வெளியிடப்பட்ட நேரம்: 16:21 (19/07/2018)

கடைசி தொடர்பு:16:21 (19/07/2018)

கருணாநிதிக்கு நான்காவது முறையாக ட்ரக்கியோஸ்டமி டியூப் மாற்றப்பட்டது ஏன்?

நேற்றோடு நான்காவது முறையாக அவருக்கு ட்ரக்கியோஸ்டமி கருவி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

கருணாநிதிக்கு நான்காவது முறையாக ட்ரக்கியோஸ்டமி டியூப் மாற்றப்பட்டது ஏன்?

ட்ரக்கியோஸ்டமி (Tracheostomy) கருவியை மாற்றுவதற்காக நேற்று காவேரி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார் தி.மு.க தலைவர் கருணாநிதி. பழைய ட்ரக்கியோஸ்டமி குழாய் அகற்றப்பட்டு புதிய குழாய் பொருத்தப்பட்டதையடுத்து மீண்டும் அவர் வீட்டுக்குத் திரும்பினார். தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றின் காரணமாக மூச்சுவிட சிரமப்பட்டவர், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைகள் முடிந்து, டிசம்பர் மாத இறுதியில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். மூச்சுப் பிரச்னையில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும்கூட, அவரின் கழுத்தில் தற்காலிகமாக `ட்ரக்கியோஸ்டமி' கருவி பொருத்தப்பட்டிருந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை அப்போது வெளியிட்டது. அதில், நுரையீரலில் உள்ள சளியை அகற்ற `ட்ரக்கியோடமி' (tracheotomy) சிகிச்சையளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது. அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று கருவியை மாற்றிவந்தார் கருணாநிதி. நேற்றோடு நான்காவது முறையாக அவருக்குக் கருவி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

கருணாநிதி

அதென்ன `ட்ரக்கியோஸ்டமி'?

குரல்வளையில் புற்றுநோய் உள்ளவர்கள், நுரையீரலில் சளி அடைப்பு இருப்பவர்கள், சுயநினைவு இழந்தவர்கள் ஆகியோருக்கு அளிக்கப்படும் `செயற்கை சுவாச உபகரணச் சிகிச்சை' இது. பொதுவாக, இவர்களுக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படும். அதனால், மூக்கு வழியாகவோ, வாய் வழியாகவோ இவர்களால் சுவாசிக்க முடியாது. எனவே, கழுத்தில் ஒரு துளையிட்டு, அதன் வழியே ஒரு ட்யூபைவிட்டு, அதை சுவாசக்குழாயுடன் இணைத்து, நுரையீரலுக்கு நேரடியாக ஆக்சிஜன் கொண்டு செல்லும் ஒரு வழிமுறை. இந்தச் சிகிச்சை முறைக்கு `ட்ரக்கியோடமி' என்று பெயர். இதில் தற்காலிகமான, நிரந்தரமான என இரண்டு வகை சிகிச்சை முறைகள் இருக்கின்றன. தற்காலிகமான சிகிச்சை முறையில், கழுத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கருவி சுவாசப் பிரச்னை சரியாகும் வரை அப்படியே இருக்கும். ட்யூபை மட்டும் தேவையான நேரத்தில் மாற்றிக்கொள்ளலாம். நிரந்தரமாகச் செயற்கை சுவாசம் தேவைப்படுபவர்களுக்கு ட்யூப் கழுத்தில் நிரந்தரமாகப் பொருத்தப்பட்டிருக்கும். சில முக்கியமான அறுவைச் சிகிச்சைகளுக்கும் முன்னர் தற்காப்புக்காக இந்தச் சிகிச்சையளிக்கப்படும்.

மருத்துவ அறிக்கை

கருணாநிதிக்குப் பொருத்தப்பட்டிருப்பது எதற்காக?

``தொண்டையில் தேங்கியிருக்கும் சளியால், அவருக்கு மூச்சுக்குழாயில் அவ்வப்போது அடைப்பு ஏற்படும். அதனால் மூச்சுத்திணறல் உண்டாகும். அதிலிருந்து அவரைப் பாதுகாக்க தற்காப்புக்காக அவருக்கு ட்யூப் பொருத்தப்பட்டிருக்கிறது. ட்ரக்கியோஸ்டமி ட்யூப் நுரையீரலுக்குத் தேவையான ஆக்சிஜனை நேரடியாகக் கொண்டு செல்லும். சளியை அகற்ற சக்ஸன் கதீட்டர் (Suction Catheter) என்கிற தனி ட்யூப் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி சளியை அகற்றுவார்கள். நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியைப் பொறுத்து ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை அகற்றப்படும். கருவி மாற்றுதல் என்பது வழக்கமான ஒன்று. நேற்று அதற்காகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்’’ என்கிறார் கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் அறிந்த மருத்துவர் ஒருவர்.

ட்ரக்கியோஸ்டோமி

எத்தனை நாளைக்கு ஒருமுறை கருவியை மாற்றவேண்டும்?

``சிகிச்சைக்குப் பிறகு இயல்பாக சுவாசிக்க முடிபவர்களுக்கு ட்ரக்கியோஸ்டமி கருவியை நிரந்தரமாக அகற்றிவிடலாம். அவ்வப்போது பிரச்னை ஏற்படுபவர்களுக்கு, அது தீரும்வரை அகற்றக் கூடாது. அதே நேரத்தில், ஒரே கருவியை, ட்யூபை அதிக நாள்களுக்குப் பயன்படுத்தவும் கூடாது. அதில் உராய்வு உண்டாகும்; அடைப்பு ஏற்படும். அதனால், நோய்த்தொற்று ஏற்படும். மூச்சுவிட மேலும் சிரமம் உண்டாகும். அதைத் தவிர்ப்பதற்காகக் கருவியை மாற்ற வேண்டும். இவ்வளவு நாளைக்குக் கருவியை வைத்திருக்க வேண்டும் என்று கால அளவுகள் எதுவும் இல்லை. கருவியின் தன்மையைப் பொறுத்து மாற்றிக்கொள்ளலாம்’’ என்கிறார் காது,மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர் முத்துச்சித்ரா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க