வெளியிடப்பட்ட நேரம்: 17:23 (20/06/2018)

கடைசி தொடர்பு:17:42 (20/06/2018)

மாணவர்களின் சோர்வைப் போக்கி ஞாபக சக்தியை மேம்படுத்தும் உணவுகள்! #Infographic

மாணவர்களின் சோர்வைப் போக்கி ஞாபக சக்தியை மேம்படுத்தும் உணவுகள்! #Infographic

திகாலை எழுந்து அவசர அவசரமாகப் பள்ளிக்குக் கிளம்புவது முதல், சிறப்பு வகுப்புகள், டியூஷன் என எல்லாவற்றையும் முடித்து வீடு திரும்புவது வரை இன்றைய மாணவர்களின் உழைப்பு மலைக்க வைக்கிறது. அவர்களின் உடற்சோர்வைப் போக்கவும், மனச்சோர்வு அகற்றி ஞாபகத் திறனை மேம்படுத்தவும் சரியான, சத்துகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் பெற்றோரின் பொறுப்பு அதிகமாகிறது. 

மாணவர் உணவுகள்

சத்தான உணவுகளைச் சாப்பிடாததால் மாணவர்கள், சோர்வு, மனஅழுத்தம், உடல்சூடு, ரத்தச்சோகை உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆட்படுகின்றனர். எனவே, சரிவிகிதமான உணவுகளை பெற்றோர் மாணவர்களுக்குத் தரவேண்டும். 

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் எந்தெந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும், எப்போதெல்லாம் சாப்பிட வேண்டும்? என்று  உணவியல் நிபுணர் யசோதரை கருணாகரனிடம் கேட்டோம்.

``மாணவர்கள் படித்ததை நினைவில் வைத்துக்கொள்ள ஞாபகசக்தி மிகவும் அவசியம். அவர்கள் சாப்பிடும் உணவு சுத்தமானதாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். காலையில் எழுந்து பல் துலக்கியதும் சூடான பசும்பால் சாப்பிடலாம். பாக்கெட் பாலைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல, பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் சத்துமாவுப்பொடிகளை சாப்பிடக் கொடுக்க வேண்டாம். கேழ்வரகுக் கஞ்சி, முளைகட்டிய பாசிப்பயறு போன்றவற்றை அதிகாலை சாப்பிடலாம். இதன்மூலம், உடலுக்குத் தேவையான சத்துகளை இயற்கையாகப் பெற முடியும். பாலிலுள்ள அதீத கால்சியம் எலும்பை உறுதியாக்குவதுடன் உடலுக்கும் பல நன்மைகளைக் கொடுக்கும். 

காலை உணவு முக்கியம்

இன்றைய அவசர உலகில் பெற்றோர் எந்திரம்போல் சுற்றிச்சுழன்று கொண்டிருக்கிறார்கள். இதனால், ரெடிமேடு உணவுகளைத் தயாரித்து அவற்றைப் பிள்ளைகளின் தலையில் கட்டிவிடுகின்றனர். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். ரெடிமேடு உணவுகளில் கால்சியம் உள்ளிட்ட சத்துகள் இருப்பதில்லை. அதுமாதிரி உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரித்தல், ஹீமோகுளோபின் குறைபாடு, ரத்தச்சோகை போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மாணவர்களின் உடல்நிலைக்கேற்ற  உணவுகளை கொடுக்கவேண்டும். இட்லி, தோசை, பொங்கல் போன்ற உணவுகளோடு பயறு வகைகளையும் சேர்த்துக்கொள்ளலாம். முளைகட்டிய பயறுகளில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து உடலை வலிமைப்படுத்தவும் உடல் சூட்டைத் தணிக்கவும் பயன்படும். பூரி, பஜ்ஜி உள்ளிட்ட எண்ணெய் உணவுகளை காலையில் கொடுக்க வேண்டாம். 

பெரும்பாலும் காலை உணவை எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் முடித்துவிட வேண்டும். காலை உணவுதான் ஆற்றல் மிகுந்ததாக இருக்கும். நாள் முழுவதும் சோர்வில்லாமல் படிக்கவும் எழுதவும் விளையாடவும் பயன்படும். எனவே, மாணவர்கள் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.

ஞாபகச் சக்தி அதிகரிக்க உதவும் உணவுகள்

மதிய உணவில் சேர்க்க வேண்டியவை

மதிய உணவில் கேரட், பீட்ரூட்,வெண்டைக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் `வைட்டமின் ஏ’, இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. ரத்தத்தை சுத்திகரிக்கவும் அதிகரிக்கவும் பயன்படும். முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை, வெந்தயக்கீரை உள்ளிட்ட கீரை வகைகளையும் மதிய உணவில் சேர்க்க வேண்டும். 

கீரைகளில் உள்ள `வைட்டமின் ஏ’ சத்து பார்வையை மேம்படுத்தும். எலும்பு மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவும். நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தோல் நோய்கள் வராமல் தடுக்கும். வெந்தயக்கீரையிலுள்ள `ஒமேகா 3’ எனும் சத்து, அறிவு வளர்ச்சியைத் தூண்டும். இதை அதிகமாக மாணவர்களுக்குத் தர வேண்டும். வாரத்துக்கு ஒரு முறையாவது கேரட், பீட்ரூட், வாழைத்தண்டு,வாழைப்பூ,பாகற்காய் எனப் பல்சுவை கொண்ட காய்கறிகளையும் சாப்பிடக் கொடுக்கலாம். 

இறைச்சி

மாணவர்கள் இனிப்புகளை விரும்பி உண்கின்றனர். சாக்லேட் மற்றும் வெள்ளை சர்க்கரை அதிகம் கலக்கப்பட்ட தின்பண்டங்கள் அவர்களுக்கு அதிகம் பிடிக்கிறது. இது ஆரோக்கியமான உணவு இல்லை. வெள்ளைச் சர்க்கரையை அதிகமாகப் பயன்படுத்தினால் அது நரம்புகளைப் பாதிக்கும். அதற்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரை, வெல்லம், தேங்காய், பொட்டுக்கடலை சேர்த்து கொழுக்கட்டை அல்லது அடையாகச் செய்து கொடுக்கலாம். இது, உடலுக்குத் தேவையான புரதச்சத்தைப் பெற்றுத்தரும். இதை பிற்பகல் மூன்று மணிக்கு மேல் சாப்பிடக் கொடுக்கலாம்.  

இரவில் என்ன சாப்பிடலாம்?

 அரிசி சாதத்துடன் நாட்டுக்கோழி, நாட்டுக்கோழி முட்டை போன்றவற்றை உண்ணத்தர வேண்டும். கீரை செரிக்க அதிக நேரமும் ஆற்றலும் தேவைப்படும். எனவே இதை இரவில் உண்ணக்கூடாது. 

உணவியல் நிபுணர் யசோதரை கருணாகரன்மாதத்துக்கு இரண்டு முறையாவது இறைச்சி, மீன் போன்றவற்றில் செய்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதிலுள்ள ஃபோலிக் ஆசிட், ஒமேகா 3 போன்றவை அறிவு வளர்ச்சிக்கு உதவும். இரவு உணவை 7.30 முதல் 8.00 மணிக்குள் சாப்பிட வேண்டும். சாப்பிட்ட உடனேயே, உறங்கச் செல்வதை தவிர்ப்பது நல்லது.

கோடை, மழைக்காலத்துக்கேற்ற உணவுகள்

கோடைக்காலங்களில் அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடைக்காலங்களில் உடலிலுள்ள பெரும்பாலான நீர், வியர்வையாக வெளியேறிவிடும். இதனால், நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனை ஈடுகட்ட நீர்க் காய்கறிகளான பீர்க்கன்காய், சுரைக்காய், வாழைத்தண்டு, புடலங்காய் ஆகியவற்றை அதிகமாக உண்ண வேண்டும். இவை நரம்புகளை வலுவடையச் செய்து, மூளையை சுறுசுறுப்பாக்கும். இளநீர், மோர், நீராகாரம் போன்ற திரவ உணவுகளையும் தேவையான அளவு அருந்த வேண்டும். இந்தவகையான உணவுகள் உடலின் ஆற்றலை மேம்படுத்தும்.

மழைக் காலங்களில் வறுத்த உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பச்சைக் காய்கறிகள், முளைக்கட்டிய பயறு வகைகளைச் சாப்பிடலாம். இதனால் ரத்த அழுத்தம், உடல் சூடு, உடல் எடையைக் குறைக்கலாம். ரத்தச்சோகையை சரிசெய்யவும் முடியும். ஆகவே, சரியான நேரத்தில் ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டாலே மாணவர்கள் நல்ல நினைவாற்றலுடன் விளங்க முடியும். அதன்மூலம் எந்த வகையான தேர்வுகளிலும் அவர்கள் வெற்றிவாகை சூடலாம்" என்கிறார் யசோதரை கருணாகரன். 

 

 

 


டிரெண்டிங் @ விகடன்