வெளியாகியிருக்கும் ஜெயலலிதாவின் உணவுப் பட்டியல் ஆரோக்கியமானதுதானா...? - மருத்துவம் என்ன சொல்கிறது?

ஜெயலலிதா சாப்பிட்ட உணவுகள் அவரது நோயைத் தீவிரப்படுத்தியதா? என்ன சொல்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்? 

வெளியாகியிருக்கும் ஜெயலலிதாவின் உணவுப் பட்டியல் ஆரோக்கியமானதுதானா...? - மருத்துவம் என்ன சொல்கிறது?

அதிகாலை 5:05 மணி முதல் 5:35 மணிக்குள் காலை உணவாக 1 1/2 இட்லி, 4 துண்டுகள் பிரெட், 400 மி.லி காபி, இளநீர்.

அதிகாலை 5:45 மணிக்கு 200 மி.லி கிரீன் டீ.

காலை 8:55 மணிக்கு ஓர் ஆப்பிள் பழம்.

காலை 9:40 மணிக்கு 120 மி.லி காபி, 5 பிஸ்கட். 

காலை 11:35 மணிக்கு ஒரு கப் பாசுமதி சாதம். 

பிற்பகல் 2 மணி முதல் 2:35 மணிக்குள் மதிய உணவாக, 1 1/2 கப் பாசுமதி சாதம், ஒரு கப் யோகர்ட், அரை கப் கிர்ணிப்பழம் .

மாலை 6:30 மணி முதல் 7:15-க்குள் இரவு உணவாக, 1/2 கப் வால்நட் உள்பட உலர் பழவகைகள், ஒரு கப் இட்லி உப்புமா, ஒரு

தோசை, 2 துண்டுகள் பிரெட், 200 மி.லி பால்.’ - 2016 -ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பின்பற்றிய உணவுப் பட்டியல்தான் இது.

ஜெயலலிதா

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்திவருகிறது. இந்த விசாரணை ஆணையத்தில் குடும்ப டாக்டரும் சசிகலாவின் உறவினருமான சிவக்குமார், ஜெயலலிதா தன் கைப்பட எழுதிய இந்த உணவுப் பட்டியலைத் தாக்கல் செய்திருக்கிறார். ஆகஸ்டு 2, 2016 தேதியிடப்பட்ட அந்தப் பட்டியலில் ஜெயலலிதா, காலை முதல் இரவு வரை என்னென்ன உணவு உட்கொள்ள வேண்டும், அவரது எடை, சாப்பிடவேண்டிய மாத்திரைகள் உள்ளிட்ட விவரங்களை எழுதி வைத்திருக்கிறார். இது இப்போது வெளியாகியிருக்கிறது. 

பல ஆண்டுகளாக சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு இந்த உணவுப் பட்டியல் சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்க எந்த வகையில் உதவியிருக்கும் என்று மூத்த உணவியல் நிபுணர் ஒருவரிடம்  கேட்டோம்.  

``இந்தப் பட்டியலின் மூலம் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே, மூன்று மாதங்களாக உணவுக் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. இதில் சிலவற்றைத் தவிர, மற்றவை சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் உணவுகளாகத்தான் இருக்கின்றன. குறிப்பாக, பாஸ்மதி அரிசியில் அதிக நார்ச்சத்து இருக்கிறது. மேலும் இது ரத்தத்தில் எளிதில் சர்க்கரை அளவை உயர்த்தாத கிளைசெமிக் வகை (Glycemic index) உணவைச் சேர்ந்தது. எனவே, இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றதுதான். 

ஆப்பிளில் கார்போஹைட்ரேட்டின் அளவு குறைவாக இருப்பதால், சர்க்கரைநோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்.
உணவுப் பட்டியலில், பிஸ்கட்டுகள் இடம்பெற்றுள்ளன. உப்பு அல்லது இனிப்பு என எந்த வகையானதாக இருந்தாலும் பிஸ்கட் நல்லதல்ல. இதைத் தவிர்த்திருக்க வேண்டும். பிரெட் என்பது, மைதாவால் ஆன வெள்ளைநிற பிரெட்டா, கோதுமையால் செய்யப்பட்ட பிரெளன் பிரெட்டா என்று குறிப்பிடப்படவில்லை. கோதுமை பிரெட்டாக இருந்தால், அது சர்க்கரை நோயாளிக்குச் சிறந்த உணவுதான். மைதா பிரெட் என்றால் அது ஆபத்து.  

உணவுப்பட்டியல்

அதிகாலையில் அவருக்கிருந்த சர்க்கரையின் அளவை முறையே 175 மற்றும் 190 ஆகப் பதிவு செய்திருக்கிறார். இது சர்க்கரைநோயின் தீவிர நிலை.

பொதுவாக இந்த அளவு சர்க்கரை இருக்கும்போது, சர்க்கரை சேர்த்த டீ, காபியைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். காபியின் அளவு அதிகமாக இருந்தாலும், அதில் சர்க்கரை சேர்க்கப்படாமல் இருந்திருந்தால் அது பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது. 
அதேபோல, உடல் எடை 100 கிலோவுக்கு அதிகமாக இருப்பதால், கொழுப்பு நீக்கப்பட்ட தயிரான யோகர்ட் சிறந்த உணவுதான். ஆனால், பாலைத் தவிர்த்திருக்க வேண்டும்’’ என்கிறார் அவர்.

செப்டம்பர் 27-ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது ஜெயலலிதா பேசிய ஆடியோவையும், சிவக்குமார், ஆறுமுகசாமி ஆணையத்திடம் அளித்திருக்கிறார். அந்த ஆடியோவும் வெளியாகி இருந்தது. 

ஜெயலலிதா மூச்சுத்திணறலை உணர்ந்தது குறித்து, இருமலுடன் அவர் பேசியதாகப் பதிவாகியிருக்கும் அந்த ஆடியோவில் வரும் உரையாடல்களில், தனக்கு ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கிறது என்று கேட்க, `ரத்த அழுத்தம் 140/80- ஆக இருக்கிறது’ என்கிறார்  அவரைப் பரிசோதித்த மருத்துவர். இதன்மூலம் அவருக்குச் சிகிச்சையின் போதும் உயர் ரத்த அழுத்தம் இருந்தது உறுதியாகிறது. அவருக்குக் கொடுக்கப்பட்ட உணவுகளால் ரத்த அழுத்தம் அதிகரித்திருக்குமா? 

``காபி, டீக்கு பதிலாக பழச்சாறு, லெமன் டீ, கிரீன் டீ குடிக்கலாம். இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். அந்த உணவுப் பட்டியலில் இளநீர் இடம்பெற்றிருக்கிறது. இதில் பொட்டாசியம் இருப்பதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். ரத்தத்தில் சர்க்கரை அளவையும் உடனடியாக அதிகரிக்காது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள்  இளநீர் குடிப்பது நல்லதுதான். ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இளநீர் குடிப்பது நல்லதல்ல. உடல்நிலையையும் சர்க்கரையின் அளவையும் பொறுத்து மருத்துவர் அதை பரிந்துரைப்பார். 

ஜெயலலிதா

அதிக ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு, உணவில் பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் ஆகிய தனிமங்கள் அதிக அளவிலும், கொழுப்பு குறைவான அளவிலும் இருக்க வேண்டும். பொதுவாகப் பல்வேறு காய்கறிகளையும் பழங்களையும் உணவில் சேர்த்துக்கொண்டாலே இவை கிடைத்துவிடும். இந்த உணவுப் பட்டியல் ஆரோக்கியமானதாக இருந்தாலும், உணவியல் நிபுணரின் ஆலோசனையின்படி, அவரவர் உடல் எடை, உடலுழைப்பு, வயதுக்கேற்ப உணவு முறையை அமைத்துக்கொள்வதே சிறந்தது’’ என்கிறார் அந்த உணவியல் நிபுணர்

``தற்போது வெளியாகியுள்ள பட்டியலில் `ஜனூவியா’ (Januvia), `மிக்நார்’ (Mignar) போன்ற மாத்திரைகள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவை, சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்காகக் கொடுக்கப்படும். எனவே, அவருக்குச் சர்க்கரை நோய் இருந்தது உறுதியாகிறது. ஆனால், இந்த உணவுப் பட்டியலில் உள்ள  பிரெட், பிஸ்கட் போன்ற உணவுகள் சர்க்கரைநோயாளிகளுக்கும், சிறுநீரக நோயாளிகளுக்கும் ஏற்றதல்ல. இதில் உள்ள க்ரீம் பிஸ்கட்டுகள்  கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டியவை.  

அதேபோல, காபி மற்றும் கிரீன் டீ ஆகியவை டீஹைட்ரேஷனை உண்டாக்கும். இட்லி, பாஸ்மதி அரிசி சாதம் ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்கு குழம்பாகவோ, சட்னியாகவோ எதையெல்லாம் கொடுத்தார்கள் என்று குறிப்பிடப்படவில்லை. பாஸ்மதி அரிசியில் நார்ச்சத்து இருந்தாலும், அதை பட்டை தீட்டியிருந்தால் (ரீஃபைண்ட் செய்யப்பட்டிருந்தால்) அதுவும் சர்க்கரை நோயாளிகளுக்குப் பிரச்னையை உண்டாக்கலாம். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, சில நாள்களுக்கு இந்த உணவுப் பட்டியலின்படி சாப்பிட்டிருந்தால், இவை பெரிய அளவில் பிரச்னையை ஏற்படுத்தாது. இதுவே, தினசரி சாப்பிடும் பட்டியலாக இருந்தால் நிச்சயம் சிறுநீரகத்தைப் பாதிக்கும்’’ என்கிறார் மற்றோர் உணவியல் நிபுணர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!