பாரம்பர்ய சிகிச்சை, நவீன வசதிகள்... தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் ஒரு நாள்! | Traditional treatment, modern facilities - Tambaram, National Siddha Hospital!

வெளியிடப்பட்ட நேரம்: 17:26 (03/07/2018)

கடைசி தொடர்பு:17:26 (03/07/2018)

பாரம்பர்ய சிகிச்சை, நவீன வசதிகள்... தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் ஒரு நாள்!

பாரம்பர்ய சிகிச்சை, நவீன வசதிகள்... தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் ஒரு நாள்!

சித்த மருத்துவம், கண்டுகொள்ளப்படாத ஒரு மருத்துவமாக இருந்தது. இன்றைக்கு மக்களிடையே ஏற்பட்ட விழிப்புஉணர்வு, சித்த மருத்துவத்தின் சிறப்புகளை அறிந்துகொண்டதன் காரணமாக அதை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள் மக்கள். நாமும் அங்கே ஒரு `விசிட்' அடித்தோம்.

தேசிய சித்த மருத்துவமனை

தேசிய சித்த மருத்துவ நிறுவனம், தாம்பரம் சானடோரியத்தின் ஓர் அடையாளம். இந்திய மருத்துவத்தை ஊக்குவிக்கும் அரசின் ஏழு கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்த மருத்துவமனை 14.78 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. நிசப்தம் நிலவும் மருத்துவமனை வளாகத்தில், 300 வகையான மூலிகைச் செடிகளையும் மரங்களையும் பார்க்க முடிகிறது. வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் துறை, கற்பித்தல் மற்றும் நிர்வாகத்துக்கென தனி தனி கட்டடங்களுடன் செயல்படுகிறது இந்த மருத்துவமனை. இங்கே சராசரியாக ஒரு நாளைக்கு 2,000 முதல் 2,500 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வருடத்தில் 365 நாள்களும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை வெளி நோயாளிகளுக்கும், 24 மணி நேரமும் உள் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  

வெளி நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகளுக்கு அந்தந்த நோய்களுக்கு ஏற்ப வர்மம், தொக்கணம், அட்டைவிடுதல், பற்று, ஒத்தடம், புகை, சுட்டிகை மற்றும் யோகம் ஆகிய சித்த மருத்துவமுறைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சர்க்கரைநோய், இதயநோய், ஆஸ்துமா, மூலம், காயங்கள், சிராய்ப்பு, தீக்காயங்கள் போன்றவற்றுக்குச் சிறப்பாகச் சிகிச்சை அளிக்கிறார்கள். முதியோர் நலம், மகளிர் மருத்துவம், யோகம் - காயகல்பம், உடல் பருமன், ஒப்பனையியல், மகப்பேறின்மை, ஆட்டிசம் மற்றும் புற்றுநோய் போன்றவற்றுக்கும் சிகிச்சை அளிக்கிறார்கள்.

முதலில், குழந்தைகளை பாதிக்கும் நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் பகுதிக்குச் சென்றோம். சரும நோய்கள், கரப்பான், சொறி சிரங்கு, பூச்சிக்கடியால் ஏற்படும் அலர்ஜி ஆகியவற்றுக்கு இங்கே சிகிச்சை அளிக்கிறார்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் பசியின்மை, மலச்சிக்கலுக்குச் சுக்கு, மிளகு போன்ற அஞ்சறைப் பெட்டி மருந்துகளை முறைப்படுத்தி, நோயின் நிலைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ஓமத்தண்ணீர், மாதுளம்பழ சிரப் (syrup), தயிர்சுண்டி சூரணம் ஆகியவை குழந்தைகளின் உடல்நிலையை ஒரு நாளிலேயே சரிசெய்துவிடலாம் என்பது போன்ற எளிய முறைகளைச் சொல்லித் தருகின்றனர். 

மருத்துவமனையில் நோயாளிகளுடன் உறவினர்கள்

மேலும், சில குழந்தைகளுக்குப் பிறக்கும்போதே இயற்கையாக ஏற்படும் மூளை வாதம், குழந்தையின் ஒரு பக்க உறுப்புகளின் செயல்பாடு குறைவாக இருப்பதால் உண்டாகும் பால வாதத்துக்கும் இங்கே சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆட்டிசம், ஹைப்பர்ஆக்டிவ் டிஸ்ஆர்டர், ஏ.டி.ஹெச்.டி (Attention Deficit Hyperactivity Disorder), கற்றல் கோளாறுகள் ஆகிய பிரச்னைகளுக்கும் இங்கே சிகிச்சை கொடுக்கிறார்கள். உடம்பில் முக்கியமான புள்ளிகளை அழுத்தி, மூளை அல்லது செயலிழந்த நரம்புகளை மீண்டும் செயல்படவைக்கும் வர்ம சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. அதோடு பிசியோதெரபியும் தரப்படுகிறது. 

சிதம்பரத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து கடந்த இரண்டரை மாதமாக சிகிச்சை பெற்றுவருகிறார். அவரிடம் குழந்தைக்கு என்ன பிரச்னை என்று விசாரித்தோம்... ``முன்னாடில்லாம் பேச மாட்டான்; நடக்க மாட்டான். கை, கால் நேரா நிக்காது. இப்போ நல்லா நிக்குறான். சில வார்த்தைகளைப் பேசுறான். எவ்வளவு கூப்பிட்டாலும் ரெஸ்பான்ஸே பண்ணாம இருந்தவன், இப்போ ரியாக்‌ஷன் கொடுக்குறான்’’ என்றார். 

மருத்துவமனை கேண்டீன்

பெண்கள் தொடர்பான எல்லா நோய்களுக்கும் தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை, சூதகத்தடை (Absence of Menstruation), மாதவிடாயின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு (Menorrhagia) ஆகியவற்றுக்கும், `கர்ப்பப்பைக் கட்டி’ (Fibroid) எனப்படும் நார்த்திசுக் கட்டிப் பிரச்னைக்கும் சிகிச்சை... மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் மனக்குழப்பங்களுக்கு நோயாளிக்குத் தேவையான கவுன்சலிங் (counselling) கொடுக்கிறார்கள். மகப்பேறின்மைக்காக ஆண்,பெண் இரு பாலருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை இதற்கெனச் சிறப்பு ஓ.பி (புறநோயாளிகள் பிரிவு) இயங்குகிறது. மார்பகங்களில் உண்டாகும் நீர்க்கட்டி, உடல் பருமன் ஆகியவற்றையும் கவனிக்கிறார்கள். பிரசவம் தவிர, கர்ப்பிணிகளுக்குத் தேவையான அனைத்துச் சிகிச்சைகளும், உதவிகளும் இங்கே வழங்கப்படுகின்றன. 

கழுத்துவலி, இடுப்புவலி, பக்கவாதம், தூக்கமின்மை, மனநிலை மாறுபாடுகள், தலைவலி ஆகியவற்றுக்கு வர்ம சிகிச்சை கொடுக்கிறார்கள். அங்கே வந்திருந்த 72 வயது ஜெயலட்சுமியிடம் பேசினோம்...``எனக்குப் பக்கவாதத்தால கை, கால் செயல்படாமப் போச்சு. ஆறு மாசமா சிகிச்சை எடுக்குறேன். இப்போ கொஞ்சம் பரவாயில்லை. தைலம், லேகியம், மாத்திரைனு நிறைய மருந்துகள் தர்றாங்க’’ என்றார்.

எலும்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எண்ணெய் தடவுதல் முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தைகள், வயதானவர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் முறிவு, அடிபடுவதால் ஏற்படும் முறிவு உள்ளிட்ட பல குறைபாடுகளுக்கும் தீர்வு கிடைக்கிறது. 

மருத்துவமனை

`அட்டைவிடுதல்’ பகுதி, பிரமிப்பை ஏற்படுத்துகிறது. `அட்டைவிடுதல்’ என்பது, உடலிலுள்ள அசுத்தமான ரத்தத்தை நீக்குவதற்கு அல்லது சுத்தப்படுத்துவதற்கு பாதிப்புக்குள்ளான இடத்தில் அட்டையைவிடும் முறை. அட்டையைக் குறிப்பிட்ட அந்த இடத்தில் கடிக்கவிட்டால், தேவையில்லாத ரத்தம் உறிஞ்சப்படும். காயம்பட்ட இடத்திலிருந்து அதிகபட்சமாக 120 மி.லி வரை ரத்தத்தை உறிஞ்சிவிடுமாம் அட்டை. ஒரு நோயாளிக்கு நான்கு அட்டைகளை கடிக்கவிடுகிறார்கள். `இந்த அட்டை கடிப்பதால் வலி இருக்காது; இதன் மூலம் கரப்பான், புழுவெட்டு, மூட்டு வீங்குதல், அடிபட்ட வீக்கம் போன்ற பாதிப்புகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்கிறார்கள்.  
பெளத்திரம் பிரச்னைக்கு, `கார நூல்’ எனப்படும் மருந்து நூலைக் கொண்டு சிகிச்சை அளிக்கிறார்கள். இந்த மருத்துவமனையில் எளிய ஆசனப் பயிற்சிகள், மூச்சுப்பயிற்சிகளும் கற்றுத்தரப்படுகின்றன. நோய்களுக்கு ஏற்ப யோகா கற்றுத் தரப்படுகிறது. ரத்த அழுத்தம், மன அழுத்தம், தூக்கமின்மை ஆகியவற்றுக்கு யோக மருத்துவச் சிகிச்சையும் தருகிறார்கள்.

சித்த மருத்துவ அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும்  இ.சி.ஜி, எக்ஸ்ரே, யு.எஸ்.ஜி (உயரிய ரத்த சோதனை), பயோ கெமிக்கல் டெஸ்ட் (Bio-chemical Test), நுண்ணுயிரியியல் சோதனை (Microbiological Test),நோய்க் குறியியல் சோதனை (Pathological Test), சித்தா நோய் கண்டறியும் சோதனை (Siddha diagnostic Test) மற்றும் மருந்தகம் (Pharmacology) ஆகிய நவீன வசதிகளும் இங்கே இருக்கின்றன. மொத்தத்தில் எளியோர் முதற்கொண்டு எல்லோரும் பயனடையும் வகையில் சிறப்பாகச் செயல்படுகிறது இந்தச் சித்த மருத்துவமனை!


டிரெண்டிங் @ விகடன்