஆரோக்கிய பானம் கரும்புச் சாறு. அதிலும், கோடையில் இதன் பலன்கள் ஏராளம். கரும்பில் இரும்புச்சத்து, மக்னீசியம், கால்சியம் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான சத்துகள் அடங்கியிருக்கின்றன. வெயில் காலத்தில் ஏற்படும் நீர் வறட்சி, நீரிழப்பு, உடல் சூட்டைத் தவிர்க்கவும் இது உதவும். உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளும். இதனால் மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கும்.

இது, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவதால், தொற்றுநோய்கள் நெருங்காது. கோடைக்காலத்தில் ஏற்படும் சிறுநீரகக் கல், சிறுநீரகத் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் நன்றாகப் பிரியும். உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றி, உடல் எடையைக் குறைக்க உதவும். இது, உடனடி ஆற்றல் தரும் இயற்கை டானிக்கும்கூட. பற்கள், எலும்புகளை வலுவாக்கும். உணவு உண்ட பிறகு கரும்புச் சாறு அருந்தினால், சாப்பிட்ட உணவை எளிதில் செரிமானமாக்க உதவும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது இந்த பானம்’’ என்கிற மருத்துவர் வேலாயுதத்திடம், ``சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?’’ என்று கேட்டோம்.

கருப்புச்சாறு

``கரும்பு என்றதுமே அதில் குளுக்கோஸ் மட்டுமே இருக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள். இதில் பல நுண்ணூட்டச் சத்துகளும் இருக்கின்றன. இதிலிருக்கும் சுக்ரோஸ், உடனடியாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காது. கொஞ்சம் அதிகமாக அருந்தினாலோ, அல்லது அருந்தி நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடும். அதனால் இதை ஆங்கில மருத்துவத்தில் `லோ கிளைசெமிக் இண்டெக்ஸ்’ உள்ளது என்கிறார்கள். எனவே, சர்க்கரை நோயாளிகள் அரை டம்ளர் வீதம் வாரத்துக்கு இரண்டு முறை குடிக்கலாம்.

கரும்பு ஜூஸ் கடை

எலுமிச்சை, இஞ்சி, ஐஸ்....

கரும்புச் சாற்றில் எலுமிச்சை, இஞ்சி சேர்ப்பது கூடுதல் பலன் தரும். இதுவும்கூட ஒரு வகையில் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதைக் குறைக்கும். எனவே, அவற்றைச் சேர்த்து சாப்பிடுவது நல்லது.சித்த மருத்துவர் வேலாயுதம்

கரும்பு ஜூஸ் குடிப்பதில் பலரும் செய்யும் தவறு, அதனுடன் ஐஸ் சேர்ப்பது. குடிக்கும்போது ஜில்லென்றிருந்தாலும், குடித்த பிறகு அது உடல் சூட்டை அதிகரித்துவிடும். எனவே, ஐஸ் சேர்ப்பதால் கரும்புச் சாறு நேர் எதிர் தன்மையைப் பெற்றுவிடுகிறது. மேலும், அந்த ஐஸ் கட்டிகள் சுகாதாரமான தண்ணீரில் தயாரிக்கப்பட்டவையா என்பதும் நமக்குத் தெரியாது. எனவே, கரும்புச் சாற்றில் ஐஸ் சேர்த்து குடிப்பதை தவிர்க்க வேண்டும். வேண்டுமென்றால், மண்பானையில் ஊற்றிக் குடிக்கலாம்.

பெரும்பாலான கருப்பு ஜூஸ் கடைகளில், ஒரு பாத்திரத்தில் ஐஸைக் கொட்டி,  நம் கண்ணுக்குத் தெரியாத இடத்தில் வைத்து கரும்பு ஜூஸைப் பிடிப்பார்கள். சிலர் கரும்பு ஜூஸில் தண்ணீர், சாக்கரின் போன்றவற்றைக் கலந்து விற்கிறார்கள். இதெல்லாம் விபரீதமானவை.

மேலும்,  24 மணி நேரமும் கரும்பும், கரும்பு பிழியும் மெஷினும்  திறந்தவெளியிலும், சாலையோரத்திலும் கிடப்பதால், அதை முறையாகச் சுத்தம் செய்து பராமரிக்கிறார்களா என்பதை அறிந்துகொண்டு குடிப்பது நல்லது. ஐஸ் இல்லாமல், கண் முன் பிழிந்துதரச் சொல்லிக் குடிப்பது இன்னும் நல்லது’’ என்கிறார் வேலாயுதம்.

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement