எஃப்.எஃப்.ஆர் ... இதய நோய் சிகிச்சையில் மருத்துவர்களுக்குக் கைகொடுக்கும் ஒற்றன்!

அறிவியலும் மருத்துவத் தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்தியிருக்கும் கருவிகளின் பயன்கள் மகத்தானவை. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்களின் நோய் தீர்க்கவும், உயிர் காக்கவும் இவற்றின் உதவி இன்றியமையாதது.

எஃப்.எஃப்.ஆர் ... இதய நோய் சிகிச்சையில் மருத்துவர்களுக்குக் கைகொடுக்கும் ஒற்றன்!

றிவியலும் மருத்துவத் தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்தியிருக்கும் கருவிகளின் பயன்கள் மகத்தானவை. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்களின் நோய் தீர்க்கவும், உயிர் காக்கவும் இவற்றின் உதவி இன்றியமையாதது. சாதாரண ஸ்டெதஸ்கோப்பிலிருந்து சி.டி ஸ்கேன் வரை எண்ணற்ற கருவிகள் மருத்துவத்துறைக்கு உதவிக்கொண்டிருக்கின்றன. இன்றைக்கு இதய நோய் மருத்துவத்தில், மருத்துவத் தொழில்நுட்பம் உச்சத்தைத் தொட்டுவிட்டது என்றே சொல்லலாம். இதயத்தின் தசைகளுக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டால், இதயத்தின் செயல்பாடு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிக்கும். மாரடைப்பு எற்படக்கூட வாய்ப்பிருக்கிறது. ரத்தக்குழாய்களில் ரத்தத்தின் அழுத்தத்தை அளக்கும் எஃப்.எஃப்.ஆர் கருவி இதய நோய் சிகிச்சையில் முக்கியமான ஒன்று. அது குறித்து இதய நோய் சிறப்பு மருத்துவர் ராஜேஷ் குமார் விளக்குகிறார்...

இதய நோய் சிகிச்சைகள்

``இதயத்தில் இருக்கும் ரத்த நாளங்களில் பாயும் ரத்தத்தின் அழுத்தத்தைக் கணக்கிட்டு, அடைப்பின் தீவிரத்தை அளக்கும் கருவி `ஃப்ராக்‌ஷனல் ஃப்ளோ ரிசர்வ்’ (FFR - Fractional Flow Reserve). இதைப் பயன்படுத்தி, இதயத்தில் எந்த ரத்தக்குழாயில் எவ்வளவு சதவிகிதம் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். அடைப்பின் தன்மையைப் பொறுத்து எப்படி, எந்த சிகிச்சையை நோயாளிக்குக் கொடுக்கலாம் என்பதை மருத்துவர்கள் முடிவெடுத்துக்கொள்ளலாம். எஃப்.எஃப்.ஆர் கருவியைப் பயன்படுத்தினா, சரியான சிகிச்சைகளை நோயாளிகளுக்கு அளிக்கலாம்; மருத்துவச் செலவையும் குறைக்கலாம்.

எஃப்.எஃப்.ஆர் கருவி, ரத்தத்தின் அழுத்தத்தை ஒப்பிட்டுப் பார்க்கும். இதன் உதவியோடு இதயத்தில் இருக்கும் தமனிகள் மற்றும் மகா தமனியில் ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்; அடைப்பின் தீவிரத்தை அளக்கலாம்.மருத்துவர் ராஜேஷ் குமார்

ஆஞ்ஜியோபிளாஸ்டி (Angioplasty) போன்ற ரத்தக்குழாய் அடைப்பு நீக்கும் சிகிச்சை முறைகளுக்காக மேற்கொள்ளப்படும் சோதனைகளில் ஒன்றுதான் இந்த எஃப்.எஃப்.ஆர் ஒருவருக்கு இதயத்தில் இருக்கும் ரத்தக்குழாயில் 70, 80 சதவிகித அடைப்பு இருந்தால், ஆஞ்ஜியோபிளாஸ்டி அல்லது அறுவை சிகிச்சைகள் செய்யவேண்டியிருக்கும். அடைப்பு 70 சதவிகிதத்துக்குக் கீழ் இருந்தாலோ; அடைப்பு எவ்வளவு சதவிகிதம் இருக்கிறது என்பதில் சந்தேகம் வந்தாலோ; 70 சதவிகித அடைப்பு இருந்தும் ரத்த ஓட்டம் நன்றாக இருப்பதுபோல் தெரிந்தாலோ மருத்துவர்களுக்குக் கைகொடுப்பது இந்தக் கருவிதான். 

இதுவும் ரத்தக்குழாய்களின் வழியே ஒரு வயரைச் செலுத்தி, அடைப்பைச் சரிசெய்யும் ஆஞ்ஜியோகிராம் மாதிரியானதுதான். இதற்காக ஒரு பிரத்யேக `வொயர்’ (Wire) இருக்கிறது. முடியின் அளவு பருமனே இருக்கும் அந்த வயரின் முன் பகுதியில் ரத்த அழுத்தத்தை அளக்கும் கருவி பொருத்தப்பட்டிருக்கும். ரத்தக் குழாயில் அடைப்பு இருக்கும் இடத்தில் எவ்வளவு ரத்த அழுத்தம் இருக்கிறது என்பதை இந்தக் கருவி அளக்கும். அந்த அளவைப் பொறுத்து ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யலாமா, என்ன சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்துவிடலாம். இதய அறுவை சிகிச்சையில் மிக முக்கியமானது; சரியாக அளவைக் காட்டக்கூடியது இந்தக் கருவி.

எஃப்.எஃப்.ஆர்

ஒருவருக்கு ரத்தக்குழாயில் அடைப்பு 70 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால் ஆஞ்ஜியோ பிளாஸ்ட்டி செய்வது அல்லது ஸ்டென்ட் (Stent) பொருத்துவதன் மூலம் சரிசெய்யப்படும். அடைப்பு 50 சதவிகிதத்துக்குக் குறைவாக இருந்தால், அறுவை சிகிச்சைத் தேவைப்படாது. மருந்துகள் மூலமே சரிசெய்துவிடலாம். இந்தக் கருவி 50 முதல் 70 சதவிகித அடைப்பு இருப்பவர்களுக்குப் பயன்படக்கூடியது.
ஒருவருக்கு இதய ரத்தக்குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பது உறுதி செய்யப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். எஃப்.எஃப்.ஆர் கருவியின் உதவியுடன், ஒவ்வோர் அடைப்பும் எவ்வளவு சதவிகிதம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அடைப்பின் சதவிகிதத்துக்குக் ஏற்ப ஸ்டென்ட்-ன் எண்ணிக்கையைக் குறைக்கலாம். இரண்டு அடைப்புகள் தீவிரமாகவும், ஓர் அடைப்பு குறைந்த தீவிரத்துடன் இருந்தால், இரண்டு அடைப்புகளுக்கு ஸ்டென்ட் பொருத்திவிட்டு, ஓர் அடைப்பை மருந்துகள் மூலம் சரிசெய்துவிடலாம்.

இதயத்தில், 50 சதவிகிதத்துக்குக் கீழ் அடைப்பு இருந்தால், அதற்கு மருத்துவ சிகிச்சைகள் தேவையில்லை, உணவு, உடற்பயிற்சிகள், மருந்துகள் மூலமே அதைச் சரிசெய்துவிடலாம். 70 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால்தான் அது தீவிரமான அடைப்பு. உடனடியாக அதற்கு சிகிச்சை அளித்தே ஆக வேண்டும். ஆக, ரத்தக்குழாய் அடைப்பில் சந்தேகம் எழும் நேரங்களில் மருத்துவர்களுக்குக் கைகொடுக்கும் சிறந்த ஒற்றன் எஃப்.எஃப்.ஆர் கருவி’’ என்கிறார் ராஜேஷ் குமார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!