புற்றுநோய், மாரடைப்பு... எதற்கும் இனி கலரில் எடுக்கலாம் 3D எக்ஸ்-ரே! #3DColourXRay

உலகின் முதல் 3டி கலர் எக்ஸ்ரே கருவி கண்டுபிடித்து நியூசிலாந்து ஆய்வாளர்கள் சாதனை!

புற்றுநோய், மாரடைப்பு... எதற்கும் இனி கலரில் எடுக்கலாம் 3D எக்ஸ்-ரே! #3DColourXRay

விபத்து, எலும்பு முறிவு, ரத்தக்கட்டு, கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் போன்ற பல பிரச்னைகளின் தீவிரத்தைத் தெரிந்துகொள்ள, எக்ஸ்-ரேயோ ஸ்கேனோ செய்யவேண்டியிருக்கும். 'எக்ஸ்-ரே' கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டது நவம்பர் 8, 1895. கண்டுபிடித்தவர், வில்ஹம் ரான்ட்ஜென் (Wilhelm Röntgen). எக்ஸ்-ரேயின் தொடர்ச்சியாக வந்தவைதாம், சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் போன்றவை. இவை, கதிர்கள் மூலமாக உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கண்டறிய உதவும் கருவிகள். நூற்றாண்டுகள் தாண்டியும், இந்தக் கருவிகள் கறுப்பு வெள்ளையிலேயே உடல் பாகங்களைப் படம்பிடித்துக்கொண்டிருக்கின்றன. `இனி கலர் `எக்ஸ்-ரே' எடுக்கலாம்’ என்கிறார்கள் நியூசிலாந்தைச் சேர்ந்த சில ஆராய்ச்சியாளர்கள்.

எக்ஸ் ரே

நியூசிலாந்தின் செர்ன் (CERN) என்ற ஆராய்ச்சி நிறுவனம், முப்பரிமான கலர் எக்ஸ்-ரே கருவிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. `மெடிபிக்ஸ் 3’ என்ற தொழில்நுட்பம்தான் (Medipix3 technology) இந்த எக்ஸ்-ரே கருவியில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மெடிபிக்ஸ் என்பது, சிறு அணுத் துகள்களையும் கண்டுபிடித்து படமெடுக்க உதவும் கருவி. இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் இங்கிலாந்தின் கேன்டர்பரி பகுதியைச் (Canterbury) சேர்ந்த பேராசிரியர் ஃபில் (Professors Phil), அவருடைய மகன் பேராசிரியர் அந்தோனி பட்லர் (Anthony Butler) மற்றும் ஒடாகோ (Otago) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்த ஆராய்ச்சி நடைபெற்றிருக்கிறது. 

எக்ஸ் ரே

மார்ஸ் (MARS Bioimaging Ltd) என்ற நிறுவனம், இதை மருத்துவச் சந்தைக்கு அறிமுகப்படுத்தவிருக்கிறது. இந்த ஸ்கேனர் கருவி பற்றி பேராசிரியர் பில், `இந்தக் கருவி அளவுக்கு வேறு எந்த எக்ஸ்-ரே மற்றும் ஸ்கேன் கருவிகளாலும் சிறப்பாகச் செயல்படவோ, படம்பிடிக்கவோ முடியாது. மிகவும் துல்லியமாக திசுக்களைப் படம்பிடிப்பதால், உடலில் எந்த பாதிப்பாக இருந்தாலும், அதன் தொடக்கநிலையிலேயே அறிந்துவிடலாம். அப்படி அறிந்துகொண்டால், சிகிச்சைகளைச் சீக்கிரமே ஆரம்பித்து, பிரச்னையை எளிதாகச் சரிசெய்துவிடலாம்' என்று சொல்லியிருக்கிறார். புற்றுநோய், எலும்பு, மூட்டு, இதய அடைப்பு, பக்கவாதம், ரத்தம் தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் பயன்படுத்தும்விதமாக இந்தக் கருவி தயாரிக்கப்பட்டிருக்கிறது. `எலும்பு, கொழுப்பு, குருத்தெலும்பு... என உடலின் ஒவ்வொரு பாகத்திலிருக்கும் திசுவையும் இந்தக் கருவி ஒவ்வொருவிதமாகப் படம்பிடித்து காட்ட உதவும்' என்று கூறியிருக்கிறார் பேராசிரியர் அந்தோனி பட்லர். 

`இந்தக் கருவியில், ஒவ்வொரு திசுவின் அடர்த்திக்கும் ஏற்ப ஒவ்வொரு நிறம் டீகோட் செய்யப்பட்டிருக்கும். கதிர்கள் உடலுக்குள் செல்லும்போது, ஒவ்வொரு திசுவுக்கும் ஒவ்வொரு நிறத்தைக் கொடுத்து அடையாளப்படுத்தும். இதுவரை பயன்பாட்டிலிருக்கும் எக்ஸ்-ரே மற்றும் ஸ்கேன் வகைகள், அடர்த்தியான திசுக்கள் இருக்கும் பகுதியை வெள்ளை நிறத்திலும், மென்மையான திசுக்கள் உள்ள பகுதிகளை கறுப்பு நிறத்திலும் காட்டுபவை. ஆனால், புதிய கருவி  முப்பரிமாணமாக அனைத்தையும் எடுத்துத் தரும்’ என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள். நியூசிலாந்தில் எலும்பு மற்றும் மூட்டு தொடர்பான நோய்களின் பயன்பாட்டுக்குச் சில மாதங்களில் இந்தக் கருவி வரும் என்றும் இந்த ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். 

ஸ்கேன்

இந்தக் கருவி பற்றி கதிர்வீச்சு ஆலோசகர் ஜெயராஜிடம் பேசினோம்... ``இப்போதுவரை இந்தக் கருவி முழுமையாக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை. முப்பரிமாணத்தில், பல நிறங்களில் இது செயல்படுகிறது என்பதால், பொதுமக்களிடையே கதிர்வீச்சு ஆலோசகர் ஜெயராஜ்வரவேற்பு அதிகளவில் இருக்கும். கருவியைப் பரிசோதித்துப் பார்ப்பதற்காக, ஒருவரை மட்டும் அதன் கதிரியக்கத்துக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். கதிரியக்கத்துக்கு உட்படுத்தப்பட்டவருக்கு இது புது அனுபவமாக இருந்திருக்கும் என்பதால், அவர் இதைப் பாராட்டியிருக்கிறார். அவர் சொல்வதை மட்டும் வைத்து, இந்தக் கருவி நல்லது என்று முடிவு செய்துவிட முடியாது. இதன் மற்றொரு பக்கத்தையும் யோசித்துப் பார்க்க வேண்டும். டிஜிட்டலாகக் கிடைக்கும் படத்தை சில வேலைப்பாடுகளுக்குப் பிறகே பிரின்ட் செய்வார்கள் என்பதால், சில நேரங்களில் குளறுபடி நடக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, இது பயன்பாட்டுக்கு வரும்போது, யாரும் தவறாக உபயோகித்துவிடாமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு சார்பிலும், மருத்துவர்கள் சார்பிலும் எடுக்கவேண்டியிருக்கும். அதேபோல, இந்த வகை எக்ஸ்-ரேக்களிலிருக்கும் நிறங்கள் உண்மையான திசுவின் நிறம் அல்ல. கலர் கான்ட்ராஸ்ட்டாக (Color Contrast) இருக்கும். இந்தக் கண்டுபிடிப்பு, இப்போதிருக்கும் எக்ஸ்-ரே கருவியின் அடுத்தகட்ட வளர்ச்சியாக இருக்கும். என்றாலும், பல்வேறு நிலைகளைத் தாண்டித்தான் பயன்பாட்டுக்கு வர வேண்டும்’’ என்கிறார் ஜெயராஜ்.

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!