சாவித்திரிக்கு `ஷங்கரய்யா’, கமலாதாஸுக்கு `கிருஷ்ணா’... கற்பனைக் கதாபாத்திரங்களின் மேல் ஈர்ப்பு ஏன்? | Sangaraiya for savithri, krishna for kamaladoss - Reason behind the belief in imaginary characters

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (17/05/2018)

கடைசி தொடர்பு:12:25 (17/05/2018)

சாவித்திரிக்கு `ஷங்கரய்யா’, கமலாதாஸுக்கு `கிருஷ்ணா’... கற்பனைக் கதாபாத்திரங்களின் மேல் ஈர்ப்பு ஏன்?

கற்பனை கதாபாத்திரங்களின் மேல் ஈர்ப்பு ஏற்படுவது ஒருவகை டிஸ்ஆர்டரா?

சாவித்திரிக்கு `ஷங்கரய்யா’, கமலாதாஸுக்கு `கிருஷ்ணா’... கற்பனைக் கதாபாத்திரங்களின் மேல் ஈர்ப்பு ஏன்?

உன் உடல்தான் என்னுடைய சிறை, கிருஷ்ணா

அதற்கு அப்பால் என்னால் பார்க்கவே முடியவில்லை

உன்னுடைய இருண்மை என்னைக் குருடாக்குகிறது

இந்தப் பரந்த உலகின் பேரிரைச்சலையெல்லாம்,

வெளித்தள்ளுவதாக இருக்கின்றன

உன் காதல் வார்த்தைகள்!

கமலாதாஸ்

பிரபல மலையாள எழுத்தாளர் கமலாதாஸ் எழுதிய கவிதை இது. இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கிருஷ்ணா, ஒரு கற்பனைக் கதாபாத்திரம். கற்பனைக் கதாபாத்திரங்களை நினைத்துக் கவிதை எழுதுவது வழக்கமான ஒன்றுதான். எழுத்தாளர் கமலாதாஸோ அந்தக் கதாபாத்திரத்துடன் பல உரையாடல்களையும் நிகழ்த்துவார். தன் நம்பிக்கைக்குரிய மீட்பராகவே நினைத்து அதனுடன் கவிதையில் வாழ்ந்து பார்ப்பார். இஸ்லாம் மதத்துக்கு மாறிய பின்னரும்கூட கிருஷ்ணனின் மீது அவருக்கு அன்பு தீராமலேயேதான் இருந்தது. அவரின் வாழ்க்கையை மையமாகவைத்து எடுக்கப்பட்ட `ஆமி' (Aami) என்னும் மலையாளத் திரைப்படத்தில் இது தெளிவாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.

கமலாதாஸ் மலையாளம், ஆங்கிலம் இரு மொழிகளிலும் ஏராளமானச் சிறுகதைகளை எழுதியிருப்பவர். 'எண்ட கதா' (My Story) என்ற பெயரில் தன் சுயசரிதையையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். பதினைந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அந்த நூல், பலத்த வரவேற்பைப் பெற்றது. சாகித்திய அகாடமி விருதையும் வென்றிருக்கிறார் கமலாதாஸ்.

நடிகை சாவித்திரி, ஒருகாலத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்... எனப் பல மொழி ரசிகர்களின் மனங்களைக் கொள்ளைகொண்டவர். அண்மையில், அவருடைய வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு வெளியாகியிருக்கும் திரைப்படம் `மஹாநடி' (Mahanati). இது தமிழில், `நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வெளிவந்து, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் `ஷங்கரய்யா’ என்கிற கடவுளுடன் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருப்பார் நடிகை சாவித்திரி. தனக்கு அணிவிக்கப்பட்ட மாலையை அந்த சாமி சிலைக்கு அணிவித்து அழகு பார்ப்பார். தன் சுக, துக்கங்களைப் பகிர்ந்துகொண்டு, தன் தந்தையின் வடிவமாகவே அந்தச் சிலையை நினைப்பார்.

கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக

``மனிதர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு இது போன்று கற்பனைக் கதாபாத்திரங்களின் மீது நம்பிக்கை ஏற்படுவது ஏன்?’’ - உளவியல் ஆலோசகர் ஜெயமேரியிடம் கேட்டோம்ஜெயமேரி

``இதில் ஆண், பெண் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. நம்மோடு வாழ்ந்த ஒருவர், திடீரென்று இல்லாமல் போனால், அது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தும். எப்போதும் அவர்களைப் பற்றிய சிந்தனையாகவே இருக்கும். இதேநிலை தொடர்ந்தால், அது மன அழுத்தமாக மாறும். அதனால் மற்றவர்களுக்கோ, தொடர்புடையவர்களுக்கோ ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அதனை `டிஸ்ஆர்டர்' என்று சொல்லலாம்.

கமலதாஸைப் பொறுத்தவரை, அவர் சிறுவயதிலிருந்தே கிருஷ்ணனைப் பற்றி ஏராளமான கதைகளைக் கேட்டு வளர்ந்தவர். அதன் காரணமாக அந்தத் தோற்றத்தின் மீது, அந்தக் கதாபாத்திரத்தின் மீது ஓர் ஆத்மார்த்தமான நம்பிக்கை பிறந்து, அதன் மீது ஒரு பிணைப்பு ஏற்பட்டிருக்கலாம். அதனால், அதன் மீது அதிகமான அன்பு ஏற்பட்டு, அந்தக் கதாபாத்திரத்தோடு ஐக்கியமாகிவிட்ட நிலை அவருக்கு உண்டாகியிருக்கிறது.

கீர்த்தி சுரேஷ்

அதேபோல, சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர் சாவித்திரி. அவரின் தந்தையைப் பற்றி, அவரின் தாய் மிகச்சிறப்பாக எடுத்துச் சொல்லியிருக்கலாம். கற்பனையாக, கம்பீரமாக, நல்லவிதமாக அவர் குறித்த பிம்பம் மனதில் பதிவாகியிருக்கலாம். அதன் காரணமாகவே அதே தோற்றம் கொண்ட சிலையின் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதைத் தன் தந்தையாகவே நினைக்கத் தோன்றியிருக்கிறது. அந்தச் சிலையிடம், தன் சுக துக்கங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அதைத் தன் அப்பாவாகவே நினைத்து வாழ்ந்திருக்கிறார். இதுதான் இவர்கள் இரண்டு பேரின் வாழ்க்கையிலும் தொடர்ந்திருக்கிறது. மேற்கண்ட இரண்டும் நம்பிக்கை சார்ந்த செயல்பாடுகள். அதனால் அவர்களுக்கோ, மற்றவர்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லாதநிலையில் அதை நாம் `டிஸ்ஆர்டர்’ என்று சொல்ல முடியாது.

இது போன்ற கற்பனையான பல நம்பிக்கைகள் பலருக்கும் இருக்கின்றன. இது தவறில்லை. ஆனால், இதன் காரணமாக, சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், மற்றவர்களைப் பாதிக்கும்படி அவர்களின் செயல்பாடுகள் இருந்தால், தயங்காமல் அவர்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றுவிடுவது நல்லது’’ என்கிறார் ஜெயமேரி.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close