`2016-ல் 32 லட்சம் பேருக்கு சர்க்கரைநோய்... காரணம் காற்று மாசுபாடு!’ #Diabetes

`காற்று மாசுபாடு காரணமாக சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படும்' - அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்

`2016-ல் 32 லட்சம் பேருக்கு சர்க்கரைநோய்... காரணம் காற்று மாசுபாடு!’ #Diabetes

ண்மையில், `லான்செட் பிளானட்டரி ஹெல்த் ஜர்னல்' (Lancet Planetary Health Journal) என்ற இதழில் ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது, `காற்று மாசுபாடு காரணமாக ஒருவருக்கு சர்க்கரைநோய் பாதிப்பு ஏற்படலாம்’ என்கிறது அந்த ஆய்வறிக்கை. ஏற்கெனவே மரபணு, வாழ்வியல் மாற்றங்கள், உணவு முறை... என இந்தத் தொற்றா நோய்க்கு எத்தனையோ காரணங்கள் அடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இப்போது காற்று மாசுபாடும் சேர்ந்துகொண்டு நம்மை அயர்ச்சியில் தள்ளியிருக்கிறது. அமெரிக்காவின் செயின்ட். லூயிஸிலிருக்கும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் குழுவும், வெடரன்ஸ் அஃபையர்ஸ் செயின்ட் லூயிஸும் (Veterans Affairs St. Louis) இணைந்து இந்த ஆய்வை நடத்தியிருக்கின்றன. 

சர்க்கரைநோய்

இந்த ஆய்வு குறித்து, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவரும் துணைப் பேராசிரியருமான சியாத் அல்-அலி (Ziyad Al Aly) இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்... `ஒருவர் என்ன சாப்பிடுகிறார் என்பதுதான் அவருடைய ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கிறது. அவர் எதைச் சுவாசிக்கிறார் என்பதும் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் என்பதைத்தான் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இந்த ஆய்வில், காற்று மாசுபாடு உடலிலிருக்கும் குளுக்கோஸ் ஆற்றலாக மாறுவதைத் தடுப்பதும், இன்சுலின் உற்பத்தியைத் தடுப்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது...'  

`காற்று மாசுபாடு காரணமாக டைப் 2 சர்க்கரைநோய் பாதிப்புதான் அதிகளவில் ஏற்படும்’ என்கிறது ஆய்வு. 2016-ம் ஆண்டில் மட்டும் உலகளவில் காற்று மாசுபாட்டால் 32 லட்சம் பேர் சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

காற்று மாசுபாடும் சர்க்கரைநோயும்

காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும்போது பி.எம். 2.5 (PM 2.5) என்ற நுண்ணுயிர், சுவாசம் மூலமாக மூச்சுக்குழாயைச் சென்றடையும். அங்கிருந்து, நுரையீரல் மூலமாக ரத்தத்தில் கலந்து இன்சுலின் செயல்பாட்டையும், இன்சுலின் உற்பத்தியையும் பாதிக்கும். இன்சுலின் செயல்பாடு தடுக்கப்படும்போது, டைப் 2 சர்க்கரைநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். அமெரிக்கன் டயாபெட்ஸ் அசோசியேஷன் (American Diabetes Association), `உடலில் இன்சுலின் குறைந்தால், சர்க்கரைநோய் மட்டுமல்ல, உடல் பருமன் பாதிப்பும் ஏற்படலாம்’ என்கிறது.

பி.எம் (Particle Matter) என்பது, காற்றிலுள்ள தூசுகளைக் குறிப்பது. பெரும்பாலும் இது, வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையிலிருந்துதான் அதிகளவில் உருவாகும். சுவாசத்தின் மூலம் உடலைச் சென்றடையும் பி.எம் அளவுகள் அனைத்தும் ரத்தத்தோடு கலந்துவிடுவதில்லை. மாறாக, இருமல் மூலம் வெளியேறிவிடும். பத்து டயாமீட்டருக்கும் குறைவான நுண்ணுயிர்கள் மட்டும்தான், நுரையீரலைச் சென்றடையும்.

காற்று மாசுபாடு

வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வுப்படி, `பி.எம் அளவு 2.4-க்கு மேல் இருந்தால், அது உடலில் ஏற்படுத்தும் பாதிப்பின் தீவிரம் அதிகமாக பாஸ்கர் ஆனந்த், சர்க்கரை நோய் சிறப்பு நிபுணர்இருக்கும்.’ 

சர்க்கரைநோய் நிபுணர் பாஸ்கர் ஆனந்திடம் இந்த ஆய்வு குறித்துப் பேசினோம்... ``இந்த ஆய்வு, காரணத்தையும் விளைவையும் முன்னிறுத்தி செய்யப்பட்டது. மருத்துவத்தில் இது போன்ற ஆய்வுகள், `கோஹார்ட் ஸ்டடி’ (Cohort study) எனக் கூறப்படுகின்றன. ஏறத்தாழ எட்டரை ஆண்டுகளாக நடந்த இந்த ஆய்வில், `காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும் இடங்களில் வாழ்ந்தவர்களில் சிலர், சர்க்கரைநோயால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்’ எனக் கண்டறியப்பட்டிருக்கிறது. ஒருவருக்கு சர்க்கரைநோய் ஏற்பட இன்சுலின் குறைபாடு (Insulin Deficiency) மற்றும் இன்சுலின் உற்பத்தியைத் தடுப்பது (Insulin Resistance) போன்றவைதாம் முக்கியக் காரணங்கள். இன்சுலின் குறைபாட்டுக்குக் காரணமாக இருப்பவை சீரற்ற உணவுப் பழக்கம், மரபு, உடலுழைப்பு இல்லாமை போன்றவைதாம். இந்தியாவைப் பொறுத்தவரை சர்க்கரைநோய் ஏற்படுவதற்கு காரணம் உணவுப் பழக்கம்தான். அதிலும்,  கார்போஹைட்ரேட்ஸ் நிறைந்த உணவு வகைகள்தாம் மிக முக்கியக் காரணம். இப்போது இந்தக் காரணிகளோடு காற்று மாசுபாடும் சேர்ந்திருக்கிறது. உலக அளவில் சீனாவிலும் இந்தியாவிலும்தான் சர்க்கரை நோயாளிகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

உடற்பருமன்

இது போன்ற ஆய்வு முடிவுகளை, முழுமையான ஆதாரபூர்வ முடிவாக எடுத்துக்கொள்ள முடியாது. இது ஒரு கணிப்புதான். என்றாலும், ஆய்வின் முடிவில் `பொருளாதாரரீதியாக பின்தங்கிய நாடுகளில் காற்று மாசுபாடு காரணமாக சர்க்கரைநோய் அதிகம் ஏற்படும்' எனக் குறிப்பிடப்பட்டிருப்பதை கவனிக்கவேண்டியிருக்கிறது. உலகளவில், காற்று மாசுபாட்டில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம். இதன் மூலம், இந்த ஆய்வின் முக்கியத்துவத்தையும், நாம் எந்த அளவுக்கு மோசமான சுற்றுச்சூழலில் வாழ்கிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. மரபு காரணமாக ஏற்படும் சர்க்கரைநோயைத் தவிர மற்றவற்றை சரியான உணவுப் பழக்கம், சீரான உடற்பயிற்சி, உடலுழைப்பு ஆகியவற்றின் மூலம்  தடுத்துவிடலாம். அன்றாட உழைப்புக்கேற்ற அளவு சாப்பிட வேண்டும், உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்’’ என்கிறார் பாஸ்கர் ஆனந்த்.
 

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!