Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

ஹீல்ஸ் அணிந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா?!

பெண்கள் அழகுக்காகச் செய்யும் எத்தனையோ விஷயங்கள் பல நேரத்தில் ஆபத்தில் முடிந்திருக்கிறது. மகாராஷ்டிரா  மாநிலத்தில் ஹை ஹீல்ஸ் அணிந்தபடி  தன் ஆறு மாதக் குழந்தையுடன் திருமணத்துக்குச்  சென்ற பெண், ஹீல்ஸ் தடுக்கியதில் மாடியிலிருந்து தவறி விழுந்து குழந்தையோடு பலியானார். அழகுக்காக அணியப்படும் ஹீல்ஸால் உயிரிழப்பு மட்டுமல்ல உடல் உபாதைகளும் ஏற்படும் என்பதை விளக்குகிறார் Aster Medcity மருத்துவமனை  ஆர்த்தோ சர்ஜன் சபரி க்ரிஷ்.

`நாம் காலணிகள் தேர்வு செய்யும்போது அது நம் பாதத்தை காக்குமா, நம் பாதங்களுக்கு செட் ஆகுமா என்பதைப்  பார்த்துத்தான் தேர்வு செய்ய வேண்டுமே தவிர, அது நம்மை உயரமாகக்  காட்டுமா, அழகாகக்  காட்டுமா என்பதைப்  பார்த்து வாங்குவது நிச்சயம் விபரீதத்தில்தான் போய் முடியும்.

ஹீல்ஸ்

ஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு பிளான்டர் பேசிட்டீஸ் (plantar fascicts) எனப்படும் குதிகால் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஹீல்ஸ் அணியும்போது உடலின் முழு எடையையும் கணுக்கால் தாங்க வேண்டியிருக்கும். இதனால் கணுக்கால் அதிக அளவு அழுத்தத்துக்கு உண்டாகும். விளைவு, வலி ஏற்பட்டு, நரம்புகள் தன் சம நிலையை இழந்து சுளுக்கு ஏற்படும். கால் தடுமாறும் நேரங்களில் தசை நாண்களில் அதிகளவு பாதிப்பு, தசை முறிவு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

சபரி க்ரிஷ்வெறுங்காலிலோ அல்லது தட்டையான செருப்புகள் அணியும்போதோ, நம் உடலின் மொத்த எடையும் முதுகெலும்பு மூலமாகச் சமன் செய்யப்படும். ஆனால், ஹீல்ஸ் அணியும்போது குதிகால் சற்று உயரமாக  இருக்கும். இதனால், நம் உடலானது சற்று முன்னோக்கி வளைந்து இருக்கும். உடலின் ஒட்டு மொத்த எடையை மூட்டு தாங்க வேண்டியிருப்பதால் மூட்டு வலி ஏற்படும். தொடர்ந்து ஹீல்ஸ் அணியும்போது மூட்டு ஜவ்வில் தேய்மானம் ஏற்பட்டு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதிருக்கும். 

ஹீல்ஸ் தொடர்ந்து அணிபவர்களுக்குச்  சிலசமயம் குதிகால் சிவந்து, லேசான வலி இருக்கும். குதிகால் உள் எலும்புகள்  சேதமடைந்ததின் அறிகுறி இது. இதை அறியாமல், ஆயில் மசாஜ், கால் நரம்புகளை உருவிவிடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் நரம்புகளில் பாதிப்பு ஏற்படும்.

ஹை- ஹீல்ஸ் தொடர்ந்து அணியும்போது, கால் விரல்கள் பாதத்துடன் சேரும் பகுதி அதிக அழுத்தத்துக்கு உள்ளாகும். கால் ஆணி என்று சொல்லக்கூடிய  கட்டிகள்,  அந்தப் பகுதியில் தோன்றவும் வாய்ப்பு உள்ளது.

அக்கிலீஸ் டென்டன் (ACHILLES TENDON) என்பது கணுக்கால் தசையையும் குதிகால் எலும்பையும்  இணைக்கும் இணைப்புத் திசு. நெகிழ்வுதன்மை கொண்ட இந்தத் திசுதான் பாதத்தை தரையில் ஊன்றி நாம் நடப்பதற்கு உதவும். ஹை ஹீல்ஸ் காலணிகள் அணியும் போது குதிகால் தூக்கிய வடிவத்திலே இருப்பதால் நாளடைவில் இந்த இணைப்புத்திசு நெகிழ்வுத்தன்மையை இழந்து அப்படியே இறுக்கமடையும். இதனால் பாதத்தை தரையில் ஊன்றும்போது வலி ஏற்படும்.

மேலும் ஹீல்ஸ் அணியும்போது  அதைப் பேலன்ஸ் செய்ய நம் உடல் நிலையில் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது. தொடர்ந்து ஹீல்ஸ் அணியும்போது உடல் அந்த மாற்றத்தை நிரந்தரமாக மாற்றமாக ஏற்றுக்கொள்ளும். இதனால், உடலின் கீழ் இடுப்புப் பகுதி பெரியதாகுதல், முதுகுப்பகுதி வளைதல் (கூன் விழுதல்) போன்றவை ஏற்படலாம். இது தவிர, சில பெண்களுக்கு கர்ப்பபை பாதிப்புகளும் ஏற்படலாம் என விளக்கமாகக் கூறினார்...

பாதங்களுக்கு ஏற்ற மென்மையான ப்ளாட் காலணிகளைத் தேர்வு செய்து உடலின் ஆரோக்கியம் காப்போம்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement