வீட்டில் பிரசவம் வேண்டவே வேண்டாம்... ஏற்படும் ஆபத்துகள் இவை!

யூ டியூபில் வீடியோகளைப் பார்த்து வீட்டிலேயே சுகப்பிரசத்துக்கு முயல்வது தாய், சேய் என இரண்டு உயிர்களுக்கும் ஆபத்து விளைவிக்கிற விஷயம்!

`சாதாரண தலைவலிக்கே சுய மருத்துவம் கூடாது. அது அலோபதியோ, இயற்கையோ தகுந்த மருத்துவரின் ஆலோசனையுடன் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்' எனச் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், இயற்கை மருத்துவம் என்பதைத் தவறாகப் புரிந்துகொண்டு, யூடியூப் வீடியோ பார்த்து வீட்டிலேயே சுகப் பிரசவம் செய்ய முயல்வதை என்னவென்று சொல்வது? தாய், சேய் என இரண்டு உயிர்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் விஷயம் அல்லவா? அப்படி, திருப்பூரில் ஒரு தம்பதியர் வீட்டிலேயே பிரசவம் நடத்தப்போய், அந்த இளம் தாய் அதிகப்படியான ரத்தப்போக்கினால் உயிரை இழந்த சோகம் அரங்கேறியுள்ளது. இரண்டு நாள்களாகப் பதற்றமாகப் பேசப்பட்டுவரும் இந்தச் சம்பவம் பற்றி, மகப்பேறு மருத்துவர் வாணி ஷயாம் சுந்தர் அவர்களிடம் பேசினேன்.

பிரசவம்

``இந்தச் சம்பவத்தை நேற்று மீடியாக்களில் படித்து மிகவும் துயரப்பட்டேன். `ஃபேஸ்புக், வாட்ஸ்அப், யூ டியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் செய்ய முயல்பவர்களுக்கு என் மருத்துவமனையில் அனுமதி கிடையாது' என நேற்றே ஒரு போர்டு மாட்டிவிட்டேன். மருத்துவம் வளர்ந்துவிட்டபோதும் இப்போதும் பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறு ஜென்மம். ஆனால், வீட்டிலேயே பிரசவம் பார்க்கிறேன் என ஒரு பெண்ணின் உயிருடன் விளையாடிவிட்டார்கள். தாயில்லாமல் நிற்கும் அந்தக் குழந்தைகளுக்கு என்ன நியாயம் சொல்வது. அந்தக் காலத்தில் மருத்துவ வசதிகள் எல்லா இடங்களிலும் கிடைக்கவில்லை. அதனால், வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது நடந்தது. தவிர, `சுகப்பிரசவம் நடப்பதில் சிக்கல். உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிடுங்கள்' என்று சொல்லும் அளவுக்கு அனுபவம் வாய்ந்த வயதான பாட்டிகள் அந்தக் காலத்தில் இருந்தார்கள். இன்றோ அப்படியில்லை. கருத்தரித்த பெண்களுக்கான அத்தனை வாய்ப்புகள் மற்றும் ஆலோசனைகளும் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கின்றன. அதைப் பயன்படுத்திக்கொள்வதுதான் தாய், சேய் இருவருக்கும் நல்லது'' என்றவர், வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதால், ஏற்படக்கூடிய ஆபத்துகள், பிரசவ முறைகள் பற்றி விளக்கமாகச் சொன்னார்.

டாக்டர் வாணி* பிரசவம் நடக்கும் இடம் முதலில் சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், தாய்க்கும் சேய்க்கும் தொற்றுநோய்கள் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

* பிரசவ வலி ரொம்ப நேரம் இருந்தால், அந்த வலியை அதிகப்படுத்த டிரிப்ஸ் போட்டு, சீக்கிரம் டெலிவரியை முடிக்க வேண்டும். இல்லையென்றால், தாய்க்கு மிகுந்த சிரமத்தைக் கொடுத்துவிடும். 

* கருப்பையின் வாய் நிமிடத்துக்கு நிமிடம் விரிந்துகொண்டே வந்து திறக்கும். அதை மருத்துவர்தான் சரியாகக் கண்காணிக்க முடியும்.  

* குழந்தை வெளியே வருவதற்கு முன்பே பனிக்குடம் நீர் முழுவதும் வெளியேறிவிட்டால், குழந்தைக்கு மூச்சுத்திணறுதல் போன்ற ஆபத்து ஏற்படலாம்.

* தாயின் உறுப்பைவிடக் குழந்தையின் தலை பெரிதாக இருந்தால், குழந்தையை வெளியே எடுக்க முடியாது.    

*. குழந்தையின் தலை வெளியே வரமுடியாமல் உள்ளேயே மாட்டிக்கொள்ளலாம். விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், பெண்ணுறுப்பை நோக்கிக் கீழே இறங்கவேண்டிய தலை, கருப்பையின் பக்கவாட்டிலோ, மேற்புறமாகவோ நின்றுவிட்டால், பிரசவம் சிக்கலாகிவிடும்.

* குழந்தை பிறந்த பிறகு நஞ்சுக்கொடி சரியாக வெளியே வந்துவிட்டதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், உடனடியாக மயக்க மருந்து நிபுணர் உதவியுடன் தாய்க்கு மயக்க மருந்து கொடுத்து நஞ்சுக்கொடியை வெளியே எடுக்க வேண்டும். இதை வீட்டில் எப்படிச் செய்ய முடியும்?

வீட்டில் பிரசவம்

* குழந்தை பிறந்ததும் கருப்பைச் சுருங்கிவிட்டதா என்று செக் செய்ய தெரிந்திருக்க வேண்டும். 

*  பிரசவத்தின்போது அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டால், அதைத் தடுக்கும் மருந்தை டிரிப்ஸில் கலந்து தாய்க்கு ஏற்றி, அவர் உயிரைக் காப்பாற்ற வேண்டும். டிரிப்ஸுக்குக் கட்டுப்படவில்லை எனில், கருப்பையின் வாயில் சின்ன தையல் போட்டோ, சிறிய ஆப்ரேஷன் செய்தோ தாயைக் காப்பாற்ற வேண்டும். டிரிப்ஸ், தையல், ஆபரேஷன் இதெல்லாம் வீட்டிலேயே பிரசவம் பார்க்கும்போது, இது சாத்தியமில்லை. (நேற்று நடந்த சம்பவத்திலும், அந்தப் பெண் அதிகமான ரத்தப்போக்கினால் இறந்திருக்கிறார்)

* குழந்தை பிறந்ததும் அதைக் கவனித்துக்கொள்ளவும், ஏதாவது பிரச்னை என்றால் காப்பாற்றவும், குழந்தைகள் நல நிபுணர் அருகில் இருக்க வேண்டும்.

ஒரு தாய்க்குப் பிரசவம் நடக்கும்போது, மேலே சொன்ன அத்தனை உதவிகளும் அருகே இருக்க வேண்டும். இல்லையென்றால், அது உயிரிழப்பை ஏற்படுத்திவிடலாம்'' என்கிறார் டாக்டர் வாணி ஷ்யாம் சுந்தர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!