வெளியிடப்பட்ட நேரம்: 17:33 (22/06/2018)

கடைசி தொடர்பு:17:34 (22/06/2018)

இந்தியப் பெண்களை அதிகம் பாதிப்பதில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு முதலிடம்... கவனம்! #CervicalCancer

`பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய் எது?’ இப்படிக் கேட்டால், சட்டென்று நம் எல்லோரின் நினைவுக்கும் வருவது `மார்பகப் புற்றுநோய்.’ ஆனால், உண்மை அதுவல்ல. பெண்களை அதிகம் பாதிப்பது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical cancer).

இந்தியப் பெண்களை அதிகம் பாதிப்பதில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு முதலிடம்... கவனம்! #CervicalCancer

கேட்டாலே பதறவைப்பது புற்றுநோய். இதிலிருந்து மீண்டு வருவதற்கான சிகிச்சையே கொடுமையானது, அதிகம் செலவு பிடிப்பது. வசதியுள்ளவர்களுக்கு வந்தால் ஓரளவுக்குச் சமாளித்து விடலாம், வறுமைக்கோட்டுக்குக் கீழிருப்பவர்களுக்கு வந்தால் உயிருக்கு உத்தரவாதமில்லை. இது ஒருபுறமிருக்கட்டும். `பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய் எது?’ இப்படிக் கேட்டால், சட்டென்று நம் எல்லோரின் நினைவுக்கும் வருவது `மார்பகப் புற்றுநோய்.’ ஆனால், உண்மை அதுவல்ல. பெண்களை அதிகம் பாதிப்பது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical cancer). இது, பெண்களை சத்தமில்லாமல் கொல்லும் கொடிய நோய்ப் பட்டியலில் உலகளவில் இரண்டாவது இடத்திலிருக்கிறது இந்தப் புற்றுநோய். இந்தியப் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் இதற்குத்தான் முதலிடம். இந்தப் புற்றுநோய் குறித்த விழிப்புஉணர்வு முறையாக ஏற்படுத்தப்படவில்லை என்பதே உண்மை. 

கர்ப்பப்பைவாய் புற்றுநோய்

``கர்ப்பப்பை வாய் புற்றுநோயை எப்படி முதலில் கண்டறிவது... அதன் அறிகுறிகள் என்னென்ன... இந்தப் புற்றுநோயைக் குணப்படுத்த முடியுமா?’’ - டாக்டர் ஸ்ரீகலாவிடம் கேட்டோம்.

``இந்தப் புற்றுநோய் `ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ (Human Papilloma Virus) தொற்றால் ஏற்படுகிறது. பாதுகாப்பற்ற உடலுறவு மூலமும் இந்த வைரஸ் பரவும். ஆண்கள், பெண்கள் இருபாலரிடமும் இந்த வைரஸ் காணப்படும். பெண்களின் கர்ப்பப்பைவாய்ப் பகுதியில் பதிந்துபோயிருக்கும். இரண்டு வருடங்களில் மறைந்துவிடும். ஆனால், சிலருக்கு உயிர் அணுக்களில் மாற்றத்தை ஏற்படுத்தி, புற்றுநோயாக மாறிவிடும். ஆரம்பத்தில் அறிகுறிகள் தெரியாது. பிறகு கர்ப்பப்பை வாயில் தோன்ற ஆரம்பித்து, உடல்முழுக்கப் பரவிவிடும். 

பரிசோதனை

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள்...

  • அதிகமாக வெள்ளைப்படுதல்
  • உடலுறவின்போது ரத்தக்கசிவு
  • கிருமித்தொற்று காணப்படுதல்
  • மாதவிடாய் இடையில் ரத்தக்கசிவு 
  • அதிக வயிற்று வலி.
  • திடீரென உடல் எடை அதிகரித்தல்
  • ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தல்.

மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால், உடனே கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கான பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். பொதுவாக 40-லிருந்து 50 வயதுவரையுள்ள பெண்களுக்குத்தான் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும். பெண்கள் பருவமடைவதில் தாமதம் ஏற்படுவது, மாதவிடாய் சரியாக நிகழாமல் இருப்பது போன்றவை இருந்தால், இந்தப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.

சத்தான உணவுகள்

தடுப்பதற்கான வழிமுறைகள்...

`பாப் ஸ்மியர் டெஸ்ட்' (pap smear test ) பரிசோதனையை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்துகொள்ள வேண்டும். 25 வயதிலேயே செய்துகொள்வது மிகச் சிறந்தது. இந்த வயதில் செய்யவில்லை என்றால் 40 வயதிலாவது கண்டிப்பாக, அனைத்துப் பெண்களும் ஶ்ரீகலாசெய்துகொள்ள வேண்டும். இது `ஹெச்.பி வைரஸ்' (HP Virus) மூலம் ஏற்படுகிறது. இதைத் தடுக்க `ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் வேக்ஸின்' (Human Papilloma Virus Vaccine) என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 

இயற்கையாகச் சரிசெய்யும் முறைகள்... 

பழங்கள், சத்தான உணவுகளைச் சாப்பிடுவது அதிகமாகத் தண்ணீர் குடிப்பது போன்றவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். வெந்தயம், கர்ப்பப்பையை வலுவடையச் செய்யும் ஒரு சிறந்த மருந்து. காலையில் எழுந்தவுடன் தினமும் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டால் உடல் சூடு குறைந்து, வெள்ளைப்படுதல் நின்றுவிடும்.

உலகச் சுகாதார நிறுவனத்தின் (World Health Organisation) ஒரு புள்ளிவிவரப்படி, `உலக அளவில், ஒவ்வோர் ஏழு நிமிடங்களுக்கும் ஒரு பெண் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்.’ எனவே, பெண்கள் விழிப்புஉணர்வுடன் இருக்கவேண்டியது மிகவும் அவசியம். உடல்நலத்தில் பெண்கள் அக்கறை காட்ட வேண்டும். ஏனென்றால், அடுத்த தலைமுறையை உருவாக்குபவள் பெண்தான்!” என்கிறார் ஸ்ரீகலா.

 


டிரெண்டிங் @ விகடன்