'10-ல் 9 பேர் மாசுபட்ட காற்றைச் சுவாசிக்கிறார்கள்!’ - எச்சரிக்கும் ஆய்வறிக்கை #WorldEnvironmentDay #DataStory

'10-ல் 9 பேர் மாசுபட்ட காற்றைச் சுவாசிக்கிறார்கள்!’ - எச்சரிக்கும் ஆய்வறிக்கை  #WorldEnvironmentDay #DataStory

ருவருக்குப் பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் அளிப்பது வீடு. அந்த வீட்டைத் தாங்கிப் பிடிப்பவை தூண்கள் அல்ல; பெண்களே! ஒருநாளின் பெரும்பகுதியைச் சமையலறைக்குள்ளேயே முடித்துக்கொள்ளும் `அன்ன’ தெரஸாக்கள் அவர்கள். அவர்களைத்தான் அதிகம் குறிவைக்கிறது `நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்’. சுத்தமான எரிவாயு கிடைக்காத, ஏழை தாய்மார்கள்தாம் அந்த நோயின் இலக்கு. காற்று மாசுபாட்டால் அதிகம் பேர் பாதிக்கப்படும் நோய்ப் பட்டியலிலும் இதுதான் முதலிடத்தில் நிற்கிறது.

காற்று மாசு

`இதுவரை சுமார் 38 லட்சம் மக்களைக் காவு வாங்கியிருக்கிறது, காற்று மாசுபாடு. அதற்குக் காரணம், உலக மக்கள்தொகையில் 300 கோடி வீடுகளில் சுத்தமான எரிவாயு இல்லாததே’ என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். `உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிப்படைவது பெண்கள், குழந்தைகள்தாம்’ என்று அதிர்ச்சி ஸ்டேட்மென்ட் அளிக்கிறார் அதன் தலைவரான, மருத்துவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியீசஸ் (Tedros Adhanom Ghebreyesus).  

காற்று மாசுபாட்டால் ஏற்படும் நோய்கள், அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து, நுரையீரல் நிபுணர், மருத்துவர் மகிழ்மாறனிடம் பேசினோம்.

"ஒரு மைக்ரோ மீட்டருக்கும் குறைவான நுண் துகள்களைச் சுவாசிப்பதே, காற்று மாசுபாட்டால் ஏற்படும் நோய்களுக்கு முக்கியக் காரணம். காற்றிலுள்ள ரேடான் (Radon), நேனோ பார்டிகல்ஸ், பி.ஓ.சி (Particulate Organic Compound), வி.ஓ.சி (Volatile Organic Compounds),ஓசோன், நைட்ரோஜென் டை ஆக்ஸைடு (NO2), சல்ஃபர் டை ஆக்ஸைடு (SO2) உள்ளிட்ட வாயுக்களின் பாதிப்பால்தான், எம்பைசீமா (Emphysema), ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் புற்றுநோய் போன்றவை ஏற்படுகின்றன.

வீட்டில் விறகு, கரி போன்றவற்றை எரிப்பதால்தான் `நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்’ ஏற்படுகிறது. இதனால், பெண்களும் குழந்தைகளுமே அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். ஆண்களுக்கு இதனால் பாதிப்பு குறைவு. ஆனாலும், ஒவ்வொருவரின் வேலையைப் பொறுத்து, நோயின் தாக்கம் மாறுபடும். பெரும்பாலும், 50 வயதுக்கு மேலிருக்கும் பெண்களையே இது பாதிக்கும். இவையெல்லாம் உட்புறக் காற்று மாசுபாட்டால் ஏற்படக்கூடியவை. வெளிப்புறக் காற்று மாசுபாட்டால், புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள்கூட பிறர்விடும் சிகரெட் புகையால் பாதிக்கப்படுகிறார்கள்.

'வாகனங்கள் வெளியிடும் கடும் புகையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, முகத்தை மாஸ்க், கர்சீப்பால் மூடிக்கொண்டால் போதும்’ என்று பலரும் நினைப்பது சரியான தீர்வு அல்ல. மாஸ்க், நாம் வெளியிடும் காற்றைத்தான் சுத்தப்படுத்துமே தவிர, சுவாசிக்கும் காற்றை அல்ல. காற்று மாசுபாட்டைத் தவிர்க்க, ரெஸ்பிரேட்டர் (Respirator) என்கிற கருவியைப் பயன்படுத்தலாம். இதன் விலை சற்று அதிகம் என்பதால், பயன்படுத்துபவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்.

தமிழகத்தில் சுகாதாரமற்ற எரிவாயுவால் ஏற்படும் நோய்கள் இப்போது வெகுவாகக் குறைந்திருக்கின்றன. அதற்குக் காரணம், அனைவருக்கும் இயற்கை எரிவாயுவை மானிய விலையில் கிடைக்க அரசு ஏற்பாடு செய்திருப்பதுதான். நாம் வாழும் இடத்தைப் புகையின்றி வைத்திருப்பதும், புகையில்லா எரிவாயுவைப் பயன்படுத்துவதுமே காற்று மாசுபாட்டால் ஏற்படும் நோய்களிலிருந்து விடுபட சரியான தீர்வாக இருக்கும்” என்கிறார் மருத்துவர் மகிழ்மாறன்.

காற்று மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, உலகச் சுகாதார நிறுவனம் தரும் புள்ளி விவரம் இது...

உலக சுகாதார நிறுவனம் தரும் புள்ளி விவரம்

காற்று மாசுபாட்டால் ஏற்படும் இறப்புகள் 2005-ம் ஆண்டில் 20 லட்சமாக இருந்தது. 2016-ம் ஆண்டில் 70 லட்சமாக உயர்ந்தது. அதே ஆண்டில், சுற்றுப்புறக் காற்று மாசுபாட்டால் 48 லட்சம் பேர் இறந்தார்கள்.

உயிரிழந்த 70 லட்சம் பேரில், இரண்டு லட்சம் பேர், தென் கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 90 % பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள்.

காற்று மாசுபாட்டால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், 24 சதவிகிதம் பேர் இதயநோய்க்கு பலியாகிறார்கள்.

25 சதவிகிதம் பேர் பக்கவாதத்தாலும், நுரையீரல் புற்றுநோயால் 29 சதவிகிதம் பேரும் இறந்திருக்கிறார்கள்.

க்ரானிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்மனரி டிசீஸ் (Chronic obstructive pulmonary disease) எனும் `நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்’ பாதிக்கப்பட்டு 43 காற்று மாசுசதவிகிதம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

உலகில் பத்தில், ஒன்பது பேர் மாசுபட்ட காற்றையே சுவாசிக்கிறார்கள்.

காற்று மாசுபாட்டைக் குறைப்பது எப்படி?

ஆற்றல் மிக்க முறைகளில் மின் உற்பத்தியைப் பெருக்குதல்.

கழிவுப்பொருள் மேலாண்மையை மேம்படுத்துதல்.

கட்டுமானப் பணிகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்தல்.

அதிக வாகனப் பயன்பாட்டைத் தவிர்த்தல்.

சுத்தமான எரிவாயுவைப் பயன்படுத்துதல்.

இந்திய அரசு வெளியிட்டுள்ள, காற்று தரக்குறியீடு பட்டியலைப் பயன்படுத்தி, நம்மைச் சுற்றியிருக்கும் காற்று எந்தளவுக்கு மாசடைந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம். அதற்கேற்றவாறு, தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் இறங்கலாம். வருங்காலச் சந்ததிக்கு, நாம் சுத்தமான காற்றைத் தந்துவிட்டுச் செல்லவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. அதைத்தான் இயற்கையும் நம்மிடம் எதிர்பார்க்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!