உலகின் இரண்டாவது கண் மருத்துவமனை எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு வயது 200 #DataStory

ஆசியாவிலேயே முதல் கண் வங்கி தொடங்கப்பட்டது சென்னையில்தான்.

உலகின் இரண்டாவது கண் மருத்துவமனை எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு வயது 200 #DataStory

சென்னை... இந்தியாவின் மருத்துவ மையம். வெளிநாட்டினரும் ஆர்வத்தோடு சிகிச்சை எடுத்துக்கொள்ள விரும்பும் நகரம். இங்கிருக்கும் மருத்துவமனைகளில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள், அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் இருப்பதும்தான் அதற்குக் காரணம். இப்படிச் சொன்னதும், பலருக்கும் தனியார் மருத்துவமனைகள்தாம் நினைவில் வந்து போகும். உண்மை அதுவல்ல. தனியார் மருத்துவமனைகளைவிட, பல மருத்துவச் சாதனைகளைப் புரிந்துகொண்டிருக்கின்றன இங்கே இயங்கிவரும் அரசு மருத்துவமனைகள்.

கண் மருத்துவமனை

ஆசியாவிலேயே மிகப்பெரியது... ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை. தெற்காசியாவிலேயே குழந்தைகளுக்கான பல சிறப்புத் தன்மைகளைக் கொண்டது... எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம். ஆசியாவிலேயே மிகப்பழைமையானது... ஸ்டான்லி மருத்துவமனை. அந்த வரிசையில் உலகின் இரண்டாவது கண் மருத்துவமனை, தெற்காசியாவின் முதல் கண் மருத்துவமனை... இந்த வருடம் 200-வது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனை.

1809-ம் ஆண்டு லண்டனில் தொடங்கப்பட்ட `மார்ஃபீல்டு’தான் உலகின் முதல் கண் மருத்துவமனை. அதற்கடுத்து, 1819-ம் ஆண்டு ஜூலை மாதம், டாக்டர் ராபர்ட் ரிச்சர்ட்சன்னால் தொடங்கப்பட்டது `மெட்ராஸ் கண் மருத்துவமனை'. முதலில் ராயப்பேட்டையில் தொடங்கப்பட்டு, இடப்பற்றாக்குறையின் காரணமாக 1844-ம் ஆண்டு சென்னை எழும்பூருக்கு மாற்றப்பட்டது.

கண் சோதனை

1888-ம் ஆண்டு `சென்னை அரசு கண் மருத்துவமனை'யாக மாற்றம் பெற்றது. இப்போது எதிரெதிரே இரண்டு பிரமாண்ட கட்டடங்களுடன் மிகச்சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. பழைய கட்டடத்தில் அறுவை சிகிச்சைக்கு முந்தைய நிலையில் வழங்கப்படும் சிகிச்சைகளும், புதிய கட்டடத்தில் அறுவை சிகிச்சைக்குப் பிறகான சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு உள்புற மற்றும் வெளிப்புற நோயாளிகளாக 1,000 முதல் 1,200 பேர் சிகிச்சைக்காக வருகிறார்கள். 478 படுக்கை வசதிகள், 47 மருத்துவ நிபுணர்களுடன் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது இந்த மருத்துவமனை. மேலும் இங்கேயிருக்கும் வசதிகள், அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

பார்வைக்குறைபாடு, விழித்திரைப் பாதிப்பு, மாறுகண் பாதிப்பு, கண்புரை, கண்களில் ஏற்படக்கூடிய கட்டிகளைச் சரிசெய்தல், கண் நரம்புக் கோளாறுகள்... எனக் கண் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் தனித்தனியாக சிகிச்சையளிக்கப்படுகின்றன. சிகிச்சைக்காக வரும் ஒருவர் முதலில் ஓ.பி சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். அடுத்ததாக அவருக்குப் பார்வையைச் சரிபார்க்கும் சோதனை (Vision checking) நடைபெறும். இதற்கு `கிளாகோமா யூனிட் ' (Glaucoma Unit) என்று பெயர். இங்கே பார்வைத்திறன், கண் அழுத்தம், நரம்புப் பாதிப்பு போன்றவை பரிசோதிக்கப்படுகின்றன. தினமும் காலை 7:30 மணி முதல் மதியம் 1:30 மணிவரை இந்தப் பிரிவு செயல்படுகிறது. முதுகலை பயிலும் மாணவர்கள் இந்தச் சோதனைகளைச் செய்கிறார்கள். அதை சீனியர் மருத்துவர் சரிபார்க்கிறார். 24 மணி நேரமும் செயல்படும் (Casuality) அவசரப் பிரிவும் இருக்கிறது. ஒரு மூத்த கண் மருத்துவர், ஒரு மயக்கவியல் நிபுணர், 20 முதுகலை மாணவர்கள் இங்கே இருக்கிறார்கள்.

கருணாகரன்

கிளாகோமா யூனிட்டிலிருந்த விழி ஒளி பரிசோதகர் கருணாகரனிடம் பேசினோம்... ``விழித்திரையில் ஏற்படும் பாதிப்புகளை இங்கே பரிசோதனை செய்கிறோம். ஒரு நாளைக்கு 250 முதல் 300 நோயாளிகள் இங்கே வருகிறார்கள். நாற்பது வயதைக் கடந்த பெரும்பாலானவர்களுக்குக் கண் நீர் அழுத்தநோய் இருக்கும். இந்த அழுத்தம், கண் நரம்புகளைப் பாதித்து, பார்வையை இல்லாமல் ஆக்கிவிடும். இதன் பாதிப்பு வெளியே தெரியாது. ஒவ்வொருவருக்கும் கண் அழுத்தமானது 12 mmhg (Millimeters of Mercury) முதல் 20 mmhg அளவுதான் இருக்க வேண்டும். அந்த அளவைவிட அதிகமாக இருப்பது ஆபத்து. இதன் பாதிப்பு உடனடியாகத் தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையைப் பறித்துவிடும். ஒரு முறை பார்வை பறிபோனால். மீண்டும் பார்வையைப் பெற முடியாது’’ என்கிறார் கருணாகரன்.சரவணன்

மூத்த பேராசிரியர் சரவணன் ``பார்வையின்மையில் மூன்று வகைகள் இருக்கின்றன. பார்வைக் குருடு , நிறக்குருடு, காட்சிக் குறைபாடு (Visual field defect). இவற்றில் முதல் இரண்டு வகைப் பிரச்னைகள் அனைவருக்கும் நேரடியாகத் தெரிந்துவிடும். ஆனால், காட்சிக்குறைபாடு அதாவது நாம் பார்க்கும் பொருள் மட்டும் தெரிந்து, அதைச் சுற்றியிருப்பவை தெரியாமல் போவது, பாதிப்பு முழுமையடைந்த பின்னர்தான் தெரியவரும்... ஆரம்பத்தில் தெரியாது. அதனால், நாற்பது வயதைக் கடந்த அனைவருமே கண்களை அடிக்கடி பரிசோதனை செய்துகொள்ளவேண்டியது அவசியம். ஆரம்ப நிலையிலேயே இதைக் கண்டறிந்துவிட்டால் மருந்து, மாத்திரைகளின் மூலம் சரிசெய்துவிடலாம்’’ என்கிறார்.

கண்ணில் நீர் அடைப்பு, தூசு விழுதல், ஏற்கெனவே அறுவைசிகிச்சை செய்த இடத்தில் தையல் பிரித்தல் போன்றவை மைனர் புரொசிஜர் ரூமில் (Minor procedure room) நடைபெறுகின்றன. தினமும் 120 முதல் 140 நோயாளிகள் இங்கே சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள்.

 

அதற்கடுத்து, பார்வைத்திறனை சோதனை செய்யும் அறை. 6 மீட்டர் இடைவெளியில் ஒரு போர்டு தொங்குகிறது; அதில் எழுதியிருக்கும் எழுத்துகளைப் படிக்கச் சொல்லி, இந்தச் சோதனையை மேனுவலாகவும், நவீன கருவிகளின் உதவிகளோடும் செய்கிறார்கள்.

மருத்துவர் ஹேமநந்தினிஅடுத்தது மிக முக்கியமான `பேஸ் ஐ கேம்ப்'( Base Eye Camp) பிரிவு. சென்னை மற்றும் திருவள்ளூரைச் சுற்றியிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கேம்ப் நடத்தி, யாருக்கு அறுவைசிகிச்சை அளிக்க வேண்டுமோ அவர்களை இங்கே அனுப்பிவைக்கிறார்கள். அதோடு, தனியார் அமைப்புகளின் சார்பாக நடத்தப்படும் கண் பரிசோதனை முகாம்களின் மூலமாகவும் இங்கே பலர் அனுப்பிவைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் பத்து பேர், இருபது பேர் என மொத்தமாக வருகிறார்கள்.

``ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவர்களே வாகன ஏற்பாடு செய்து சிகிச்சை பெறவேண்டியவர்களை இங்கே அனுப்பிவைப்பார்கள். அது தவிர அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களின் சார்பாக பரிசோதனை செய்யப்பட்டும் இங்கே பலர் அனுப்பிவைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு சாப்பாடு, தங்கும் வசதி அனைத்தையும் மருத்துவமனை எற்பாடு செய்து கொடுக்கிறது. பெரும்பாலும் ஒரே நாளில் அறுவைசிகிச்சை செய்து, அவர்களின் வீட்டுக்கே மருத்துவமனை வாகனங்களின் மூலமாகக் கொண்டு போய் அவர்களைச் சேர்த்துவிடுவோம். இங்கே தினமும் 7-8 சர்ஜரி நடைபெறுகிறது. இன்றுகூட பாடியநல்லூரிலிருந்து 20 பேர் வந்திருக்கிறார்கள்’’ என்கிறார் இந்தப் பிரிவின் பொறுப்பாளர் மருத்துவர் ஹேமநந்தினி.

லேசர் சிகிச்சை

அடுத்ததாக நாம் சென்றது, நோய்க் குறியியல் துறை (Pathology). 'பேத்தாலஜி, மைக்ரோ பயாலஜி, பயோகெமிஸ்ட்ரி' என மூன்று பிரிவாக இந்தத் துறை செயல்படுகிறது. கண் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு, சுகர், கொலஸ்ட்ரால், ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு ஆகியவை இங்குதான் பரிசோதிக்கப்படுகின்றன. அறுவைசிகிச்சைக்குப் பிறகான பரிசோதனைகளும் இங்குதான் நடைபெறுகின்றன. நுண்ணுயிரிகளின் காரணமாக ஏற்படும் கண் பாதிப்புகளையும் இங்குதான் சோதனை செய்கிறார்கள். இன்ஜக்டிவ்ஸ் கஞ்சங்டிவிடிஸ்' (Insectious Conjunctivitis) என்னும் பெயர் கொண்ட கண் நோய்க்கு காரணமாகும் வைரஸ் கிருமி இங்குதான் கண்டறியப்பட்டது. அதனால்தான் 'மெட்ராஸ் ஐ' என்று அதற்குப் பெயர் வந்தது.

மாறுகண், பார்வை நரம்புக் கோளாறுகள், மற்றும் குழந்தைகளுக்கான கண் பரிசோதனைப் பிரிவுக்குள் நுழைந்தோம்... இங்கே, மாறுகண் பிரச்னைகளை அறுவைசிகிச்சை மூலம் சரிசெய்கிறார்கள். மாதத்துக்கு ஐந்து முதல் எட்டு அறுவைசிகிச்சைகள் இங்கே நடைபெறுகிறது. ஒரு மாதத்துக்கு மாறுகண் கோளாறுகளுக்காக 100 பேரும், நரம்புக் கோளாறுகளுக்காக 150 பேரும் சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள்; 500 குழந்தைகள் கண் பாதிப்புகளுக்காக சிகிச்சைபெறுகிறார்கள். ``ஆண்களைவிடப் பெண்கள்தான் அதிகமாக மாறுகண் குறைபாட்டைச் சரிசெய்துகொள்ள வருகிறார்கள்’’ என்கிறார் மாறுகண் நீக்கப் பயிற்சியாளர் அன்பரசன்.

நோய்க் குறியியல் துறை பேராசிரியர்

என்னதான் மாத்திரை மருந்துகள் உட்கொண்டாலும், அறுவை சிகிச்சை செய்துகொண்டாலும்கூட பார்வைத்திறன் மேம்படாத சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு வழிகாட்டுவதற்காகச் செயல்படுகிறது ' Low vision aid'. இவர்களுக்குத் தேவையான கவுன்சலிங்கை இந்தப் பிரிவில் கொடுக்கிறார்கள். மேக்னிஃபையிங் லென்சின் துணையோடு படிப்பது குறித்தும் கற்றுத் தருகிறார்கள்.

மிக முக்கியமான பிரிவாகச் செயல்படுகிறது விழித்திரை பிரிவு (Retina Unit). பெரும்பாலும் குறை மாதத்தில் பிறக்கிற குழந்தைகளுக்கு விழித்திரை பாதிப்புகள் நிச்சயமாக இருக்கும். அவை இங்கே சரிசெய்யப்படுகின்றன. அது தவிர, பி.பி., சுகர் பாதிப்பு இருப்பவர்களுக்கு விழித்திரையில் ஏற்படும் ரத்தக்கசிவு இங்கே சரிசெய்யப்படுகிறது. கண்ணுக்குள் ஊசி செலுத்தியும், லேசர் சிகிச்சைகளின் மூலமாகவும் இந்த பாதிப்புகள் சரிசெய்யப்படுகின்றன. லேசர் சிகிச்சைக்கு அதிகபட்சம் ஆகும் நேரம் வெறும் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள்தான். அதேபோல, அடிபட்டு ஏதாவது பிசிறு கண்ணுக்குள் சிக்கிக்கொண்டால் அதை நீக்கும் சிகிச்சைகளும் இங்குதான் செய்யப்படுகின்றன. அறுவைசிகிச்சைக்குப் பின்னர் ஏற்படும் கண் பாதிப்புகளும் ரெட்டினா யூனிட்டில்தான் சரிசெய்யப்படுகின்றன.விழித்திரை ரத்தக்கசிவுக்காகக் கண்களில் செலுத்தப்படும் மருந்தின் விலை வெளியில் 15,000 முதல் 20,000 ரூபாய் வரை இருக்கும். லேசர் சிகிச்சைக்கு 30,000 ரூபாய்வரை செலவாகும். இங்கே அவை இலவசம். இதற்காகவே OCT (Optical Coherence Tomography) என்ற நவீன சிகிச்சைக் கருவிகள் இருக்கின்றன.

விழித்திரை பிரிவு

கண்ணில் நீர்வழிதல், கண் தசை அறுவைசிகிச்சை, செயற்கைக் கண் பொருத்துதல், கண்களிலிருக்கும் கட்டிகளை நீக்குதல் போன்ற சிகிச்சைகள் கண்குழி சிகிச்சைப் பிரிவில் (Orbit Clinic) நடைபெறுகின்றன. ஆசியாவிலேயே முதல் கண் வங்கி தொடங்கப்பட்டதும், கண் மாற்று அறுவைசிகிச்சை நடைபெற்றதும் இங்கேதான். வருடத்துக்கு 1,000-க்கும் மேற்பட்ட கண்கள் தானமாகப் பெறப்படுகின்றன. 600 அறுவைசிகிச்சைகளும் செய்யப்படுகின்றன. ஒரு நாளைக்கு ஒன்று முதல் மூன்று பேர் கண்தானம் செய்கிறார்கள். இதற்காகவே மிகச்சிறந்த கட்டமைப்பு வசதிகளுடன் ஒரு தனிப் பிரிவு இயங்குகிறது. 1980-ம் ஆண்டிலிருந்து இதுவரை 6,890 கண் மாற்று அறுவைசிகிச்சைகளும், 2,59,854 கண்புரை அறுவைசிகிச்சைகளும் இங்கே செய்யப்பட்டிருக்கின்றன.

பார்வை பரிசோதனை

இங்கே எம்.பி.பி.எஸ் படிப்பு முடித்த 12 பேர் மூன்று வருடப் படிப்பான `எம்.எஸ் ஆப்தமாலஜி’ படிக்கிறார்கள்; இரண்டு வருடப்படிப்பான `டிப்ளமோ இன் ஆப்தமாலஜி’ 18 பேர் இங்கே படிக்கிறார்கள். மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் 250 மாணவர்களுக்கு ஆப்தமாலஜி குறித்த வகுப்புகள் இங்கே நடைபெறுகின்றன.

eye hospital

கண் தொடர்பான அனைத்துப் பாதிப்புகளையும் இங்கே சரிசெய்கிறார்கள். கண்களில் அடிபட்டால், அடிபட்ட 24 மணி நேரத்துக்குள் மகேஸ்வரிமருத்துவமனைக்குக் கொண்டுவர அறிவுறுத்துகிறார்கள். இறந்த ஒருவரின் கண்களைத் தானம் செய்யவிரும்பினால், '9841041064' என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டால் அவர்களே வாகனங்களில் வந்து அழைத்துச் செல்வார்கள்.

``இன்டர்நேஷனல் கவுன்சில் ஆஃப் ஆப்தமாலஜியின் தென்னிந்தியாவுக்கான தேர்வு மையம் இதுதான். உலகிலேயே மிகப் பெரிய கண் அருங்காட்சியம் இங்குதான் இருக்கிறது. 24 மணி நேரமும் அதி நவீன வசதிகளுடன் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது எங்கள் மருத்துவமனை. கண் தொடர்பான எந்தப் பிரச்னை என்றாலும், எங்களைத் தேடி வரலாம் . இரவு, பகல் எந்நேரமும் சிகிச்சையளிக்கத் தயாராக இருக்கிறோம்’’ என்கிறார் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் மகேஸ்வரி.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!