Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

கோடையில் குழந்தைகளுக்கு மூக்கில் ரத்தம் கசிவது ஏன்? காரணங்கள், தீர்வுகள்!

து, பள்ளிகளுக்கு விடுமுறை காலம்! மாணவர்களுக்குக் கொண்டாட்டம்... பெற்றோர்களுக்குப் பெரும்பாடு. கடுமையான வெயிலைப் பற்றி குழந்தைகளுக்குக் கவலையில்லை. வெயிலில் கரைந்து விளையாடித் தீர்ப்பார்கள். அவர்களின் உலகம், சந்தோஷத்தால் நிரம்பிவழியும். கோடையின் சுட்டெரிக்கும் வெயிலில் சில குழந்தைகள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னை ஒன்று உண்டு... உற்சாகமாக விளையாடிக்கொண்டிருக்கும்போதே சிலருக்கு மூக்கிலிருந்து கொஞ்சமாக ரத்தம் கசியும்; சிலருக்கு வழியும். இதைப் பார்த்தால் குழந்தைகள் மட்டுமல்ல; பெற்றோர்களுமே கலங்கிப்போய்விடுவார்கள்.

ரத்தம்

`சரி... இப்படி மூக்கில் ரத்தக் கசிவு ஏற்பட காரணம்... தடுக்க என்ன செய்ய வேண்டும்?’ காது, மூக்கு, தொண்டை மருத்துவர் சங்கரிடம் கேட்டோம்.

``வெயில் காலத்தில் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும். விளையாடும்போது, மைதானத்திலிருக்கும் தூசு குழந்தைகளின் மூக்கில் சேர்ந்து, எரிச்சலை ஏற்படுத்தும். இதைப் போக்குவதற்காக குழந்தைகள் மூக்கை விரலால் நோண்டுவார்கள். அப்போது, நகம்பட்டு மூக்கின் உட்பகுதியில் ரத்தம் கசிய ஆரம்பிக்கும். அதோடு, ஈரப்பதமற்ற காற்றை அவர்கள் சுவாசிப்பதால், மூக்கிலிருக்கும் சளி காய்ந்து பொருக்காக மாறும். குழந்தைகள் அதைப் பிய்த்து எடுக்க முயற்சி செய்வார்கள். இதனால், மூக்கின் தோலும் சேர்ந்து பிய்ந்து, அதனால் ரத்தக் கசிவு ஏற்படலாம்.

மிக மென்மையானது மூக்கின் தோல். எனவே, உடல் சூடாகி, மூக்கிலுள்ள ரத்த நாளங்களில் வெடிப்பு ஏற்பட்டாலும் அதிலிருந்து ரத்தம் ஒழுகும். பிறக்கும்போதே, சில குழந்தைகளுக்கு, மூக்கை இடது-வலதாகப் பிரிக்கும் மூக்குத் தண்டு வளைந்திருக்கும்; அதனால் அந்தக் குழந்தைகளுக்கு ரத்தம் கசியும் வாய்ப்புண்டு. குழந்தைகள் தானாக மூக்கைச் சுத்தம் செய்ய முயற்சி செய்யும்போது மூக்கின் மென்மையான தோல் பாதிக்கப்பட்டு, அதனாலும் ரத்தம் வரலாம்.

மூக்கில் வலி

பெரியவர்களுக்கு மூக்கில் ரத்தம் வடிவதற்கு முக்கியமான காரணம், உயர் ரத்த அழுத்தம். நடுத்தர வயதினருக்கு சைனஸால் மூக்கில் சீழ் வடியும்போது, அதோடு ரத்தம் வரலாம். வயதானவர்களுக்கு ஆர்டிரியோஸ்க்ளெரோசிஸ் (Arteriosclerosis) பிரச்னையால் மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகும். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு, உடலில் தேவைக்கதிகமான கொழுப்பு இருக்கும். அது ரத்த நாளங்களை அடைத்துக்கொண்டு, அவற்றைச் சுருங்கவிடாமல் தடுக்கும். இதனால் ரத்தம் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும்.

இதயம், பக்கவாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரத்த நாளங்கள் சுருங்காமல் இருக்கவும், அவற்றில் ரத்த ஓட்டம் நிற்காமல் இருக்கவும் க்லோபிடோக்ரெல் (Clopidogrel), ஆஸ்பிரின் (Aspirin), டைபைரிடமோல் (Dipyridamole) போன்ற மருந்துகளைக் கொடுப்பார்கள். இவற்றாலும் மூக்கில் ரத்தக்கசிவு ஏற்படுவது உண்டு.

தடுக்க சில வழிகள்...மருத்துவர் சங்கர்

ரத்தக்கசிவை நிறுத்த குளிர்ந்தக் காற்றை சுவாசிக்கலாம். நான்கு அல்லது ஐந்து சிறிய ஐஸ் கட்டித் துண்டுகளை ஒரு சுத்தமானத் துணியிலோ, கர்சீஃபிலோ சுற்றி, மூக்குநுனியில் வைக்கலாம்; அதனால் கிடைக்கும் குளிர்ச்சியால் ரத்தம் நின்றுவிடும். மூக்கைச் சுற்றி ஆன்டிபயாடிக் ஆயின்மென்ட்டுகளைத் தடவலாம். இந்த மருந்துகளை மூக்கிற்குள் தடவினால், நுரையீரலுக்குள் போய் `நிமோனியா’வை ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு. எனவே, மூக்கிற்குள் தடவவேண்டியிருந்தால், மருத்துவர்களை அணுகி, அவர்களின் ஆலோசனையோடு அதைச் செய்ய வேண்டும்.

தனியாக இருக்கும்போது மூக்கில் ரத்தம் வந்தால், உடனே தலையைக் குனிந்துகொள்ள வேண்டும். ரத்தம் வரும் மூக்குத் துளையில் காற்றுப் போகாமல் விரலால் அழுத்திப் பிடித்துக்கொண்டு, மற்றொரு துளையின் வழியே சுவாசிக்க வேண்டும். இப்படி ஐந்து நிமிடங்களுக்குத் தொடர்ந்து செய்தால், ரத்தக்கசிவு நின்றுவிடும். மருத்துவத்தில் இதை `டிராட்டர்ஸ் முறை’ (Trotter's method) என்று அழைப்பார்கள்.. இது, ரத்தம் ஒழுகுவதைத் தடுக்கும் முதல்கட்ட நடவடிக்கை மட்டுமே. அதற்காக, ரத்தம் நின்றுவிட்டதே என்று மருத்துவரிடம் செல்லாமல் இருப்பது தவறு. உடனடியாக காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் சென்று உரிய ஆலோசனை பெற வேண்டும். மருத்துவர், `எண்டோஸ்கோபி முறை’ சோதனையில் காரணத்தைக் கண்டுபிடித்து, உரிய சிகிச்சையளிப்பார்கள்.

தீர்வுகள்...

`மூக்கில் ரத்தம் வந்தால் உடனடியாகச் சொல்ல வேண்டும்’ என்பதை குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் கற்றுத்தர வேண்டும். முடிந்தவரை மூக்கைத் தொடாமலும் நோண்டாமலும் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டால், மூக்கிலிருந்து ரத்தம் வடிவதைத் தவிர்க்கலாம். கோடையில் மூக்கில் ரத்தம் வருவதற்கு முக்கியக் காரணம், உடல்சூடுதான். எனவே, தேவையான அளவுக்கு தினமும் தண்ணீர் குடிக்க வேண்டும்; அவசியமில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்த்தாலே இந்தப் பிரச்னையைத் தவிர்த்துவிடலாம்” என்கிறார் மருத்துவர் சங்கர்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement