`ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கு எடுத்த முடிவை எம்.பி.பி.எஸ்ஸுக்கும் எடுக்கலாமே’ - செய்வாரா முதல்வர்?

இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி.

`ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கு எடுத்த முடிவை எம்.பி.பி.எஸ்ஸுக்கும் எடுக்கலாமே’ - செய்வாரா முதல்வர்?

`ந்திய மருத்துவப் படிப்புகளுக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் மூலமாகவே மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. அதேபோல, சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, யோகா போன்ற இந்திய மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்துக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. இந்த நிலையில், இது குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், `ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் அடைப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும்’ என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.

நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு

தமிழ்நாட்டில் ஆயுஷ் கல்லூரிகள் இருக்கின்றன. சென்னை மற்றும் பாளையங்கோட்டையில்அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் 60 மற்றும் 100 இடங்கள்; மதுரை திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 50 இடங்க; நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் 60 இடங்கள்; சென்னை அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் 60 இடங்கள்; அரசு யுனானி மருத்துவக் கல்லூரியில் 60 இடங்கள். இவை தவிர, தமிழ்நாட்டில் இதுவரை 24 சுயநிதி ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன.

முதலமைச்சர் பழனிசாமியின் இந்த அறிவிப்பு பற்றி தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் விவரிக்கிறார்...

`` `நீட் தேர்வு வேண்டாம்’ என்பதுதான் எப்போதும் தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு. கடந்த ஆண்டில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு எவ்வளவு முயற்சி செய்தும், உச்ச நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதனால், நீட் மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ் மருத்துவச் சேர்க்கையை நடத்தவேண்டியிருக்கிறது. அதேபோல, ஆயுஷ் மருத்துவச் சேர்க்கையையும் நீட் மதிப்பெண் அடிப்படையில் நடத்தச் சொல்லி மத்திய அரசு அறிவுறுத்துகிறது. இதையும் கொள்கைரீதியாக தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. அதன் பிரதிபலிப்புதான் முதலமைச்சரின் அறிவிப்பு’’ என்கிறார் ராதாகிருஷ்ணன்.

மருத்துவம்

இந்த அறிவிப்பு குறித்து தமிழ்நாடு ஆயுஷ் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் செந்தமிழ்ச் செல்வனிடம் கேட்டோம்...செந்தமிழ்ச் செல்வன்

``முதலமைச்சரின் இந்த அறிவிப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். நீட் தேர்வு என்பது தமிழக மாணவர்களுக்கு எதிரான ஒன்று. ஒரு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களை இன்னொரு பாடத்திட்டத்தில் தேர்வு எழுதச் சொல்வதே இயற்கை நியதிக்கு எதிரானது. `எம்.பி.பி.எஸ்போல ஆயுஷ் மருத்துவச் சேர்க்கையையும் நீட் தேர்வின் அடைப்படையில் நடத்த வேண்டும்’ என்ற மத்திய அரசின் அறிவிப்பைக் கேட்டு மிகுந்த மன வேதனையுடன் இருந்தோம். இந்த நிலையில் முதலமைச்சரின் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கு மட்டுமல்ல... எம்.பி.பி.எஸ் படிப்புக்கும் மாணவர்களை அலைக்கழிக்காமல் இதேபோல மருத்துவச் சேர்க்கையை நடத்த வேண்டும் என்பதைத்தான் எங்கள் சங்கம் விரும்புகிறது.

எம்.பி.பி.எஸ் மட்டும் மருத்துவப் படிப்பல்ல, சித்தா, ஆயுர்வேதம் போன்ற ஆயுஷ் படிப்புகளும் மருத்துவப் படிப்புகளே. ஆயுஷ் பாடத்திட்டத்தில் எம்.பி.பிஎஸ் பாடத்திட்டத்திலிருக்கும் பாடங்களையும் சேர்த்த ஒருங்கிணைந்த பாடத்திட்டம்தான் இருக்கிறது. இது பெரும்பாலான மாணவர்களுக்குத் தெரிவதில்லை. இந்த வருடம் எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்காத மாணவர்கள் நம் பாரம்பர்ய மருத்துவப் படிப்புகளான ஆயுஷ் படிப்புகளில் விருப்பத்துடன் சேர வேண்டும் என்பது எங்களின் வேண்டுகோள்’’ என்கிறார் மருத்துவர் செந்தமிழ்ச் செல்வன்.

மருத்துவம்

மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் அரங்கத்தின் தலைவர் ரெக்ஸ் சற்குணத்திடம் பேசினோம்...ரெக்ஸ் சற்குணம்

``நீட் மதிப்பெண்களின் அடிப்படையில் நடத்தப்படும் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையில் மத்திய அரசுக்கும் தனியார் மருத்துக் கல்லூரிகளுக்கும் வணிகரீதியாக லாபம் இருக்கிறது. பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் மட்டும் எம்.பி.பி.எஸ் படிப்பதற்கான வாய்ப்பையும் அது உருவாக்குகிறது. அதனால்தான் நவீன மருத்துவப் படிப்பை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள மத்திய அரசு விரும்புகிறது. ஆயுஷ் மருத்துவப் படிப்புகளை மேல் தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் விரும்பிப் படிப்பதில்லை. அதில் அவர்களுக்கு வணிகரீதியாகவும் பெரிய லாபமில்லை. அதனால்தான் மத்திய அரசு பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. `நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துங்கள்’ என மாநில அரசுகளுக்கு அறிவுரை மட்டும் வழங்குகிறது. இதில், தமிழ்நாடு அரசு எதிர்ப்பைக் காட்டியிருப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. இதே முயற்சியை எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கும் எடுத்திருந்தால் நாம் பாராட்டியிருக்கலாம்’’ என்கிறார் மருத்துவர் ரெக்ஸ் சற்குணம்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!