"என் மகளுக்குக் கிடைத்த வசதிகள், ஏழை மாணவர்களுக்குக் கிடைக்குமா?" நீட் முதலிட மாணவியின் தந்தை #NEET

நீட்... அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் வெறும் 2.9 சதவிகிதம்! - காரணம், என்ன?

டந்த மே மாதம் 6-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகளை நேற்று முன்தினம் வெளியிட்டது இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. தமிழகத்திலிருந்து ஒட்டுமொத்தமாக 1,14,602 பேர் இந்தத் தேர்வை எழுதினார்கள். அவர்களில் 45,336 பேர் தேர்ச்சிபெற்றிருக்கிறார்கள். இவர்களில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த 1,337 பேர் மட்டுமே தேர்ச்சிபெற்றிருக்கிறார்கள். இது தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சிபெற்ற மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் வெறும் 2.9 சதவிகிதம் மட்டுமே. பெரும்பாலும் தனியார்ப் பள்ளிகளில் படித்த மாணவர்களே அதிகமாகத் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட்

தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்காகக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் `தொடுவானம்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுக்க 100 நீட் சிறப்புப் பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டன. முதல்கட்டமாக 20,000 மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது. பின்னர், ஊராட்சிக்கு ஒரு மையம் வீதம் 412 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, 70,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது. பின்னர், மார்ச் மாதம் மாணவர்களுக்குத் தேர்வு தொடங்கியதால், பிப்ரவரி மூன்றாவது வாரத்தோடு பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டன. மாணவர்களுக்குத் தேர்வுகள் அனைத்தும் முடிந்த பின்னர், மீண்டும் ஏப்ரல் 5-ம் தேதிமுதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதற்கு தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 8,233 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் ஏப்ரல் மாதம் 5-ம் தேதி முதல் 20 -ம் தேதி வரை வகுப்புகள் நடத்தப்பட்டன. பின்னர் தேர்வு ஒன்று நடத்தப்பட்டு அதில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்கள் 2,000 பேரைத் தேர்வுசெய்து, அவர்களுக்குத் தங்கும் வசதியுடன்கூடிய எட்டு மையங்களில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

வெளியான நீட் தேர்வு முடிவுகளிலும், மிகக் குறைவான அளவே அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சிபெற்றிருக்கிறார்கள்.

ஏன் இவ்வளவு பின்னடைவு... பயிற்சிகள் போதிய அளவு உதவவில்லையா... அல்லது கடந்த ஆண்டைவிட இது முன்னேற்றம்தானா?

கல்வியாளர்கள், பேராசிரியர்களிடம் பேசினோம்...பேராசிரியர் சிவக்குமார்

``இந்த 1,337 பேரும் தேர்ச்சிபெற்றிருக்கிறார்கள், அவ்வளவுதான். இவர்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருமளவுக்கான மதிப்பெண் பெரும்பாலானோருக்கு இல்லை. மிகக் குறைவான கட் ஆஃப் மட்டுமே பெற்றிருக்கிறார்கள். இவர்களால் பணம் கொடுத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் சேர முடியாது. அதே நேரத்தில், குறைவான கட் ஆஃப் பெற்றிருந்தாலும், வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பணம் கொடுத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துவிடுவார்கள். எனில், அரசு கொடுத்த பயிற்சி எந்தளவுக்கு ஏழை மாணவர்களுக்கு உதவுகிறது என்று புரிந்துகொள்ளலாம். தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்திருக்கும் மாணவி கீர்த்தனாவின் பெற்றோர் மருத்துவர்கள். இரண்டு ஆண்டுகளாக நீட் பயிற்சி எடுத்திருக்கிறார். அதனால்தான் அவரால் முதலிடம் பெற முடிகிறது. அரசுப் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு அந்த வாய்ப்புகள் இல்லை.

நான் சந்தித்த அரசுப் பள்ளி மாணவர்களும் இந்தப் பயிற்சிகள் போதிய அளவுக்குத் தங்களுக்கு உதவவில்லை என்றே கூறினார்கள். நேரடியாக ஆசிரியர்களைவைத்துப் பயிற்சி அளிக்காமல் ஸ்மார்ட் போர்டு, ஆன்லைன் வகுப்புகள் மூலமாகப் பயிற்சியளித்தது மாணவர்களுக்குப் போதிய அளவில் கைகொடுக்கவில்லை என்பதே உண்மை.

தொடுவானம் பயிற்சி

1,337 பேர் தேர்ச்சிபெற்றிருக்கிறார்கள் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்கிறது இந்த அரசு. அவர்களில் எத்தனை பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்கிறார்கள் என்று பார்ப்போம்’’ என்கிறார் ஓய்வுபெற்ற அரசுக் கல்லூரி முதல்வரும், சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவின் முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் சிவக்குமார்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு``தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலிருக்கும் மொத்த இடங்கள் 2,455 . பி.டி.எஸ் 85. இப்போது நாற்பத்தையாயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வாகியுள்ளனர். இவர்களில் அரசு மற்றும் தனியார்க் கல்லூரிகளில் மொத்தம் 6,000 இடங்கள்தாம் இருக்கின்றன. அரசு பயிற்சி கொடுத்துத் தேர்வாகியிருப்பதாகச் சொல்லப்படும் மாணவர்களில் எத்தனை பேர் அதிக மதிப்பெண் எடுத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இவர்களில் எத்தனை பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும்? முதலிடம் பிடித்த மாணவியே இரண்டு வருடங்கள் கடுமையாகப் படித்ததாகப் பேட்டியளித்திருக்கிறார். தனியார் கோச்சிங் சென்டரில் படித்திருக்கிறார். இந்த வாய்ப்பு மற்ற குழந்தைகளுக்குக் கிடைக்குமா? பிறகு எப்படி இது நியாயமான போட்டியாக இருக்க முடியும்? அநியாயமாக நடந்த ஒரு தேர்வில் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்?’’ என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

``1,337 பேரும் அரசு வழங்கிய பயிற்சியில் மட்டும்தான் பயிற்சி பெற்றார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அவர்கள், மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான தகுதியை மட்டுமே பெற்றிருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு மதிப்பெண்  பெற்றிருக்கிறார்கள்.... அந்த மதிப்பெண் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்குத் தகுதியான மதிப்பெண்ணாக இருக்குமா என்பது சந்தேகம்தான்.

மதிப்பெண் பட்டியல்

150, 200 மதிப்பெண் பெற்றிருக்கும் மாணவர்களுக்குக் கண்டிப்பாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைக்காது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர வசதியும் இருக்காது. அதே நேரத்தில் இதே மதிப்பெண் பெற்ற வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், தனியார்க் கல்லூரிகளில் சேர்ந்துவிடுவார்கள். அதுவே மாணவர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துவிடும்.மருத்துவர் காசி

`அரசாங்கம் பயிற்சி வழங்குகிறதே...’ என்று பலர் சொல்கிறார்கள். அரசால் வழங்கப்பட்ட பயிற்சி ஓர் அரைகுறையான பயிற்சி மட்டுமே. அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் 11-ம் வகுப்பிலிருந்தே பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். பயிற்சிகள் ஏனோதானோ என்றில்லாமல் சிறப்பான ஆசிரியர்களால் வழங்கப்பட வேண்டும்.

என் மகள்தான் மாநிலத்தில் முதல் இடம். அவளுக்குத் தேவையான வாய்ப்புகளை, வசதிகளை என்னால் செய்துகொடுக்க முடிந்தது. என் மகளும் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண் பெற்றிருக்கிறாள். ஆனால், ஏழை  பெற்றோர்களால் அவர்களின் பிள்ளைகளுக்கு அதே அளவு வாய்ப்புகளை உருவாக்கித்தர முடியாது. இந்தத் தேர்வே ஒரு சமநிலையான தேர்வு கிடையாது என்பதுதான் உண்மை.

தமிழ்நாடு அரசு, மத்திய அரசிடம் குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது நீட் தேர்வுக்கு விலக்குப் பெற்றிருக்க வேண்டும். இங்கேயிருக்கும் கட்டமைப்புகளை, வசதிகளை மேம்படுத்தி அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் நல்ல வாய்ப்புகளை உருவாக்கித் தந்து, அதற்குப் பிறகு தேர்வு நடத்தினால்தான் சரியாக இருக்கும்’’ என்கிறார் மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் அரங்கத்தின் பொதுச்செயலாளர் காசி.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!