குழந்தைகள் மரணத்தைக் குறைத்த டாக்டர் விர்ஜீனியா ஆப்கர்...கௌரவப்படுத்திய கூகுள்! #VirginiaApgar

ஒரு குழந்தை பிறந்த 60 விநாடிகளில், அந்தக் குழந்தைக்கு உடல்ரீதியாக என்ன பிரச்னை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் சூத்திரத்தைக் கண்டுபிடித்தவர்.

குழந்தைகள் மரணத்தைக் குறைத்த டாக்டர் விர்ஜீனியா ஆப்கர்...கௌரவப்படுத்திய கூகுள்!  #VirginiaApgar

'விர்ஜீனியா ஆப்கர்’... குழந்தைகளின் தேவதை. ஒரு குழந்தை பிறந்த 60 விநாடிகளில், அந்தக் குழந்தைக்கு உடல்ரீதியாக என்ன பிரச்னை இருக்கிறது... பிழைக்குமா பிழைக்காதா..? எந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறது... என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளும் சூத்திரத்தைக் கண்டுபிடித்தவர். இதன் பெயர்தான் 'ஆப்கர் ஸ்கோர்.’ இதை, 'பிறந்தவுடன் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் மதிப்பெண்’ என்றே சொல்லலாம்.

வர்ஜீனியா ஆப்கர்

PC: Wikipedia

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் மருத்துவரான விர்ஜீனியா ஆப்கரின் படத்தை, கூகுள் தனது டூடுளில் வைத்துப் பெருமைப்படுத்தியிருக்கிறது. இன்று விர்ஜீனியா ஆப்கரின் 109-வது பிறந்தநாள். இவர் ஜூன் 7, 1909-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் பிறந்தவர். உடன் பிறந்த இரண்டு சகோதரர்களில் ஒருவர் காசநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். மற்றொருவர், அதேபோல மற்றொரு நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நிகழ்வுகள்தான் விர்ஜீனியா ஆப்கர், மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கக் காரணமாகின. 

1925-ம் ஆண்டு தனது முதல் பட்டப் படிப்பை முடித்தார். 1929-ம் ஆண்டில் விலங்கியல் பட்டப் படிப்பை முடித்துவிட்டு, பின்னர் மருத்துவப் படிப்பில் சேர்ந்து, 1933-ம் ஆண்டில் முடித்தார். 1937-ம் ஆண்டில் அறுவைசிகிச்சை மருத்துவத்தில் பட்டம் பெற்றார். அந்தக் காலகட்டத்தில் பெண்கள் மருத்துவராவது மிகவும் அபூர்வம். அப்படி மருத்துவரானாலும், அறுவைசிகிச்சை நிபுணராக ஆக முயற்சி செய்த பெண்கள் தோல்வியையே தழுவினார்கள். அமெரிக்காவின் கொலம்பியா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்தில் மருத்துவராகப் பணியாற்றினார் விர்ஜீனியா. குழந்தைகள் மருத்துவத்தில் இருந்த ஆர்வத்தால், தன் வாழ்நாள் முழுக்க அதிலேயே கவனத்தைச் செலுத்தினார். 

அவர் இருந்த காலகட்டத்தில், அமெரிக்காவிலேயே ஒரு மருத்துவமனையில், ஒரு பிரிவின் தலைவரான முதல் பெண் மருத்துவர் விர்ஜீனியா ஆப்கர்தான். இவர் மயக்க மருந்து மருத்துவப் பிரிவின் தலைவராகப் பணியாற்றினார். 1949-ம் ஆண்டில் முழு நேர மருத்துவப் பேராசிரியராக இருந்த முதல் அமெரிக்க பெண் மருத்துவர் இவரே. 

1950-களில், அமெரிக்காவின் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்திருந்தாலும், பிறந்த 24 மணி நேரத்தில் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மாறாமல் அப்படியே இருந்தது. இது அமெரிக்க மருத்துவத்துறைக்கு பெரும் சவாலாக இருந்த பிரச்னை. விர்ஜீனியா ஆப்கர், 20,000 குழந்தைகளின் பிரசவத்தின்போது உடனிருந்தார்; பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஆய்வின்மூலம் ஒரு சூத்திரத்தைக் கண்டுபிடித்தார். அப்படி அவர் ஆய்வு செய்தபோது, நீல நிறத்திலும், மூச்சுத்திணறலுடனும் பிறக்கும் குழந்தைகள், பிறந்த 24 மணி நேரத்தில் இறப்பதைக் கவனித்தார். 

ஆப்கர் ஸ்கோர்

PC: Wikipedia

விர்ஜீனியா ஆப்கர் கண்டறிந்த `ஆப்கர் ஸ்கோர்’ குறித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீன் மருத்துவர் பொன்னப்பலம் விளக்குகிறார்... "விர்ஜீனியா ஆப்கர் பணியாற்றிய காலத்தில், அவர் ஆய்வுசெய்த குழந்தைகளை அடிப்படையாகவைத்து ஒரு விதியை உருவாக்கினார். அதன் பெயர்தான் `ஆப்கர் ஸ்கோர்.’ பிறந்த குழந்தைகளின் இதயத்துடிப்பு, சுவாசம், தசைகளின் வலிமை, அனிச்சைச் செயல், தோலின் நிறம் ஆகிய ஐந்தையும்வைத்து 0, 1, 2 எனத் தனித்தனியாக மதிப்பெண் கொடுக்க வேண்டும். அவற்றின் கூட்டுத்தொகையை 0-10 எனக் மருத்துவர் பொன்னம்பலம்கணக்கிடுவார்கள். அந்த எண்ணைவைத்து, அந்தக் குழந்தைக்கு மருத்துவ உதவி தேவையா, இல்லையா... இதயத்துடிப்பு, சுவாசத்தில் கோளாறு ஏதாவது இருக்கிறதா... குழந்தை பிழைக்குமா பிழைக்காதா... என்று கண்டுபிடித்துவிடலாம். பிறந்த குழந்தை `பிங்க்’ நிறத்தில் இருக்க வேண்டும். ஆனால், சில குழந்தைகள் நீல நிறத்தில் இருந்தன அல்லது கை, கால்கள் நீல நிறத்தில் இருந்தன. ரத்த ஓட்டம் சரியாக இல்லாததால் ஏற்படும் பிரச்னை இது. குழந்தைகள் பிறந்தவுடன் அழ வேண்டும், கை, கால்களை நன்றாக அசைக்க வேண்டும். அப்படி இல்லையென்றாலும், ஏதோ பிரச்னை இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம்.

இவற்றையெல்லாம் வைத்து மதிப்பெண்கள் கொடுப்பார்கள். மதிப்பெண் 10-ஆக இருந்தால், குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். மதிப்பெண் குறைவாக இருந்தால், அந்த மதிப்பெண்ணுக்கு ஏற்றாற்போலக் குழந்தைக்கு மருத்துவ உதவி தேவை என்பதைப் புரிந்துகொள்ளலாம். அந்தக் குழந்தையால் புதிய சூழலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அதற்கு செயற்கை ஆக்ஸிஜன் மற்றும் மிதமான வெப்பநிலையில் இன்குபேட்டரில் (Inkubator) வைத்திருக்க வேண்டும். அப்படி மருத்துவ உதவி செய்யப்பட்ட குழந்தைகள் சில நாள்களில் இயல்பானநிலைக்குத் திரும்பினார்கள். அதற்கு முன்னர், இதுபோன்ற குழந்தைகளுக்கு மருத்துவ உதவி அளிக்கப்படாமல் இறந்து போயிருந்தன. இந்தச் சூத்திரத்தை வைத்து அமெரிக்காவில் 1950-ம் ஆண்டில், `50 குழந்தைகளுக்கு ஒன்று’ என்ற குழந்தைகளின் இறப்பு விகிதத்தை, `500 குழந்தைகளுக்கு ஒன்று’ என்று குறைத்தனர். இப்போதும் அமெரிக்காவில் பல மருத்துவமனைகளில் ஆப்கர் ஸ்கோர் சூத்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.’’

ஆப்கர் ஸ்கோரை ஆங்கிலத்தில் மிக எளிமையாக இப்படிக் குறிப்பிடுகிறார்கள்...

* A - Appearance (Skin color) - தோலின் நிறம்

* P - Pulse (Heart rate) - இதயத்துடிப்பு

* G - Grimace response (Reflexes) - எதிர்வினை (அனிச்சை செயல்)

* A - Activity (Muscle tone) - தசைகளின் வலிமை

* R - Respiration (Breathing rate and effort) - சுவாசம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!