ஜூஸ், வெந்நீர், தூக்கம், டான்ஸ்... `பிக் பாஸ்’ ஜனனியின் ஃபிட்னெஸ் பின்னணி #FitnessTips

``நான் ஃப்ரெஷ்ஷா இருக்கறதுக்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா?’’ - `பிக் பாஸ்’ ஜனனி #FitnessTips

ஜூஸ், வெந்நீர், தூக்கம், டான்ஸ்... `பிக் பாஸ்’ ஜனனியின் ஃபிட்னெஸ் பின்னணி #FitnessTips

மிழ் சினிமாவில் `அவன் இவன்' படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜனனி ஐயர். இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் வெகுளியான பெண் போலீஸாக நடித்ததன் மூலம், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். `விண்மீன் விதையில்' இவரது அடையாளம். இயல்பான, யதார்த்தமான கதாபாத்திரம் கிடைத்தால், நடிப்பில் வெளுத்து வாங்குவார். `தெகிடி', `அதே கண்கள்', `பலூன்' போன்ற படங்கள் அவரது நடிப்புக்குச் சிறந்த உதாரணங்கள். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் பிஸியாக இருந்தவர், இப்போது `பிக் பாஸ் சீசன் 2’ நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருக்கிறார். அண்மையில், தனது பெயரின் பின்னால் உள்ள `ஐயர்’ என்ற அடையாளத்தை நீக்கிவிட்டார். தன் உடல்வாகை அப்படியே மெயின்டெயின் செய்யும் ஜனனி, பிக்பாஸ் வீட்டுக்குச் செல்லும் முன் நம்மிடம் பகிர்ந்துகொண்ட ஃபிட்னெஸ் சீக்ரெட் இங்கே... 

ஜனனி ஐயர்


``நான் வொர்க்-அவுட், எக்சர்சைஸ் விஷயங்களில் பெருசா கவனம் செலுத்துறதில்லை. உணவுப்பழக்கத்துல மட்டும் ரொம்பக் கவனமா இருப்பேன். என்னோட ஃபுட் மெனுவிலிருக்கும் உணவுகள் ஊட்டச்சத்து அதிகமுள்ளதாக, எனக்குப் பிடிச்சதாக இருக்கணும்னு நினைப்பேன். அதேநேரம், எவ்வளவு சாப்பிடுகிறேன்கிறதுலயும் கவனமாக இருப்பேன். அரிசி சாதம் என்னோட ஃபேவரைட். அதைத் தேவையான அளவுக்குச் சாப்பிடுவேன்.

ஒரு நடிகையா என்னோட அழகுக்குத்தான் நிறைய முக்கியத்துவம் தரவேண்டியிருக்கு. ஆக, அழகுக்காக நான் செய்யுற விஷயங்களை முதல்ல சொல்லிடுறேன். தினமும் காலையில வெறும் வயிற்றில், பீட்ரூட் (அ) கேரட் (அ) தக்காளி ஜூஸ் குடிப்பேன். தினமும் பீட்ரூட் ஜூஸைக் குடிக்க முயற்சி பண்ணுவேன். காரணம், அது சருமப் பொலிவை அதிகரிக்க உதவும். ஸ்கின்கேர்ல முக்கியமான விஷயம், சோப், ஃபேஸ்வாஷ், க்ளென்ஸர் (cleanser) ஆகியவைதாம். கெமிக்கல், செயற்கைப் பொருள்களை நான் பயன்படுத்த மாட்டேன். அதேபோல, குளிர்ந்த நீரில்தான் முகம் கழுவுவேன். என் சருமத்துக்கு எந்தச் சூழலிலும் தடிமனான, கடினமான, செயற்கையானப் பொருள்களைப் பயன்படுத்துறதே இல்லை. இதுதான் என்னோட ஸ்கின் சீக்ரெட்!

ஜனனி

அடுத்ததா, என்னோட டயட் ஷெட்யூலைச் சொல்றேன்... பொதுவாக எல்லாரும் சாப்பிட்டு முடிச்சதும், சாதாரணத் தண்ணீர் இல்லைன்னா குளிர்ந்த நீரைத்தான் குடிக்க ஆசைப்படுவாங்க. நான் கொஞ்சம் வித்தியாசமான பொண்ணு. சாப்பிட்டு முடிச்சவுடனே, ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பேன். இந்தப் பழக்கத்தை, எங்க அம்மாதான் எனக்குச் சொல்லிக் கொடுத்தாங்க. வீடு, ஹோட்டல், ஷூட்டிங் ஸ்பாட்னு எந்த இடத்துல சாப்பிட்டாலும், கண்டிப்பாக ஒரு டம்ளர் வெந்நீர் குடிச்சுடுவேன். `கொழுப்புச்சத்து நிறைந்த உணவைச் சாப்பிட்டா செரிமானச் சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு. வெந்நீரைக் குடிச்சா, செரிமானம் வேகமாகவும் சீராகவும் நடக்கும். சருமம் பொலிவுறும்...’னு எங்க அம்மா சொல்வாங்க. நானும் அந்த மாற்றத்தை உணர்ந்திருக்கேன். என்னோட நிறைய நண்பர்களுக்கு இதைப் பரிந்துரை செஞ்சிருக்கேன். வாய்ப்பிருந்தா,  நீங்களும் முயற்சிப் பண்ணிப் பாருங்க! (சிரிப்போடு சொல்கிறார்).

ஃபிட்னெஸ் ஜனனி ஐயர்

உடற்பயிற்சிகள்ல, எனக்கு யோகாதான் ஓரளவுக்குச் செய்யத் தெரியும். படப்பிடிப்பு இல்லாத நாள்கள்ல, காலை நேரத்துல வீட்டுலேயே யோகா செய்வேன். நான் தினமும் செய்யுற முக்கியமான பயிற்சிகள் ரெண்டுதான். ஒண்ணு நடனப்பயிற்சி, அப்புறம் நீச்சல். தினமும் காலையில ஒரு மணி நேரம் டான்ஸ் க்ளாஸ் போறேன். நேரம் கிடைக்கும்போது நீச்சல்குளத்துக்குப் போவேன். இந்த ரெண்டும், உடலின் அனைத்துத் தசைகளுக்கும் வேலை கொடுக்கும் பயிற்சிங்கிறதால, தனியாக உடற்பயிற்சி செய்யவேண்டிய அவசியம் ஏற்படும். தினசரி காலை நேரத்துல உடற்பயிற்சி செய்ய வாய்ப்பில்லாதவங்க, இந்த ரெண்டையும் குறிப்பிட்ட நேரத்துக்குச் சரியாக ஃபாலோ பண்ணினாலே போதும். உடலுக்குப் புதுத்தெம்பு கிடைக்கும். உணவுப்பழக்கத்துல, பிடிச்ச உணவுகளை மட்டும்தான் தேர்வு செய்வேன். சில நேரங்கள்ல கார்போஹைட்ரேட்ஸ், கலோரி, கொழுப்புச்சத்து அதிகமிருக்கும் உணவுகளைச் சாப்பிடவேண்டிய சூழல் ஏற்படும். அதிகமாகச் சாப்பிட்டாலோ, கலோரி அதிகமிருக்கும் உணவைச் சாப்பிட்டாலோ அதை ஈடுகட்ட நீச்சலும் நடனமும் ரொம்ப உதவியா இருக்கும்.

நான் எப்பவும் ஃப்ரெஷ்ஷா இருக்கறதுக்கு முக்கியக் காரணம்,  உடம்புக்கு நான் கொடுக்குற ரெஸ்ட்தான். தேவையான அளவுக்கு உடலுக்கு ஓய்வு கொடுக்கலைன்னா, கண்ணு காட்டிக்கொடுத்துடும். ஷூட்டிங்ல சோர்ந்து போன கண்களோட கேமராவுக்கு முன்னாடி போய் நின்னா, மானிட்டர்ல தெரிஞ்சுடும். பிஸியான நேரத்துல தூங்கவும் முடியாது. ஆக, என்ன ஆனாலும் சரி, தினமும் ஆறிலிருந்து எட்டு மணி நேரம் வரைக்கும் தூங்கிடுவேன். எவ்வளவு பிஸி ஷெட்யூலா இருந்தாலும், அதுக்கேத்த மாதிரி என்னோட மத்த வேலைகளை அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்’’ என்கிறார் ஜனனி.
 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!