வெளியிடப்பட்ட நேரம்: 16:41 (13/07/2018)

கடைசி தொடர்பு:16:41 (13/07/2018)

சர்க்கரை நோயாளிகள் பாகற்காயை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாமா?

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...

சர்க்கரை நோயாளிகள் பாகற்காயை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாமா?

பாகற்காய் என்றாலே பலர் முகம் சுழிப்பார்கள். காரணம், அதன் கசப்பு சுவை. பெரியவர்களே பாகற்காயை வெறுக்கும்போது, குழந்தைகளைப் பற்றிச் சொல்லத்தேவையில்லை. பாகற்காயைப் பார்த்தாலே முகம் கோணுவார்கள். ஆனால் பாகற்காயின் பயன்களை அறிந்தவர்கள் அதை  வெறுக்க மாட்டார்கள். சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். கல்லீரல், வயிறு, குடல் உள்ளிட்ட எல்லா உடல் உறுப்புகளையும் நோய்களிலிருந்துக் காக்கக்கூடியது பாகற்காய். ஏராளமான சத்துக்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.  

பாகற்காய்

பாகற்காயின் மருத்துவக் குணங்கள் குறித்துப் பேசுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் நித்யஶ்ரீ.  

"பாகற்காயில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே சத்துகள் நிறைந்திருக்கின்றன. இவை இரண்டுமே, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பவை.  பாகற்காயை ஜூஸ் செய்து குடிப்பதால் வயிறு மற்றும் குடல் பிரச்னைகள் சரியாகும். சிறுநீரகம்,  கல்லீரல் போன்ற உறுப்புகளில் ஏற்படும் நோய் தொற்றுகளிலிருந்தும் கவசமாக நின்று காக்கும். நித்யஶ்ரீ, ஊட்டச்சத்து நிபுணர்

சர்க்கரை நோய் வருவதற்கு முந்தைய நிலையான 'ப்ரீடயாபடிஸை' (PreDiabetes) தடுக்கும் ஆற்றல் பாகற்காய்க்கு உண்டு. இன்று உடல்பருமன் என்பது பொதுப்பிரச்னையாகி விட்டது. 80 சதவிகிதம் நீர்ச்சத்து நிறைந்த  பாகற்காயை, ஜூஸ் செய்தோ, உணவுகளில் சேர்த்து வேகவைத்தோ,  தயிருடன் சேர்த்து சாலட் செய்தோ சாப்பிட்டு வந்தால் உடல்எடை குறையும். பாகற்காயில் கொழுப்புச்சத்து, கலோரி, கார்போஹைட்ரேட் போன்றவை குறைந்த அளவே இருப்பதால் எடையைக் கட்டுக்குள் வைக்கும். புரதச்சத்து, நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் பிரச்னைக்கு மிகச்சிறந்த மருந்து. `டைப் 1' சர்க்கரை நோயாளிகளுக்கு, மிகவும் குறைந்த அளவே இன்சுலின் சுரக்கும். பாகற்காய் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். பாகற்காயில்  நீரில் கரையக்கூடிய வைட்டமின் சி, பி, தயாமின் மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஏ, கே என இரண்டு வகை வைட்டமின்கள் உள்ளன. இவை செரிமானக்கோளாறு, மூச்சுப்பிரச்னை, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்றவற்றைத் தவிர்க்க உதவும். குறைந்தபட்சம் வாரம் இருமுறையாவது அனைவரும் பாகற்காய் சாப்பிடவேண்டும். பாகற்காயில் அதன் விதையை நீக்கிவிட்டால், 75 சதவிகிதக் கசப்புத்தன்மை நீங்கிவிடும். பாகற்காயின் விதைகள், இதயத்தை காக்கும்; ரத்தச்சோகை ஏற்படுவதை தடுக்கும். முடிந்தவரை பாகற்காயின் விதைகளை ஒதுக்காமல் உட்கொள்வது ஆரோக்கியமானது.

இது தவிர, உடலின் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், அழற்சி (Inflammation) பிரச்னைகளைச் சரிசெய்யவும் உதவும். தோல் சுருக்கத்தைத் தடுக்கும். உடல் முதிர்ச்சியாவதைத் தள்ளிப் போடும். இதில், வைட்டமின் ஏ மற்றும் சி பாகற்காயில் நிறைந்திருப்பதால், தொடர்ச்சியாக பாகற்காய் சாப்பிடுபவர்களுக்கு அடர்த்தியான முடியும் பளபளப்பான சருமமும் கிடைக்கும். சரும நோய்களான சொரியாஸிஸ், அரிப்பு, தோல் தடித்து காணப்படுதல், ஒவ்வாமை போன்ற பிரச்னை இருப்பவர்கள் பாகற்காய் சாப்பிட்டால், மெள்ள மெள்ள அவற்றின் தீவிரம் குறையும்"  என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் நித்யஸ்ரீ.

பாகற்காய் ஜூஸ்

சர்க்கரை நோயாளிகள் பாகற்காய் சாப்பிடலாமா - ராஜ்குமார், சர்க்கரை நோயாளிகள் பாகற்காயை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாமா? 

சர்க்கரை நோய் நிபுணர் ராஜ்குமாரிடம் கேட்டோம்.

"இந்தியாவில்  ஒவ்வொரு ஆண்டும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து  வருகிறது. சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு, சர்க்கரையின் அளவு சீராக இருக்க வெந்தயமும் பாகற்காயும் பெரிய அளவில் உதவும். குறிப்பாக, பாகற்காய், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும். ஆனால், விருப்பத்துக்கு அளவில்லாமல் சாப்பிடக்கூடாது. சர்க்கரை நோய்க்காக மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள் பாகற்காய் சாப்பிட்டால், அவர்களுக்கு ரத்தச் சர்க்கரையின் அளவு வெகுவாகக் குறையக்கூடும். எனவே, மருத்துவர்களிடம்  ஆலோசனை பெற்று, அவர்கள் பரிந்துரைக்கும் அளவு மட்டுமே பாகற்காயை உட்கொள்வது நல்லது" என்கிறார் அவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்