``அடிப்படை உரிமைகளைப் பறித்தால் கிராமத்தில் எப்படிப் பணியாற்றுவது?’’ - மருத்துவர்கள் குமுறல்

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் தீர்க்கப்படாமல் இருப்பதால், `3 ஆண்டுகள் கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும் என்ற குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மருத்துவர்கள்!

``அடிப்படை உரிமைகளைப் பறித்தால் கிராமத்தில் எப்படிப் பணியாற்றுவது?’’ - மருத்துவர்கள் குமுறல்

`நீட் தேர்வு... முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் 50 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து...’, `மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்...’, `மன அழுத்தத்தால் பள்ளிக்கரணையைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஆனந்தன் தற்கொலை...’  என அண்மைக்காலமாக வெளியாகும் செய்திகளால் அனைவரின் கவனமும்  மருத்துவத் துறையைச் சுற்றியே சுழல்கிறது. இந்த நிலையில், `மருத்துவர்கள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளாவது கிராமப்புறங்களில் பணியாற்றுவதைக் கட்டாயமாக்க வேண்டும்’ என்று டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு பேசியிருக்கிறார். 

அரசு மருத்துவர்கள் போராட்டம்

கடந்த சில நாள்களாக அரசுப் பணியிலிருக்கும் மருத்துவர்கள் பல்வேறுவிதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தச் சூழலில், `மருத்துவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும்’ என்ற வெங்கைய நாயுடுவின் பேச்சு, மருத்துவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ``மருத்துவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்றத் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால், அரசு மருத்துவர்களுக்கான அடிப்படை உரிமையே இங்கு பறிக்கப்படும்போது, எப்படி அவர்களால் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற முடியும்? முதலில் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுங்கள்’’ என்கிறார்கள் மருத்துவச் செயற்பாட்டாளர்கள்.

அரசு மருத்துவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு, ஒவ்வொரு மருத்துவரும் இரண்டு ஆண்டுகள் அரசு ஆரம்பச் சுகாதார மையங்களில் பணியாற்ற வேண்டும். அதன் பிறகு `உதவி மருத்துவர்’, `மருத்துவர்’ எனப் படிப்படியாகத்தான் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவராக முடியும். இதுதான் மருத்துவர் தேர்வில் முன்பிருந்த நடைமுறை. ஆனால், கடந்த 2012-ம் ஆண்டில் அரசாணை மூலம், `மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்’ (Medical Services Recruitment Board -MRB) உருவாக்கப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் இருக்கும் காலியிடங்களுக்கு இந்த வாரியம் மூலமாகத்தான் மருத்துவர்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.  

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்

``மருத்துவப் பணியாளர் தேர்வு நடைமுறையில் மாற்றம் வந்ததிலிருந்தே, அரசு மருத்துவர்களிடம் மன உளைச்சல் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதன் காரணமாகத்தான் டாக்டர்கள் இன்றைக்கு வீதிக்கு வந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்’’ என்று கொந்தளிப்போடு நம்மிடம் பேசத்தொடங்கினார் இளம் மருத்துவர் கோபி. 

``மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை. இந்தத் தேர்வு முறையில் ஒரு மருத்துவர் எந்த அரசு மருத்துவமனையிலும் பணியாற்றாமல், நேரடியாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சேர்ந்துவிடுகிறார். அதாவது, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் சிலர் பட்டமேற்படிப்பை முடிக்கிறார்கள். பிறகு சிபாரிசின் மூலமாக நேரடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சேர்ந்துவிடுகிறார்கள். கிராமப்புறங்களில் பணியாற்றியவர்களால் தலைமை மருத்துவமனைக்கு வர முடியாத நிலைதான் இருக்கிறது. இப்படிக் குறுக்கு வழியில் அரசு மருத்துவமனையில் சேர்ந்தவர்களிடம் எப்படிச் சேவையை எதிர்ப்பார்க்க முடியும்? அதனால்தான் மருத்துவச் சேவையின் தரம் குறைந்துவருகிறது. முதலில் இந்தக் குறைப்பாட்டைச் சரிசெய்ய வேண்டும்’’ என்கிறார் ஆதங்கத்துடன் கோபி.

டாக்டர்

``மருத்துவர்கள் சந்தித்துவரும் அடிப்படைப் பிரச்னைகள் என்னென்ன...  மருத்துவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற என்னென்ன மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும்?’’ -  சமூகச் சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்திடம் பேசினோம்.

``அரசு மருத்துவர்கள் கிராமப்புறங்களில் சேவையாற்ற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அது வரவேற்கவேண்டிய ஒன்றுதான். கிராமப்புறங்களில் பணியாற்றுபவர்களுக்கு உரிய ஊதியம் கொடுக்கப்பட வேண்டும். அமெரிக்கா உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளில் இப்படிக் கொடுத்துத்தான் மருத்துவர்களை ஊக்குவிக்கிறார்கள். ஆனால், இங்கு அவர்களுக்கான உரிமைகள்கூட மறுக்கப்படுகின்றன.  

`முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும்’ என்ற வாக்குறுதியோடுதான் இளம் மருத்துவர்கள் ரவீந்தரநாத்அரசு மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணியமர்த்தப்பட்டனர். தமிழக மருத்துவத் துறையில் பணியாற்றிவரும் மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டை ரத்துசெய்ய உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, அரசு மருத்துவர்களுக்குப் பிரச்னைகள் அதிகரித்துவிட்டன. கிராமப்புறங்களில் குறைந்த ஊதியம், கூடுதல் பணிச்சுமை, மாற்றுப்பணி, விடுப்பின்றி பணி... எனப் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து பணியாற்றிவரும்  அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மருத்துவ இடங்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுவிட்டது. உதாரணமாக, தமிழகத்தில் 100 இடங்கள் பட்ட மேற்படிப்புக்கு இருப்பதாக வைத்துக்கொள்வோம். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையால் நடத்தப்படும் அகில இந்தியப் பட்ட மேற்படிப்பு நுழைவுத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 15 இடங்கள் ஒதுக்கப்படும். மீதமுள்ள 85 இடங்களுக்குத் தமிழக அரசின் மருத்துவக் கல்வித் துறை தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்யும். இந்த 85 இடங்களில், 50 சதவிகிதம் அரசுப் பணியில் உள்ளவர்களுக்கும், மீதி உள்ள 50 சதவிகிதம் பொது மாணவர்களுக்கும் என ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. எம்.பி.பி.எஸ் படித்து முடித்து, பின்னர்  குறைந்தது இரண்டு முதல் மூன்று வருட காலம் அரசுப் பணியில் பணிபுரியும் மருத்துவர்கள் இந்த ஒதுக்கீட்டுக்குத் தகுதி பெறுகிறார்கள். மேலும், இந்த ஒதுக்கீட்டில் மேற்படிப்பில் சேரும் மருத்துவர்கள் அனைவரும், `பணி மூப்பு பெறும் வரை அரசாங்கப் பணியில் ஈடுபடுவோம்’ என்று ஒப்பந்த உறுதிமொழி கொடுக்கிறார்கள். இந்த ஒப்பந்தம் காரணமாகத்தான், அரசுப் பணிகள் எல்லா இடங்களிலும் குறையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.  மேலும், இதன் மூலம்  ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான அரசு மருத்துவர்கள் பயன்பெற்றுவந்தார்கள். இப்போது, இட ஒதுக்கீடும் இல்லை என்பதால், தங்களுடைய உரிமைக்காகப் போராடும் நிலைக்கு மருத்துவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க, அரசு மருத்துவமனையில் பணியாற்ற மருத்துவர்கள் எப்படி விரும்புவார்கள்? முதலில் முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும்’’ என்கிறார் ரவீந்திரநாத்.

மருத்துவர்கள் போராட்டம்

`` `தமிழக அரசு மருத்துவர்களுக்கு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதியம், பதவி உயர்வு, படிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்’ எனத் தமிழக அரசிடம் நீண்ட காலமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். பல முறை உயர் அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டன. பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’  என்ற குற்றச்சாட்டுடன் பேச்சை ஆரம்பிக்கிறார் அரசு அனைத்து டாக்டர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆர்.நவீன்ராஜ்...நவீன் ராஜா

`` `மருத்துவர்கள் கட்டாயம் மூன்று வருடங்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும்’ என்று குடியரசு துணைத் தலைவர் சொல்வதை அனைத்து மருத்துவர்களும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், அவர் சொல்வது மக்கள் மீதிருக்கும் அக்கறையால் அல்ல என்பது மட்டும் உண்மை. கிராமப்புறங்களில் பயிற்சி மருத்துவர்களை பணியமர்த்துவதால், அந்த மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவர்களை நியமிக்காமல் விட்டுவிடலாம். சில நாள்களுக்குப் பிறகு, `போதிய மருத்துவர்கள் இல்லை’ என்று சாக்குப்போக்குச் சொல்லி, ஆரம்ப சுகாதாரநிலையங்களை தனியார்மயமாக்கிக்கொள்ளலாம் என்ற நோக்கில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்கெனவே, ஆந்திரா, ராஜஸ்தான், தெலங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆரம்பச் சுகாதார மையங்கள் தனியார்மயமாக்கப்பட்டுவிட்டன.  இப்போது தமிழகத்திலும் இதை நடைமுறைப்படுத்தலாம் என்று முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் ஆரம்பச் சுகாதார மையங்களின் கட்டமைப்பு உறுதியாக இருக்கிறது. சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. இதைச் சீர்குலைக்கத்தான் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆரம்பச் சுகாதார நிலையங்களையெல்லாம் தனியாருக்குக் கொடுத்துவிட்டு, `அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும்’ என்று சொன்னால், எந்த மருத்துவமனைக்குச் செல்ல முடியும்? மேலும், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்களின் பயிற்சிகாலப் பயிற்சி ஊதியத்தை, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக உயர்த்த வேண்டும். இதையெல்லாம் செய்தால்தான் கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவர்கள் முன்வருவார்கள்’’ என்கிறார்  ஆர்.நவீன்ராஜ்.
 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!