Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்களைப் பாதிக்கும் ஃபைப்ரோமையால்ஜியா... அறிகுறிகள், தீர்வுகள்! #FibromyalgiaAwarenessDay

``காலையிலிருந்து ஒரே உடம்பு வலி.. இந்த இடம்தான்னு இல்ல. கால்லருந்து தலை வரைக்கும் பல இடங்கள்ல, பின்னியெடுக்குது.. மாத்திரை சாப்பிட்டும், ஒன்னும் பிரயோசனம் இல்ல. என்னங்க... உங்ககிட்டதான் சொல்லிக்கிட்டு இருக்கேன்..” என்று சொல்லும் மனைவியின் பேச்சை, இனி உதாசீனப்படுத்தாதீர்கள். அது ஒருவேளை 'ஃபைப்ரோமையால்ஜியா' (Fibromyalgia)நோயாக இருக்கக்கூடும். இது பெண்களை அதிகமாகத் தாக்கக் கூடிய நோய்களில் ஒன்று. இதை, 1990-ம் ஆண்டுக்குப் பிறகுதான் கண்டுபிடித்தார்கள். ‘உலக அளவில் 3 முதல் 6 சதவிகிதம் பேர் ஃபைப்ரோமையால்ஜியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்று கூறுகிறது அமெரிக்க மூட்டுவலிக் கழகம். 

ஃபைப்ரோமையால்ஜியா

அதென்ன ஃபைப்ரோமையால்ஜியா? 

 வலி நிவாரண மருத்துவர் பிரபு திலக்கிடம் கேட்டோம்..

``கிரேக்க வார்த்தையில் 'ஃபைப்ரோமையால்ஜியா' என்றால் `தீராத தசைவலி’, `நாள்பட்ட வலி’ என்பது பொருள். இதனை டாக்டர் பிரபு திலக்‘ஃபைப்ரோமையோசைட்டிஸ்’ அல்லது `ஃபைப்ரோசைட்டிஸ்’ என்றும் சொல்வார்கள். ஊசியால் குத்துவதுபோலவோ, தேள்கடிப்பது போலவோ வலி எடுக்கும். உடலில் 18 இடங்கள் வரை வலி ஏற்படலாம். தலையின் பின்பகுதி, கழுத்தின் மேற்பகுதி, தோள்பட்டை, நடு நெஞ்சின் மேற்பகுதி, முழங்கை, இடுப்பு, முழங்காலின் பின்பகுதி உள்ளிட்ட இடங்களில் உள்ள தசைகளை இயக்கும்போது வலியோடு தசை இறுக்கம் ஏற்படும். இந்த இடங்களில் எல்லாம் வலியை உணர முடியும். இந்த இடங்களை `டெண்டர் புள்ளிகள்' (Tender points) என்கிறோம். வலி பாதிப்புள்ளவர்களுக்கு, அந்த இடங்களில் லேசான அழுத்தம் கொடுப்போம். குறைந்தபட்சம் 7 இடங்களில் அதிக வலி ஏற்பட்டால், அது `ஃபைப்ரோமையால்ஜியா' தான் என உறுதி செய்வோம். 

வலி ஏன் ?

உணர்ச்சிகளை மூளையிலிருந்து நரம்புகளின் வழியாக உடலின் மற்ற பாகங்களுக்குக் கொண்டுசெல்வது `நியூரோடிரான் ஸ்மீட்டர்ஸ்' என்கிற நரம்பியக் கடத்திகள்தாம். செரட்டோனின் (serotonin) மற்றும் சப்ஸ்டன்ஸ் பி (substance p) என்ற வேதிப்பொருள்கள்தாம் வலியைக் கடத்துவதில் முக்கியமானவை. சப்ஸ்டன்ஸ் பி, வலியை அதிகளவில் உணரச் செய்யவும் செரட்டோனின், வலியுணர்ச்சியைக் குறைக்கவும் பயன்படுகிறது. ஃபைப்ரோமையால்ஜியா நோயாளிகளுக்குச் செரட்டோனின் சுரப்பு குறைந்துவிடும் அல்லது செரட்டோனின் போதுமான நேரத்துக்கு உடலில் தங்காது. இதனால், சப்ஸ்டன்ஸ் பி அளவு அதிகமாகி, கடுமையான வலியை உண்டாக்குகிறது. 

எக்ஸ்ரே

கண்டறிவது எப்படி? 

இந்நோயை ரத்தப் பரிசோதனைகள், எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனைகளால் கண்டறிய முடியாது. ஆர்த்ரைட்டிஸ், நரம்பியல் கோளாறுகள், எலும்பு தொடர்பான பிரச்னைகள் என வேறு எந்தப் பாதிப்புகளாலும் வலி ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்த மட்டும்தான் முடியும். வலி தொடர்ந்தால், வலி நிவாரண மருத்துவர்களைச் சந்திக்க வேண்டும். அவர்களால், மட்டுமே இந்நோயைக் கண்டறிய முடியும். அவர்களது ஆலோசனையின்பேரில் உடற்பயிற்சி மற்றும் தினசரி வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். அத்துடன் செரட்டோனின் சுரப்பைத் தூண்டும் மாத்திரைகள், தசைவலியைக் குறைக்கும் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ளலாம். மேலும், `டிரிகர் பாயின்ட்ஸ் ஊசிகள்' (Trigger Point Injections) மூலமாகவும் முழங்கால் வலிநிவாரணம் பெறலாம்.  

யாரைத் தாக்கும்?

இந்நோய் 20 முதல் 60 வயதுள்ள பெண்களுக்கு அதிகம் ஏற்படும். நோய்க்கான காரணங்கள் இன்னமும் கண்டறியப்படவில்லை. இருந்தாலும், சப்ஸ்டன்ஸ் பி வேதிப்பொருளின் அளவு அதிகரிப்பு, தூக்கமின்மை, உடலுழைப்பு குறைந்துபோதல், அதிகப்படியான சோகம் போன்றவற்றால் ஏற்படலாம் என நம்பப்படுகிறது. இதுபற்றிய ஆய்வுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.  

விழிப்புஉணர்வு தேவை!

ஃபைப்ரோமையால்ஜியா நோய் பாதிப்புள்ளவர்கள் மட்டுமல்லாது, நோய் பாதிப்பில்லாதவர்களும் இந்நோய் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், அனைத்துப் பரிசோதனை முடிவுகளும் ‘எந்த நோயும் இல்லை’ என்றுதான் காட்டும். நோயாளி, வலியால் துடிக்கும்போது, அவரின் குடும்பத்தினரே “ஒண்ணுமேயில்ல.. எதுக்கு இப்படி சீன் போடுறே..?”  எனக் கேட்கும் நிலைதான் இருக்கிறது. இது நோயாளிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திவிடும்.

அரவணைக்கலாமே!

தற்போது வரை இந்நோய்க்கான மருந்து கண்டறியப்படவில்லை. ஆயுள் முழுக்க வலியோடு வாழும் ஃபைப்ரோமையால்ஜியா நோயாளர்களை நாம் புறக்கணிக்கக் கூடாது. அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்; புரிந்துகொள்ள வேண்டும்;  சிகிச்சை அளிக்க வேண்டும்" என்கிறார் மருத்துவர் பிரபு திலக்.  

இன்று ``உலக ஃபைப்ரோமையால்ஜியா விழிப்புஉணர்வு தினம்". 1998-ம் ஆண்டிலிருந்து, கலிஃபோர்னியாவில் தேசிய ஃபைப்ரோமையால்ஜியா சங்கம் என்னும் தன்னார்வ அமைப்பின் மூலம் இந்த தினம் உலகமெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement