வெளியிடப்பட்ட நேரம்: 12:04 (26/06/2018)

கடைசி தொடர்பு:13:32 (26/06/2018)

தமிழக மருத்துவமனைகளில் சேரும் மருத்துவக் கழிவுகள் எப்படி அப்புறப்படுத்தப்படுகின்றன தெரியுமா?

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த பல்வேறு விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை சரியாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா?

தமிழக மருத்துவமனைகளில் சேரும் மருத்துவக் கழிவுகள் எப்படி அப்புறப்படுத்தப்படுகின்றன தெரியுமா?

குப்பைகள், தேவையற்ற கழிவுகள்தாம் நோய்க்கிருமிகளின் பிறப்பிடம். சின்னம்மை முதல் பல்வேறு நோய்கள் குப்பைகளிலிருந்துதான் உருவாகின்றன. குப்பைகளை முறையாகப் பராமரித்து மறுசுழற்சி செய்தோமானால் பல நோய்களை வென்றுவிட முடியும். நாம் அன்றாடம் வீடுகளில் பயன்படுத்தி ஒதுக்கும் சாதாரணக் குப்பைகளாலேயே இவ்வளவு பிரச்னைகள் என்றால், மருத்துவக் கழிவுகளில் சொல்லவா வேண்டும்..? 

தமிழகம், இந்தியாவின் மருத்துவத் தலைநகரமாக மாறியிருக்கிறது. உலகெங்குமிருந்து சிகிச்சை பெறுவதற்காக சென்னை, கோவை போன்ற நகரங்களுக்கு வருகிறார்கள். திடீர் திடீரென கார்ப்பரேட் மருத்துவமனைகள் முளைத்து வருகின்றன. இச்சூழலில், இந்த மருத்துவமனைகளில் சேரும் மருத்துவக் கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படுகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. இதுபோதாதென்று, சர்வசாதாரணமாகத் தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிக்குள் வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டிச் செல்கிறார்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். அதைத் தடுக்கக்கோரி அந்தப் பகுதி மக்கள் பலமுறை அரசுக்குக் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.  

மருத்துவக் கழிவுகள்

மருத்துவக் கழிவுகளை எவ்வாறெல்லாம் அகற்ற வேண்டும்... அதில் உள்ள ஆபத்துகள் என்னென்ன...  தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகள் எப்படி அப்புறப்படுத்தப்படுகின்றன...? 

மருத்துவக் கழிவுகளில் பெரும்பாலானவை, மிகவும் ஆபத்தானவை. அவற்றை முறைப்படி அழிக்க வேண்டும். முதலில், கழிவுகளைத் தனித்தனியாகத் தரம் பிரிக்க வேண்டும். சில கழிவுகளை மறுசுழற்சி செய்யலாம்.  சில கழிவுகளை புதைத்து முறையாக சிவக்குமார் அப்புறப்படுத்தவேண்டும். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை மருத்துவக் கழிவுகளை  அப்புறப்படுத்த பல்வேறு விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.  ஆனால்,  அந்த விதிமுறைகள் சரிவரக் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உலவுகிறது. சென்னையைப் பொறுத்தவரை கொடுங்கையூர், பள்ளிக்கரணை போன்ற குப்பை கொட்டும் இடங்களில் குப்பையோடு குப்பையாக மருத்துவக் கழிவுகளையும் கொட்டி விடுவதாகப் புகார்கள் உண்டு.  மருத்துவக் கழிவுகள்  பாதுகாப்பாக அகற்றப்படுவதை  மாவட்ட நிர்வாகம், தலைமை மருத்துவமனை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். ஆனாலும், இந்த விஷயத்தில் அதிகாரிகள் பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை என்கிறார்கள் மருத்துவச் செயற்பாட்டாளர்கள். 

சென்னையைப் பொறுத்தவரை இரண்டு தனியார் நிறுவனங்கள் தென் சென்னை, வட சென்னைப் பகுதிகளில் இருக்கும் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் கழிவுகளைப் பெற்று அப்புறப்படுத்தி வருகின்றன. 

மருத்துவக் கழிவுகள் எப்படிக் கையாளப்படுகின்றன என்பது குறித்து மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்தும் தனியார் நிறுவனத்தின் மேலாளர் பா.சிவக்குமாரிடம் பேசினோம். ``தென் சென்னை பகுதிகளில் இயங்கிவரும் பெரும்பாலான மருத்துவமனைகள் எங்களின் வாடிக்கையாளர்கள்.  இதில் கால்நடை மருத்துவமனைகளும் அடங்கும். மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த மத்திய அரசு 1998-ம் ஆண்டு ஒரு வரைமுறையை அறிவித்தது. அதன்படி, அந்தந்த மருத்துவமனைகளிலேயே `இன்சினரேட்டர்’ (Incinerator) என்ற கழிவுகளை எரிக்கும் இயந்திரம் வைத்திருக்க வேண்டும். இந்த முறை சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்ததால், இந்த வரைமுறைகளை மாற்றி அவற்றைத் தரம் பிரித்து மொத்தமாக ஓர்  இடத்தில் வைத்து அப்புறப்படுத்த வேண்டும் என்று 2016-ம் ஆண்டு சட்டம் கொண்டுவந்தது அரசு. அதன்படி அனைத்து மருத்துவமனைகளும் அரசின் அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்துக்கொண்டு கழிவுகளை கொடுக்க வேண்டும். அவர்கள் கழிவுகளை சட்டத்துக்கு உட்பட்டு முறையாக அப்புறப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளிலிருந்து 48 மணி நேரத்துக்கு ஒரு முறை கழிவுகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. அதை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

மருத்துவமனைகளில் கழிவுகளை நான்கு விதமாகத் தரம் பிரித்துச் சேகரிக்க வேண்டும் என்று விதிமுறை இருக்கிறது. கழிவுகளை சேகரிக்க  நான்கு வெவ்வேறு நிறப் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் மருத்துவமனைகளின் பெயர் கொண்ட ஸ்டிக்கர்களை நாங்கள் ஒட்டிக் கொடுப்போம். இதற்கென மருத்துவமனை ஊழியர்களுக்குப் பிரத்யேகப் பயிற்சிகளையும் வழங்குகிறோம். தவறாகக் கழிவுகளைக் கொட்டும் மருத்துவமனைகளை எளிதில் கண்டறிந்து அவர்களுக்குக் கூடுதல் பயிற்சிகள் வழங்குகிறோம். பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து தார்சாலை போடுவதற்காகக் கொடுக்கிறோம்.

கழிவுகள் நான்கு விதமாக அப்புறப்படுத்தப்படுகிறது.

* எரிப்பது (Incinerator)

* குப்பைகளில் கொட்டுவதற்கு முன் உயர் அழுத்த இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தும் முறை (Autoclave)

* மறுசுழற்சி செய்வது (Recycle)

* மக்கும் கழிவுகளை நிலத்தில் ஆழமாகப் புதைப்பது (Deep Burial)

மருத்துவக் கழிவுகள்

*மனித உடல் உறுப்புக் கழிவுகள், விலங்குகள் உடல் உறுப்புக் கழிவுகள், காலாவதியான மருந்துகள், வேதிப் பொருள் கழிவுகள், ஆய்வகக் கழிவுகள் போன்றவற்றை மஞ்சள் நிறப் பையில் போடவேண்டும். இவற்றை இன்சினரேட்டரில் போட்டு எரித்துவிடுவோம். எரிக்கப்பட்ட சாம்பலை அதைப் புதைக்கும் நிறுவனத்துக்கு அனுப்பிப் புதைத்துவிடுவோம்.

* கெட்டுப்போன மருந்துப் பொருள்கள், குழாய்கள், சிறுநீர்ப் பைகள், ஊசி நீக்கப்பட்ட சிரிஞ்ச், கையுறைகள் போன்ற பிளாஸ்டிக் பொருள்களை சிவப்பு நிறப் பைகளில் போட வேண்டும். அவற்றை ஆட்டோகிளேவ் முறையில் அதிக வெப்பத்தில் சூடுபடுத்தி உருக்கி மறுசுழற்சி செய்து, துண்டு துண்டாக வெட்டி சாலைகள் போடுவதற்காக அனுப்பிவிடுவோம்.

* கத்தி, உடைந்த கண்ணாடி போன்ற கூர்மையான கழிவுகளை வெள்ளை நிறத்தில் இருக்கும் பிளாஸ்டிக் பெட்டிகளில் போடவேண்டும். மறுசுழற்சி செய்யத் தகுந்த பொருள்களைத் தனியாகப் பிரித்து மறுசுழற்சி செய்துவிடுவோம். மற்றவற்றைப் புதைத்துவிடுவோம். 

* கண்ணாடிப் பொருள்கள், மரப் பெட்டிகள் போன்றவற்றை நீல நிறப் பெட்டிகளில் கொட்ட வேண்டும். மறுசுழற்சி செய்தது போக மீதியைக் குப்பைக் கிடங்குகளில் கொட்டிவிடுவோம்.

மருத்துவர் ரவீந்திரநாத்இந்த விதிமுறைகளை பின்பற்றியே மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். ஒரு சில சிறிய மருத்துவமனைகள், ஆய்வகங்கள், அக்குபஞ்சர் நிலையங்கள் கழிவுகளை முறையாகப் பிரித்து அப்புறப்படுத்துவதில்லை. இதுவே பிரச்னைகளுக்குக் காரணமாகிவிடுகின்றன. மருத்துவமனைகள் எங்களுக்குப் பணம் கட்டி கழிவுகளை வெளியேற்றுகின்றன. எங்களிடம் வாடிக்கையாளர்களாக இருக்கும் மருத்துவமனைகளில் முறையாகக் கழிவுகள் அகற்றப்படுகின்றன’’ என்கிறார் பா.சிவக்குமார்.

`மருத்துவக் கழிவுகள் அப்புறப்படுத்தும் பணியை இன்னும் பலமடங்கு மேம்படுத்த வேண்டும்..." என்கிறார் சமூகச் சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கப் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்.

``கேரளாவிலிருந்து லாரி லாரியாக மருத்துவக் கழிவுகள் கொண்டுவந்து தமிழ்நாட்டு எல்லையில் கொட்டப்படுகிறது. அரசு முதலில் அதைத் தடுக்க வேண்டும். மருத்துவக் கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படுகின்றனவா என்பதை அந்தந்த மாவட்டச் சுகாதார, மருத்துவ, உள்ளாட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இதை மருத்துவமனைகள் சரியாகச் செய்கின்றனவா என்பதைக் கண்காணித்து முறைப்படுத்த வேண்டும்..." என்கிறார் அவர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்