மைக்ரோவேவ் அவன்... எப்படிப் பயன்படுத்தலாம், எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? #MicrowaveOvenTips

சாதத்தைத் தவிர வேறு எந்த உணவும் சூடுபடுத்தி சாப்பிட ஏற்றதல்ல.

மைக்ரோவேவ் அவன்... எப்படிப் பயன்படுத்தலாம், எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? #MicrowaveOvenTips

ன்றைக்குச் சமையல் எளிதாகிவிட்டதற்குக் காரணம், நவீனத் தொழில்நுட்பத்துடன்கூடிய வீட்டு உபயோகப் பொருள்களின் பயன்பாடுதான். ஃப்ரிட்ஜ், மிக்ஸி போன்றவற்றைப் பயன்படுத்துவது இன்றைக்குத் தவிர்க்க முடியாததாகிவிட்டது. இவற்றோடு நம் வீடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது `மைக்ரோவேவ் அவன். (Microwave Oven)’. அதே நேரத்தில், மைக்ரோவேவ் அவன், உடலுக்குக் கேடு விளைவிக்கும்; அதனால் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படலாம்; கதிர்வீச்சு அபாயம் இருக்கிறது... போன்ற எதிர்மறைக் கருத்துகளும் நிலவுகின்றன. உண்மையில், மைக்ரோவேவ் அவன்’ நல்லதா கெட்டதா... அதை எப்படி உபயோகப்படுத்தலாம்... எதற்கெல்லாம் உபயோகப்படுத்தலாம்... என்பதையெல்லாம் விளக்கமாகக் கூறுகிறார் பொது மருத்துவர் தேவராஜன்.

மைக்ரோவேவ் அவன்

மைக்ரோவேவ் அவன் எப்படிச் செயல்படுகிறது?

``மைக்ரோவேவ் அவன் செயல்படுவதற்கு அடிப்படையே, அதிலிருந்து வெளிப்படும் `மைக்ரோவேவ் அலை’ எனப்படும் ஒருவகை மின் காந்த அலைகள்தாம். பொதுவாக மின் காந்த அலைகள், டி.வி., ரேடியோ போன்றவற்றின் ஒலி, ஒளிபரப்புக்காகவும், டெலிகம்யூனிகேஷனுக்காகவும் (மொபைல்போன்) பயன்படுத்தப்படுபவை. `அவனில்’ இருக்கும் மேக்னெட்ரான் (Magnetron) எனப்படும் எலெக்ட்ரானிக் ட்யூப்தான், மைக்ரோவேவ் அலைகளை உற்பத்தி செய்கிறது. அவை, உணவின் நீர்ச்சத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும். இந்த அலைகள் காரணமாக உணவிலுள்ள மூலக்கூறுகள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளும். இந்த நேரத்தில் ஏற்படும் வெப்பம்தான், உணவு முழுமையாகச் சமைக்கப்படுவதற்கு முக்கியக் காரணம்.

மைக்ரோவேவ் அவன் - தெரிந்துக்கொள்ள வேண்டியவை...

மைக்ரோவ் அவனில் சமைக்கும்போது ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் காரணமாக, உடலில் பாதிப்புகள் ஏற்படும் என ஒரு நம்பிக்கை இருக்கிறது. உண்மையில், இதில் ஏற்படும் மைக்ரோவேவ் அலைகள், உணவின் வேதியியல் அமைப்பை எந்தச் சூழலிலும் மாற்றாது. அதேபோல காமா அலை, எக்ஸ் ரேய்ஸ் (X-Rays) போன்ற வேறு அலைகளும்கூட உருவாகாது.தேவராஜன் பொது மருத்துவர்

மைக்ரோவேவ் அவன் `ஆன்' செய்யப்பட்டிருக்கும்போது, அது மூடப்பட்டிருந்தாலும், மைக்ரோவேவ் அலைகள் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கும். `அவனை’ச் சரியாகப் பராமரிக்கவில்லையென்றால், அவை கசியும். எனவே சமைக்கும் பொருளை உள்ளே வைக்கும்போதும், வெளியே எடுக்கும்போதும் `அவன்’ அணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ளவும். 

உணவு சமைக்கும்போது ரேடியேஷன் வெளியே வந்துகொண்டிருக்கும். அவை சருமத்தில் பட்டால், சரும பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, `அவன்' செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது, அதனருகில் இருக்க வேண்டாம். முடிந்தவரை சற்றுத் தள்ளியே இருக்கவும்.

சமையலின்போதும், சமையலை முடித்த பிறகும், சிலர் குனிந்து கையால் உள்ளிருக்கும் பாத்திரத்தை வெளியே எடுப்பார்கள். அந்தச் சமயத்தில் வெளியேறும் கதிர்கள், சருமத்தைப் பாதிக்கக்கூடும். குனிந்து எடுக்கும்போது முகத்தில் அவை பட்டால், கண் பாதிப்புக்கூட ஏற்படலாம். எனவே, பக்கவாட்டில் நின்று கிளவுஸ் அணிந்து மைக்ரோவேவ் அவனை ஆபரேட் செய்யவும்.

அவன்

முறையாகப் பராமரிக்கப்படாத அல்லது சேதமடைந்த மைக்ரோவேவ் அவன், சமைத்து முடித்த பிறகும் மைக்ரோவேவ் அலைகளை உற்பத்தி செய்துகொண்டிருக்கும். எனவே, அவனைச் சரியாகப் பராமரிக்கவேண்டியது அவசியம். இதில் சமைக்கும்போது, அதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கும், பிரத்யேகப் பொருள்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். 

உள்ளே வைத்திருக்கும் உணவை, குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே திறக்கக் கூடாது. தவிர்க்க முடியாத பட்சத்தில் (சிலர் எதையாவது கிண்டுவார்கள், மேலே அலங்கரிப்பார்கள்... இப்படி) பாதுகாப்பான உபகரணங்களைக் கொண்டு வேலை செய்யவும். குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னர், உள்ளிருக்கும் உணவை எடுத்துவிட்டு, மேலும் ஐந்து நிமிட இடைவெளிவிட்டு உணவைச் சாப்பிடவும்.

சில நேரங்களில், திடமான உணவுப் பொருள்களை வைத்தால், அவை முழுமையாக வேகாமல் போக நேரிடலாம். மிருதுவான அல்லது எளிதில் வேகும் உணவுகளை மட்டும் மைக்ரோவேவ் அவனில் சமைக்கவும். உதாரணமாக, முட்டை, மீன், காய்கறிகள் போன்றவை. முட்டையை ஓட்டுடன் உள்ளே வைக்கக் கூடாது.

பழைய உணவைச் சூடுபடுத்தி மீண்டும் உபயோகிக்க நினைப்பவர்கள், மைக்ரோவேவ் அவனைத் தவிர்த்துவிடலாம்.’’

`மைக்ரோவேவ் அவனில் சமைத்தால், உணவிலுள்ள ஊட்டச்சத்துகள் குறைந்துவிடும்’ எனச் சிலர் பயப்படுவதுண்டு. இது குறித்துஊட்டச்சத்து நிபுணர் கற்பகம் ஊட்டச்சத்து நிபுணர் கற்பகத்திடம் பேசினோம்... ``பொதுவாகவே காய்கறிகளைச் சமைக்கும்போது அதிலுள்ள சில ஊட்டச்சத்துகள் குறையத்தான் செய்யும். பச்சையான காய்கறிகளின் சத்து, எந்தச் சமைத்த காய்கறியிலும் இருப்பதில்லை. அப்படித்தான் மைக்ரோவ் அவனும். அதன் மைக்ரோவேவ் அலை காரணமாக, வைட்டமின் சத்துகள் குறையத் தொடங்கும். அதே நேரத்தில், இதன் காரணமாக உடலுக்கு எந்த ஊட்டச்சத்துப் பாதிப்பும் ஏற்படாது. 

சில உணவுகளைச் சூடுபடுத்தி உண்பதற்காகப் பலரும் மைக்ரோவேவ் அவன் உபயோகிப்பதைப் பார்க்க முடிகிறது. அப்படிச் செய்வது தவறு. சாதத்தைத் தவிர வேறு எந்த உணவும் சூடுபடுத்திச் சாப்பிட ஏற்றதல்ல. ஆக, முறையான பராமரிப்பு இருந்தால், `மைக்ரோவேவ் அவனும்' மற்ற அடுப்புகளைப் போன்றதுதான்’’ என்றார் கற்பகம்.

மைக்ரோவேவ் அவனை முறையாகப் பராமரிப்பது எப்படி? - விளக்குகிறார் ஹெல்த் ஹைஜீனிக் எக்ஸ்பர்ட் சுசி...

`` மைக்ரோவேவ் அவனில், அதற்கெனத் தரப்படும் பிரத்யேகப் பொருள்களை மட்டும்தான் உபயோகப்படுத்த வேண்டும். குறிப்பாக, கண்ணாடி மற்றும் போரோசில் (Borosil) பாத்திரங்கள்.  அவற்றை கையாளுவதற்கு பயந்துகொண்டு, சிலர் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவார்கள். அப்படிப்பட்டவர்கள், மண்ணால் செய்த பொருள்களை அவன் சமையலுக்குப் பயன்படுத்தலாம். (மைக்ரோ மோடுக்கு மட்டும்). பிளாஸ்டிக் வகைகளை மட்டும் முற்றிலுமாகத் தவிர்க்கவும். 

மண் பானை சாதம்

* அவனைச் சுத்தப்படுத்தும் முறை: ஒரு கப்பில் தண்ணீரை எடுத்துக்கொண்டு, வினீகர் மற்றும் எலுமிச்சையை அதில் பிழிந்துவிட்டுக்கொள்ளவும். அதை, மைக்ரோ-மோடில் அவனின் உள்ளே அரைமணி நேரம் வைத்துவிடவும். அந்த நீரிலிருந்து வெளிவரும் ஆவி, அவன் முழுவதும் பரவி, உள்ளே படிந்திருக்கும் கிருமிகள், துர்நாற்றம், அழுக்குகள், எண்ணெய்ப் பிசுக்குகள் அனைத்தையும் வெளிக்கொணர்ந்துவிடும். அரை மணி நேரத்துக்குப் பிறகு, அவனை ஆஃப் செய்துவிட்டு தண்ணீரைத் தொட்டு, துணிவைத்துத் துடைக்கவும். படிந்திருக்கும் எண்ணெய்ப் பிசுக்குளை நீக்குவதற்கு, ஸ்க்ரப்பர் பயன்படுத்தவும்.

* அதிக வெப்பநிலையில் அவன் இருக்கும்போது (பேக்கரி பொருள்கள்), நேரம் முடிந்தவுடன் அப்படியே ஆஃப் செய்துவிட வேண்டாம். நேரம் முடிந்தவுடன் `எக்ஹாஸ்ட் ஃபேனை (Exhaust Fan) ஆன் செய்து, உள்ளேயிருக்கும் வெப்பம் வெளியேறிய பின்னர் அவனை ஆஃப் செய்யவும். இல்லாவிட்டால், உள்ளேயிருக்கும் வெப்பம் அப்படியே இருந்துவிடும். இது தொடர்ந்தால், குறிப்பிட்ட நாள்களுக்குப் பின்னர் அவனின் மற்ற பகுதிகளில் பாதிப்பு ஏற்படக்கூடும்.

* கிரில்லிங் (Grilling) மற்றும் பேக்கிங் (Baking) இரண்டு வகையில் சமைக்கும்போதும், கைகளில் கண்டிப்பாக கிளவுஸ் அணிந்திருக்க வேண்டும். மைக்ரோ-மோடு போன்ற குறைவான வெப்பத்தில் வைத்துச் சமைக்கும்போது, கிளவுஸ் அணிந்திருக்க அவசியமில்லை.

அவன்

* `மைக்ரோவேவ் அவன் உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்’ என்றெல்லாம் பல்வேறுவிதமான பயங்கள் மக்களிடேயே இருக்கின்றன. தரமாகத் தயாரிக்கப்படும் அவன்களால் எந்தக் கதிர்வீச்சுப் பிரச்னைகளும் நோய்களும் வருவதில்லை. மைக்ரோவேவ் அவன் வாங்குபவர்கள் விலையை மட்டுமல்ல, அதன் தரத்தையையும் பார்க்க வேண்டும். சமைக்கப் பயன்படுத்தும் பொருள்களும் தரமானதாக இருக்க வேண்டும்.’’

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!