நீட் தேர்வு முடிவுகள் சொல்லும் சேதி இதுதான்! - மருத்துவர்கள் கருத்து #NEET

முதல் 50 இடங்களில் தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் மட்டும்... நீட் தேர்வில் பின்னடைவு ஏன்?

நீட் தேர்வு முடிவுகள் சொல்லும் சேதி இதுதான்! - மருத்துவர்கள் கருத்து  #NEET

நீட் தேர்வு முடிவுகளை நேற்று வெளியிட்டது இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பீகாரைச் சேர்ந்த கல்பனா குமாரி என்ற மாணவி 691 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். தேர்வு முடிவுகள் வந்த நேரத்திலிருந்து அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள் தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளர்களும், தேர்வெழுதிய மாணவர்களும். காரணம் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தில் தமிழகத்துக்கு முப்பத்தைந்தாவது இடம். கல்வியில் தமிழ்நாட்டைவிடப் பின் தங்கியிருக்கும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களெல்லாம் அதிகமாகவும் முன்னிலையிலும் இருக்கிறார்கள். முதல் ஐம்பது இடங்களில், டெல்லியைச் சேர்ந்த 8 பேர், குஜராத் மாணவர்கள் 7 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசத்திலிருந்து தலா 4 பேர், ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா, பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் தலா 3 பேர், மத்திய பிரதேசம் 2 பேர், ஒடிசாவிலிருந்து 2 பேர், சண்டிகாரிலிருந்து 2 பேர், தெலங்கானாவிலிருந்து 2 பேர், மேற்கு வங்காளத்திலிருந்து 2 பேர், பீகாரிலும் தமிழ்நாட்டிலிருந்தும் ஒருவர் எனத் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். முதல் ஐம்பது இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரேயொருவர் மட்டும் தேர்வாகியிருப்பது அதிர்ச்சிகரமான செய்தி.

நீட்

நாடு முழுக்க 13,26,725 பேர் நீட் தேர்வெழுதி, 7,14,598 கவுன்சலிங்குக்குச் செல்ல தகுதி பெற்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியவர்கள் 1,14,602 பேர். தேர்ச்சி பெற்றவர்கள் 45,336. தேர்ச்சி சதவிகிதம் 38.83 மட்டுமே. நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், விழுப்புரத்தைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இவர் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 1,125 மதிப்பெண் பெற்றவர். டெல்லியைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.மருத்துவர் பாரதிச்செல்வன்

இந்தத் தேர்வு முடிவுகள் பற்றி மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

``நீட் தேர்வுக்குத் தனிப்பயிற்சி தேவைப்படுவதால்தான் கிராமப்புற, நகர்ப்புற ஏழை மாணவர்களால் அதிகமாகத் தேர்ச்சி பெற முடியவில்லை. நல்ல மதிப்பெண் எடுக்க இயலவில்லை. அரசு நடத்திய பயிற்சி வகுப்புகளும் அவர்களுக்கு உதவியாக இல்லை. தனியார் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்கவும், தகுதி இல்லாதவர்கள் பணம் கொடுத்து மருத்துவக் கல்லூரிகளில் சேருவதைத் தடுக்கவும்தான் இந்தத் தேர்வு கொண்டுவரப்பட்டதாகக் காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால், நடப்பது என்னவென்றால் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள். பணம் இருப்பவர்கள் பணம் கொடுத்து, தனியார் கல்லூரிகளில் சேர்ந்துவிடுவார்கள். பணம் இருந்தால் உயர் கல்வி கற்கலாம்; பணம் இல்லாதவர்கள் கற்க முடியாது என்பதுதான் இதன் மூலம் தெரிய வரும் உண்மை. இதே நிலை தொடர்ந்தால், தமிழக ஏழை மாணவர்களின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிடும்.

தேர்வு முடிவுகள்

பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்ணைவைத்து தேர்வு செய்யும் முறையில்தான், ஏழை மாணவர்களும், வசதி படைத்த மாணவர்களும் ஓரளவு சமநிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள். இப்போது தனிப்பயிற்சிதான் மருத்துவக் கல்விக்கான இடத்தைத் தீர்மானிக்கிறது. அதில் பணமிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் எளிதாகத் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள். கிராம, நகர்ப்புற ஏழை மாணவர்களுக்குத் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினமாக இருக்கிறது.

இப்போதைய நீட் தேர்வு முறையில் நேர்மையும் இல்லை; சமூக நீதியும் இல்லை; தகுதி நிலைநாட்டப்படவில்லை என்பதே உண்மை. ஏற்கெனவே இருந்த நடைமுறைதான் சரியான நடைமுறை. அதையே நடைமுறைப்படுத்த வேண்டும். முதற்கட்டமாக தமிழ்நாட்டுக்குச் சொந்தமான அரசு மருத்துவக் கல்லூரிகளிலாவது இது பின்பற்றப்பட வேண்டும்’’ என்கிறார் மருத்துவர் பாரதிச்செல்வன்.

மருத்துவர் ரவீந்திரநாத்`` நீட் நுழைவுத்தேர்வை மத்திய அரசு திணிப்பது மாநில அரசின் உரிமையில் தலையிடுவது போன்றது. நுழைவுத்தேர்வு தேவை என்றாலும், அதை தமிழ்நாடு அரசுதான் நடத்த வேண்டும். தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்லூரி இடங்களை, தமிழக மாணவர்களைக் கொண்டுதான் நிரப்ப வேண்டும்.

அதே நேரத்தில், இப்போது வெளிவந்திருக்கும் தேர்வு முடிவுகளில் சில விஷயங்கள் தெளிவாகியிருக்கின்றன. தேர்ச்சி சதவிகிதம் குறைவாக இருந்தாலும், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நல்ல மதிப்பெண்ணைப் பெற்றிருக்கிறார்கள். இப்போதிருக்கும் பாடத்திட்டங்களை மேம்படுத்தி, மாணவர்களுக்குச் சிறப்பான பயிற்சி அளித்தால் நம் மாணவர்களும் இன்னும் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். அதனால், தமிழ்நாடு அரசு நீட் பயிற்சி மையங்களை வட்டாரம்தோறும் உருவாக்கி, மாணவர்களுக்குப் பயிற்சியளித்தால் இன்னும் சிறப்பாகச் செயல்படுவார்கள். ஆசிரியர்களுக்கும் பயிற்சியளிக்க வேண்டும். நம் மாணவர்களையும் அகில இந்திய அளவில் நடக்கும் போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்ய வேண்டும். அதற்கு நீட் பயிற்சி மையங்கள் அவசியம்.

தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு நீட் தேர்வு அவசியமில்லை. அதே நேரத்தில், அகில இந்திய அளவில் பல வாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றிலும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நுழைய நீட் பயிற்சி வகுப்புகள் மிக அவசியம்’’ என்கிறார் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!