பிரசவத்தில் தாய் இறப்பதற்கான காரணங்கள் என்னென்ன, தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? #DataStory | Maternal mortality ratio in the country drops to 130 from 167

வெளியிடப்பட்ட நேரம்: 12:03 (08/06/2018)

கடைசி தொடர்பு:12:26 (08/06/2018)

பிரசவத்தில் தாய் இறப்பதற்கான காரணங்கள் என்னென்ன, தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? #DataStory

பிரசவத்தின்போது தாய் இறப்பு விகிதத்தில் தமிழகத்துக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

பிரசவத்தில் தாய் இறப்பதற்கான காரணங்கள் என்னென்ன, தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? #DataStory

தாய்மை என்பது பெண்ணுக்கு கிடைத்த ஆகச்சிறந்த வரம். ஆனால், அந்த வரமே, பல பெண்களின் உயிரைப் பறிக்கும் சாபமாகவும் சில நேரங்களில் அமைந்துவிடுவதுண்டு. ஒவ்வொரு பெண்ணும் தன் குழந்தையைப் பெற்றெடுப்பது ‘மறுஜென்மம்’ எடுப்பதற்குச் சமம். வீட்டிலேயே ஒரு டஜன் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்மார்களும் முன்னர் இருந்திருக்கிறார்கள். இப்போது மருத்துவத்துறையில் வியக்கும் அளவுக்கு பல புதிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. சில பத்து வருடங்களுக்கு முன்னர் இருந்ததைப்போல இப்போதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் குழந்தைகள் இல்லை. ஆனாலும், பெண்ணுக்கு பிரசவம் என்பது ‘மறுபிறவி’ என்பது, திரும்பத் திரும்ப நிரூபிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

பிரசவத்தின் போது தாய் இறப்பு விகிதம்

‘இந்தியாவில் 2014-16-ம் ஆண்டுகளில் பிரசவத்தின்போது இறக்கும் தாய்மார்களின் இறப்பு விகிதம் (Maternal Mortality Ratio -MMR)  130 ஆக இருந்தது’ என்கிறது இந்தியாவின் மாதிரி பதிவு அமைப்பின் (Sample Registration System) அண்மையப் புள்ளிவிவரம் ஒன்று. இதுவே கடந்த 2011-13-ம் ஆண்டுகளில்167 ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைவு என்றாலும், சில மாநிலங்களில் உட்பட்ச நிலையிலும், சில மாநிலங்களில் வெகுவாகக் குறைந்தும் இருக்கிறது. இவற்றில், ஒரு லட்சம் பிரசவங்களுக்கு 46 ஆக இறப்பு விகிதம் குறைத்து, கேரளா முதலிடத்திலிருக்கிறது. மகாராஷ்டிரா 61 ஆக இறப்பு விகிதம் குறைத்து, இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு 66 ஆக இறப்பு விகிதம் குறைத்து, மூன்றாவது இடத்திலும் உள்ளன. பிரசவத்தின்போது அதிகமான உயிரிழப்பு ஏற்படும் மாநிலங்களின் பட்டியலில் அசாம், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் முன்னிலையில் உள்ளன. இந்த மாநிலங்களில் இறப்பு விகிதம் 100-லிருந்து 300 ஆக உள்ளது.

‘பிரசவத்தில் தாய்மார்கள் இறப்பு சதவிகிதம் தமிழகத்தில் எப்படி... கர்ப்பகாலப் பராமரிப்பில் தமிழகத்தின் நடவடிக்கை மருத்துவ செயற்பாட்டாளர் அமீர்கான்போதுமானதாக இருக்கிறதா?’ என்றெல்லாம் மருத்துவச் செயல்பாட்டாளர் அமீர்கானிடம் கேட்டோம்...

``கர்ப்பகாலப் பராமரிப்பின்போது பெண்களின் மேல் போதிய அக்கறை செலுத்த வேண்டும். கவனம் செலுத்தாமல் விடுகிறபோதுதான் பிரசவம் அபாயக் கட்டத்துக்குச் செல்கிறது. இந்தியாவில் அதிகளவில் பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்படுகிறார்கள். இதைப் பல்வேறு ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. பெண் குழந்தைகளுக்கு வளரிளம் பருவம் முதலே உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டும். குழந்தைத் திருமணம், ஆரோக்கியமற்றச் சூழல், ஊட்டச்சத்தின்மை, திறந்தவெளிக் கழிப்பறையைப் பயன்படுத்துதல் போன்ற அவலங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த விஷயத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் ராணுவம், பாதுகாப்புக்கு பெரும் நிதியை ஒதுக்குகின்றன. அதுபோலவே, மக்களை நேரடியாகப் பாதிக்கக்கூடிய மருத்துவத்துக்கும், உடல்நலம் காக்கக்கூடிய விஷயங்களுக்கும் அதிக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதையெல்லாம் செய்யாமல், கர்ப்பகாலத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் முழுமையான பலன் கிடைக்காது. மருத்துவ உள் கட்டமைப்புகளுக்கு, தமிழக அரசு பின்பற்றிவரும் சுகாதாரக் கொள்கைகள் வரவேற்கக் கூடியவைதான். ஆனால், அவை மட்டுமே போதாது என்பதைத்தான் இந்தியாவின் மாதிரி பதிவு அமைப்பின் புள்ளிவிவரம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது" என்கிறார் அமீர்கான்.

பிரசவத்தின்போது, 28 சதவிகிதப் பெண்கள் இறப்பதற்கு முக்கியக் காரணம், உயர் ரத்தஅழுத்தம்தான். அதுமட்டுமின்றி, ரத்தக்கசிவால் 18 சதவிகிதமும் இதயநோய்களால் 12 சதவிகிதமும் இறப்பு ஏற்படுகிறது. ரத்த நாள அடைப்பு பிரச்னையாலும் பெரும்பாலானோர் இறக்கிறார்கள். இது, 2017-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி எடுத்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து, இதய நோய் சிகிச்சை இதய நோய் சிகிச்சை நிபுணர் சொக்கலிங்கம்நிபுணர் சொக்கலிங்கத்திடம் பேசினோம்.

``பிரசவத்தின்போது இயல்பாகவே ரத்த அழுத்தம் அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தப் பிரச்னை பிரசவ காலத்தில் ஒரு பெண்ணுக்கு இருந்தால், அவர் கவனமாக இருக்க வேண்டும். கருவுற்றிருக்கும்போதே, உயர் ரத்த அழுத்தப் பிரச்னையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதற்குரிய மாத்திரைகளை மருத்துவர்களின் ஆலோசனையோடு உட்கொள்ளலாம்.

பிரசவத்தின்போது பெண்கள் இறப்பதற்கு மற்றொரு காரணம் அதிக ரத்தப்போக்கு. ரத்தப்போக்கு அதிகமானால் உறுப்புகள் செயலிழந்து, உயிரிழப்புக்கு வழிவகுக்கும். எனவே, பெண்களுக்கு ரத்தக்கசிவு நிற்காமல் இருந்தால் உடனே மருத்துவரைச் சந்தித்து, சிகிச்சை பெற வேண்டும். ரத்தக்கசிவை ஈடுகட்டுவதற்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட வேண்டும். இதயம் தொடர்பான நோய்கள் இருக்கிறதா என்பதையும் பரிசோதனை மூலம் அறிந்துகொள்வது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் மாதந்தோறும் தவறாமல் மருத்துவரை அணுகி, உடல் மற்றும் குழந்தையின் வளர்ச்சியைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆரோக்கியமான மனநிலையில் இருக்க வேண்டும்; சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால், பிரசவத்தின்போது ஏற்படும் இறப்பைத் தடுக்க முடியும்" என்கிறார் சொக்கலிங்கம்.

Pregnant woman

‘சுகாதாரத்துறைச் செயல்பாட்டிலும், மருத்துவ உள் கட்டமைப்பிலும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாகவும், நம் நாட்டின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் இருக்கிறது தமிழகம். ஆனால், முதலிடத்தை நோக்கிச் செல்வதை எது தடுக்கிறது?’ - பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி விளக்குகிறார்.

``மருத்துவத்துறையைப் பொறுத்தவரை உள்கட்டமைப்பு வசதிகளில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது. தமிழகத்தில் ஒரு பெண் கருவுற்றவுடனே அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று, தன் பெயரைப் பதிவு செய்துகொண்டால் போதும். உரிய காலத்தில் இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்குவதில் ஆரம்பித்து, தடுப்பூசி போடுவது, ஹீமோகுளோபின், சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளைச் செய்வது... என முழுமையாக அந்தப் பெண்ணுக்கான அனைத்து சிகிச்சைகளையும், சோதனைகளையும் செய்து தருகிறோம். இதனால்தான், அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில்தான் நடக்கின்றன.

கேரள மாநிலத்தைப்போல நம் மாநிலத்திலுள்ள கிராமப்புறப் பெண்களுக்கு கல்வியறிவு முழுமையாகச் சென்றடையவில்லை. அதனால், பழைமைவாத எண்ணங்களுடன் விழிப்பு உணர்வு இல்லாமல் பெண்கள் இருக்கிறார்கள். மேலும், சுகாதாரத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதுதான் முதன்மையான காரணம்.

பாரம்பர்ய உணவுப்பழக்க வழக்கங்களையும் நாம், கைவிட்டுவிட்டோம். இது போன்றப் பிரச்னைகள் இருந்தாலும், மூன்றாவது இடத்தை தக்கவைத்திருக்கிறோம். பிரசவத்தின்போது பெண்கள் இறப்பதைப் படிப்படியாக குறைத்துக்கொண்டே வருகிறோம். நிச்சயம் பிரசவத்தின்போது தாய்-சேய் இறப்பே இல்லை என்ற நிலையை எட்டுவதுதான் எங்கள் இலக்கு. அதை நோக்கியே செயல்படுகிறோம். அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு இருந்தால் அது விரைவில் சாத்தியமாகும்’’ என்கிறார் குழந்தை சாமி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்