மாணவர்களை பிராய்லர் கோழிகளாக வளர்த்தெடுக்கிறதா இந்தச் சமூகம்... தற்கொலைகள் ஏன்? | Community develops students as broiler chickens

வெளியிடப்பட்ட நேரம்: 10:49 (08/06/2018)

கடைசி தொடர்பு:10:49 (08/06/2018)

மாணவர்களை பிராய்லர் கோழிகளாக வளர்த்தெடுக்கிறதா இந்தச் சமூகம்... தற்கொலைகள் ஏன்?

மாணவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் காட்டுவதில் ஏற்படும் சிக்கல்கள்தான் தற்கொலைகளுக்குக் காரணமா?

மாணவர்களை பிராய்லர் கோழிகளாக வளர்த்தெடுக்கிறதா இந்தச் சமூகம்... தற்கொலைகள் ஏன்?

நீட் தோல்வியால் ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவி ஜாஸ்லின் கவுர் பத்தாவது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை... டெல்லியைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் இதேபோன்று எட்டாவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்... தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு மாணவி அனிதா... இந்த ஆண்டு மாணவி பிரதீபா ... தற்கொலைகள் தொடர்வது நம்மைக் கலங்கவைக்கிறது. இவை தவிர பள்ளி மாணவர்கள் தற்கொலை என்கிற செய்திகளும் வேதனையில் ஆழ்த்துகின்றன.

தற்கொலை

இந்தியாவில் 2010 - 2015 இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் 39,775 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்து போயிருக்கிறார்கள். 2015-ம் ஆண்டு மட்டும் 8,934 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்களில் 955 மாணவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

முப்பது வயதைக் கடந்தவர்கள் யாரிடம் வேண்டுமானாலும் ஒரு கேள்வியைக் கேட்டுப் பார்க்கலாம்... `உங்கள் வாழ்க்கையிலேயே பொன்னான, வசந்தமான காலம் எது?’ நிச்சயமாக அவர்கள் எல்லோருமே சொல்லும் காலம் பள்ளிப்பருவமாகத்தான் இருக்கும். பள்ளிப் பருவம்தான் மனதில் பசுமை நினைவுகளாக நமக்குப் பதிந்துபோயிருப்பவை. நாம் இந்தச் சமூகத்தில் யாராக உருவாகப் போகிறோம் என்பதைத் தீர்மானிக்கும் பருவம்தான் பள்ளிப் பருவம். ஆனால், இன்றைய நிலை அப்படி அல்ல. மாணவர்களில் பெரும்பாலானோர் பரபரப்பாக, சில நேரங்களில் பதற்றத்தோடு இருக்கிறார்கள்.மோகன வெங்கடாஜலபதி

அவர்களை எப்போதும் ஒரு சுமை அழுத்திக்கொண்டே இருக்கிறது. சில நேரங்களில் அந்த அழுத்தம் தாங்காமல்தான் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அப்படி அவர்களின் மனதை அழுத்தும் விஷயம்தான் என்ன... அது அவர்களே உருவாக்கிக்கொண்ட சுமையா, அல்லது பெற்றவர்களால், மற்றவர்களால் திணிக்கப்படுவதா?

``அதீத மனச்சோர்வு உண்டானால் மட்டுமே தற்கொலை எண்ணம் வரும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பெரும்பாலும் தேர்வு முடிவுகள் வெளிவரும்போதுதான் இப்படிப்பட்ட மனச்சோர்வு உண்டாகும். தாங்கள் எதிர்பார்த்த முடிவுகள் வராதபோது தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து இரண்டு, மூன்று நாள்களில் அவர்களின் மனம் ஒரு பதற்றத்துக்குப் போய், ஏதோ ஒரு மன உந்துதலின் (Impulsive decision) அடிப்படையில் இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்கிறார்கள்.

இதற்கான காரணங்களை நாம் ஆராய்ந்தால், இந்தத் தவறுகளுக்குக் காரணம் அந்த மாணவர்கள் அல்ல என்பது புரியும். உதாரணமாக, `நீட் தேர்வில் தோல்வியடைந்தால், மருத்துவக் கல்லூரியில் சேர முடியாது. வாழ்க்கையே அவ்வளவுதான்...’ என்ற கருத்தை மாணவர்களின் மனதில் திணித்த அவர்களின் பெற்றோர்களும் மற்றவர்களும் இந்தச் சமூகமும்தான் பொறுப்பு.

மனச்சுமை

நீட் தேர்வை அரசு உடனடியாக மாணவர்களின் மீது திணித்தது தவறுதான். என்றாலும், நம் பிள்ளைகளைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இந்தச் சமூகத்தில் மருத்துவப் படிப்புதான் உயர்வான படிப்பு என்று போதிக்கப்பட்டிருக்கிறது. தற்கொலையின் மூல காரணமே இது போன்ற தவறான நம்பிக்கைகளை மாணவர்களின் மனதில் விதைப்பதுதான்.

பதின்பருவத்தில் மாணவர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் இருப்பார்கள். தங்களை நிரூபித்துக் காட்டுவதில் அவர்களுக்கு ஏராளமான சிரமங்கள் (Identity crisis) ஏற்படுகின்றன; தோல்விகள் உண்டாகின்றன. அதனால்தான் தற்கொலை முடிவுகளை எடுக்கிறார்கள்.

வாழ்வதற்கான ஒருவழிதான் கல்வியே தவிர, கல்வியே வாழ்க்கையல்ல. தேர்வில் தோற்றுப் போனால் வாழ்க்கையிலேயே தோற்றுப் போனதாக அர்த்தமல்ல. இதைப் பெற்றோர்கள்தான் அந்த மாணவர்களுக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால், மாணவர்களைப் பதற்றத்துக்கு உண்டாக்குவதே பெற்றோர்கள்தான். இந்த நிலை நிச்சயமாக மாற வேண்டும்.

பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் மருத்துவம், பொறியியல் மற்றும் சில படிப்புகளைப் படித்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேறுவார்கள் என்று தவறாக நினைக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு எதைப் படிக்க விருப்பம் என்பதைக்கூடக் கேட்பதில்லை. அவர்களாகவே சில முன் முடிவுகளை எடுத்து, அவர்களின் மீது திணிக்கிறார்கள்.

படிப்பு சில மாணவர்களுக்கு நன்றாக வரும், சிலருக்கு வராது. அதற்குப் பல காரணிகள் இருக்கின்றன. உலகம் மிகப்பெரியது. வாழும் வழிகள் எண்ணிலடங்காதவை. எந்தக் கல்வியைக் கற்றுக்கொண்டாலும், அதை வைத்து முன்னேற முடியும். கல்வியைத் தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது, வழிகள் இருக்கின்றன என்பதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

பட்டப்படிப்பு

மாணவர்களும், தங்கள் விருப்பங்களை, கனவுகளை மற்றவர்களுக்காக மாற்றிக்கொள்கிறார்கள். தங்களின் தனித்திறனை மறந்து ஒரு மந்தை மனப்பான்மையில் (Herd mentality) செயல்படுகிறார்கள். அவர்களும் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

நம் கல்வி முறையிலும் தவறுகள் இருக்கின்றன. நல்லொழுக்க வகுப்புகளெல்லாம் இப்போது எடுக்கப்படுவதில்லை. கல்வி தவிர தேவநேயன்விளையாட்டு, கவிதை, ஓவியம்... என மற்ற விஷயங்களில் மாணவர்கள் கவனம் செலுத்தினால் ஆசிரியர்களும், பெற்றோர்களுமே அவர்களைக் கண்டிக்கிறார்கள். இன்றைய இளைய தலைமுறையில் மருத்துவர்கள், பொறியியலாளர்கள் மட்டும் இல்லை. ஓவியர்கள், நடிகர்கள், கவிஞர்கள், கதாசிரியர்கள், மாவட்ட ஆட்சியர்கள்... என்று எத்தனையோ துறை சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் தனித்திறனைக் கண்டறிந்து, அதை மேம்படுத்த வேண்டும். அந்தப் பொறுப்பு மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்களின் கைகளில்தான் இருக்கிறது. பள்ளிகளில் உளவியலாளர்களை நியமிக்க வேண்டும். வகுப்புகளில், மனதளவில் தளர்ந்து போயிருக்கும் மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்க வேண்டும்’’ என்கிறார் மனநல மருத்துவர் மோகன வெங்கடாஜலபதி.

``அடிப்படையில் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கிற கல்விமுறை இங்கு இல்லை. தோல்வியை ஏற்றுக்கொள்கிற மனப்பான்மையை மாணவர்களிடம் ஆசிரியர்கள் உருவாக்கவில்லை. இதுவரை வெற்றியாளர்களாக உலகம் கொண்டாடுகிற நபர்கள் அடைந்த தோல்விகள் குறித்து அவர்களுக்குக் கற்றுத்தரப்படுவதில்லை.

போதித்தல் மட்டுமே கல்வியல்ல, தன்னம்பிக்கையைக் கொடுத்து எதிர்ப்புகளைச் சமாளிக்கிற ஆற்றலை வளர்க்கும்விதத்தில் கல்வி இருக்க வேண்டும். நாம் மாணவர்களை பிராய்லர் கோழிகளை வளர்ப்பதைப்போல்தான் உருவாக்குகிறோம். அதேபோல, ஆசிரியர்கள் - மாணவர்களுக்கிடையில் ஓர் ஆரோக்கியமான உறவுமுறையும் இல்லை.

மாணவர்களுக்கு இருக்கிற உளவியல் சிக்கல்களை உளவியலாளர்களைக் கொண்டு சரிசெய்ய முடியாது. அது பாதிப்புக்குள்ளான மானவர்களை மற்ற மாணவர்களிடமிருந்து இன்னும் அதிகமாகத் தனிமைப்படுத்தும். ஆசிரியர்கள்தான் மாணவர்களுக்கு ஆலோசகர்களாக இருக்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கான கல்விமுறையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். மனிதவள மேம்பாட்டைப் பற்றி ஆசிரியர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கான கல்விமுறைகளை பி.எட் படிப்பில் கொண்டுவர வேண்டும்.

மாணவர்கள்

மாணவர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதைக் கண்டறிய ஓர் உயர்மட்ட வல்லுநர்கள் குழுவை உருவாக்க வேண்டும். அதில் அனுபவம் வாய்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், மனிதவள செயற்பாட்டாளர்கள், உளவியலாளர்கள், குழந்தைகளுக்கான செயல்பாட்டாளர்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். ஆண்டுக்கு இரண்டு முறை கலந்தாலோசித்து மாணவர்களுக்குத் தேவையான ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளை அவர்கள் செய்ய வேண்டும்’’ என்கிறார் குழந்தைகள் உரிமை ஆர்வலர் தேவநேயன்.

மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்க அரசு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறித்து பொதுச் சுகாதார இயக்குநர் குழந்தைசாமியிடம் பேசினோம்...

`` 104 இலவச ஹெல்ப்- லைன் வசதி இருக்கிறது. தற்கொலை எண்ணங்கள் வரும்போது அழைத்துப் பேசலாம். தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள். அதோடு, பேசுபவர்களின் இடங்களைக் கண்டறிந்தும், அவர்களின் அக்கம் பக்கத்து வீடுகளில் இருப்பவர்களை அனுப்பியும் காப்பாற்றவும் செய்வார்கள். தேர்வு முடிவுகள், நீட் தேர்வு முடிவுகள் வரும்போதுதான் ஏராளமானோர் எங்கள் 104 எண்ணை அழைத்து ஆலோசனை பெறுகிறார்கள். அவர்களில் பலர் பயனடைந்துமிருக்கிறார்கள்’’ என்கிறார் குழந்தைசாமி. 

சிநேகா- தற்கொலை தடுப்பு மையம் -  044-24640050 இந்த  எண்ணில் அழைத்தால் தற்கொலை என்ணத்திலிருந்து விடுபட தகுந்த ஆலோசனைகள் வழங்குவார்கள். 24 மணி நேரமும் செயல்படுகிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close