கேரளாவில் பரவும் ஷிகெல்லா... தமிழக மக்கள் என்ன செய்ய வேண்டும்? #Shigella #DataStory | Shigella infection - Symptoms and causes

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (24/07/2018)

கடைசி தொடர்பு:18:40 (24/07/2018)

கேரளாவில் பரவும் ஷிகெல்லா... தமிழக மக்கள் என்ன செய்ய வேண்டும்? #Shigella #DataStory

உலகளவில் இந்த பாக்டீரியா பாதிப்பால் வருடத்துக்கு 74,000 முதல் 6,00,000 பேர் உயிரிழக்கிறார்கள். இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டால் `கடுமையான வயிற்றுவலி, வயிற்றுப்போக்குதான் முதலில் உண்டாகும்.

கேரளாவில் பரவும் ஷிகெல்லா... தமிழக மக்கள் என்ன செய்ய வேண்டும்? #Shigella #DataStory

நிபா வைரஸைத் தொடர்ந்து இப்போது ஷிகெல்லா (Shigella) பாக்டீரியாவின் பாதிப்பில் சிக்கியிருக்கிறது கேரள மாநிலம். ஒரு செவிலியர் உட்பட 17 பேரின் உயிரைக் காவு வாங்கிய நிபா வைரஸ், கேரள அரசின் அதிரடி நடவடிக்கைகளால் முற்றிலுமாகக் கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதம் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தது கேரள அரசாங்கம். நிபாவின் அச்சத்திலிருந்து மீண்டு, நிம்மதி பெருமூச்சுவிட்டு சரியாக ஒன்றரை மாதங்கள்... வந்துவிட்டது ஷிகெல்லா பாக்டீரியா. இதுவரை மூன்று பேரின் உயிரை அநியாயமாகப் பறித்துக்கொண்டு போய்விட்டது.

ஷிகெல்லா

கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த அஷ்ரஃப் என்பவரின் இரண்டு வயது மகன் ஷியான், இந்தப் பாக்டீரியா பாதிப்பால் உயிரிழந்திருக்கிறான். ஒரு வாரத்துக்கு முன்னர், கடுமையான வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டுவந்த ஷியானை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்திருக்கிறார்கள். ஷியான் உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் போகவே, கடந்த ஞாயிற்றுக்கிழமை கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் சேர்த்திருக்கிறார்கள். அங்குதான் ஷியான், ஷிகெல்லா பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள் மருத்துவர்கள். சிகிச்சை பலனின்றி கடந்த திங்களன்று அநியாயமாக உயிரைவிட்டிருக்கிறான் குழந்தை ஷியான். இது கேரள மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும்படி கேரள அரசாங்கமும், மருத்துவர்களும் எச்சரித்திருக்கிறார்கள்.

1897-ம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த மருத்துவர் கியோஷி ஷிகா (Kiyoshi Shiga) என்பவர்தான் இந்த பாக்டீரியாவை முதன்முதலில் பாலகிருஷ்ணன்கண்டறிந்தவர். உலகளவில் இந்த பாக்டீரியா பாதிப்பால் வருடத்துக்கு 74,000 முதல் 6,00,000 பேர் உயிரிழக்கிறார்கள். இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டால் `கடுமையான வயிற்றுவலி, வயிற்றுப்போக்குதான் முதலில் உண்டாகும். சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சையளிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது’’ என்கிறார் அரசு தொற்றுநோய் மருத்துவமனை, மருத்துவ அதிகாரி பாலகிருஷ்ணன்.

`` பெரும்பாலும் குழந்தைகளைத்தான் இந்த பாக்டீரியா தாக்குகிறது. ஆரம்பத்திலேயே கண்டறியாவிட்டால், இந்த பாக்டீரியா ரத்தத்தில் கலந்து ரத்த சிவப்பணுக்களை சிதைத்துவிடும். அதனால், சிறுநீரகம் பழுதடைந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உண்டு. சுத்தமில்லாத தண்ணீர், உணவின் வழியாகத்தான் இது பரவுகிறது. உடலுக்குள் சென்று பெருங்குடலைத்தான் முதலில் இது பாதிக்கும். அதனால், வாந்தி, காய்ச்சல், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும் . மலம் கழிக்கும்போது ரத்தக்கச்சிவு உண்டாகும். உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டால் நான்கைந்து வாரங்களுக்குத் தொடர்ச்சியாக இந்தப் பாதிப்பு இருக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் சாதாரண வயிற்றுப்போக்குதான் என்று யாரும் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம். உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மலத்தைப் பரிசோதனை செய்வதன் மூலமாக இந்த பாக்டீரியா பாதிப்பைக் கண்டறியலாம். இதைச் சரிசெய்வதற்கான மாத்திரை, மருந்துகள் இருக்கின்றன. அதனால், யாரும் அச்சப்படத் தேவையில்லை.

குழந்தைகள்

மக்கள், சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னதாக, பாத்ரூம் சென்று வந்த பின்னர் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். அதோடு ஆரோக்கியமான, சுகாதாரமான உணவுகளை உட்கொண்டால் இந்த பாக்டீரியா பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ளலாம்’’ என்கிறார் பாலகிருஷ்ணன்.

ஷிகெல்லா

``தமிழ்நாட்டில் ஷிகெல்லா பாதிப்பைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றனவா?’’ - தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் குழந்தைச்சாமியிடம் கேட்டோம்...

``ஷிகெல்லா காலம் காலமாக இருக்கிற ஒரு பாக்டீரியா. இது நிபாபோல புதிதான ஒன்றல்ல. இந்த பாக்டீரியாவைக் கண்டறிவதும் சிகிச்சையளிப்பதும் எளிமையான ஒன்று. வயிற்றுப்போக்கை உருவாக்கும் ஷிகெல்லா பாக்டீரியா பாதிப்பைத் தடுக்கும் அனைத்து வசதிகளும் தமிழ்நாட்டில் இருக்கின்றன.

கை கழுவுதல்

குழந்தைகளுக்கு டயரியா போன்ற பாதிப்புகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும். மக்களும் தாங்கள் குடிக்கும், பயன்படுத்தும் நீரைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுகாதாரமான உணவுகளையே சாப்பிட வேண்டும்’’ என்கிறார் குழந்தைசாமி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க