வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சுயம்வரம்- ஜூன் 24-ல் விழுப்புரத்தில்!

வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சுயம்வரம்- ஜூன் 24-ல் விழுப்புரத்தில்!

வெண்புள்ளி பாதித்தவர்களை பரிகாசமாகவும், பரிதாபமாகவும் பார்க்கும் மனநிலை இன்னும் பலருக்கு உள்ளது. உண்மையில் வெண்புள்ளி பாதிப்பென்பது நோயே அல்ல. உடலில் ஏற்படும் நிறமி இழப்பின் விளைவு. அவ்வளவுதான். கை குலுக்குவதாலோ, நெருங்கிப் பேசுவதாலோ இது பரவாது. இதுகுறித்து அறிந்துகொள்ள நம் உடலியல் செயல்பாடுகள் குறித்து கொஞ்சம் அறிந்துகொள்ள வேண்டும். 

திருமணம்

நம் உடலில் கிருமிகள், பாக்டீரியாக்கள் நுழையும்போது, ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் கேடயமாக இருந்து அவற்றை எதிர்த்து அழிக்கும். சில நேரங்களில்,  நம் உடலில் உள்ள ஒரு உறுப்பு அல்லது சுரப்பியை எதிரியாக நினைத்து, இந்த வெள்ளையணுக்கள் அழிக்கத் தொடங்கிவிடும். அப்படி, நமது சருமத்துக்கு நிறத்தை அளிக்கும்  'மெலனோசைட்’  என்ற சுரப்பியை வெள்ளையணுக்கள் அழிப்பதால்தான் உடலில் வெள்ளைப் புள்ளிகள் ஏற்படுகின்றன. இந்தப் பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். 

வெண்புள்ளி பாதித்தவர்கள் சமூகத்தின் விளிம்பில் வாழும் நிலைதான் இன்றுவரை தொடர்கிறது. அவர்களது சமூக வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றன. இந்தச் சூழலில். வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருங்கிணைந்து நடத்துகிற 'வெண்புள்ளிகள் விழிப்பு உணர்வு இயக்கம்' அவர்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது. வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருதல், திருமணம் செய்து வைத்தல், சிகிச்சைக்கு உதவுதல், மனநல ஆலோசனைகள் தருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக,  வரும் ஜூன், 24 அன்று விழுப்புரம், தேவிபாலா ரெசிடென்சியில் வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டோருக்கான சுயம்வர நிகழ்ச்சி ஒன்றை நடத்தவிருக்கிறது இந்த அமைப்பு. 

இதுகுறித்து அந்த அமைப்பின் செயலாளர் கே.உமாபதியிடம் பேசினோம்.

``இதுவரை சுயம்வர நிகழ்ச்சிகள் மூலம் 383 ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளோம்.  தவிர, 600 ஜோடிகள் திருமணத்துக்காக எங்களிடம் பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு பகுதியினருக்கு  ஜூன் 24 அன்று விழுப்புரத்தில் சுயம்வர நிகழ்ச்சி நடக்கிறது. வெண்புள்ளிகள் பற்றித் தவறான கருத்துக் கொண்டவர்கள் அங்கே வந்தால், நேரடியாகவே பல தகவல்களைக் கேட்டும், பார்த்தும் அறிந்துகொள்ள முடியும். இந்த சுயம்வரத்துக்கு ஏற்கெனவே திருமணமான நூற்றுக்கணக்கான வெண்புள்ளி ஜோடிகள், தங்கள் குழந்தைகளுடன் வருகை தரவிருக்கிறார்கள்.  வெண்புள்ளி அந்தக் குழந்தைகளைப் பாதிக்கவில்லை என்பதை அங்கே பார்க்கலாம். இது தொற்றுநோய் அல்ல, பரம்பரை வியாதியும் அல்ல என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உமாபதி

உடலில் வெண்புள்ளி கொண்டோரைத் திருமணம் செய்ய  உறவினர்கள் கூட முன் வருவதில்லை. இதுபோன்ற புறக்கணிப்புகளைப் பார்த்துப் பார்த்து வெண்புள்ளி கொண்ட இளைஞர்களும், இளம்பெண்களும் தங்களுக்குத் திருமணமே வேண்டாம் என்று வெறுத்துப்போய் ஒதுங்கிக் கொள்ளும் நிலை உருவாகி விடுகிறது. அதனால்,  அவர்களின் உடன் பிறந்தவர்களும் திருமண வாழ்க்கை அமையாமல் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு வீட்டில் பாட்டிக்கு வெண்புள்ளி இருந்தால் கூட, அந்த வீட்டில் இருக்கும் திருமண வயதுள்ள ஆணுக்கோ, பெண்ணுக்கோ எளிதில் திருமணம் அமைவதில்லை. 

அந்த நிலையை மாற்றி, வெண்புள்ளி பாதித்தோருக்கும் வாழ்க்கை இருக்கிறது என்று நம்பிக்கையை விதைப்பதற்காகத்தான் இந்த சுயம்வர நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். இதுவரை, திருச்சி, நெல்லை, கோவை, புதுவை, மதுரை ஆகிய இடங்களில் சுயம்வரம் நடந்துள்ளது. இப்போது விழுப்புரத்தில் நடக்கவுள்ளது. வெண்புள்ளி பாதிப்புள்ளவர்கள், அதுகுறித்த அறிவியல் உண்மைகளைத் தெரிந்துகொண்ட பிறகு அவர்களின் உணர்விலும், நடத்தையிலும் மிகப் பெரிய மாற்றத்தைக் காணமுடியும். உண்மை அறியாதவரையில், பதற்றம்,  வெறுப்பு, அவநம்பிக்கை, மனச்சோர்வு, பயம் என மிகப்பெரும் மன அழுத்தத்துடனே வாழ்வார்கள். புள்ளிகளால் எந்த ஆபத்தும் இல்லை என்பதை முதலில் நாம் உணர வேண்டும். அதுகுறித்த விழிப்பு உணர்வை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும். அரசும் இதில் போதுமான விழிப்பு உணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும்" என்கிறார் உமாபதி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!