வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (27/07/2018)

கடைசி தொடர்பு:20:57 (27/07/2018)

மிக நீளமான அரிய சந்திர கிரகணம்... வெறும் கண்ணால் பார்க்கலாமா, வெளியே வரலாமா? #LunarEclipse

மிக நீளமான அரிய சந்திர கிரகணம்... வெறும் கண்ணால் பார்க்கலாமா, வெளியே வரலாமா?  #LunarEclipse

ந்த நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், வானில் இன்று (ஜூலை 27-ம் தேதி) இரவு ஓர் அரிய நிகழ்வைக் காணப் போகிறோம்.... 21-ம் நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணம். ``இந்த அற்புத நிகழ்வைத் தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் வானில் பார்க்க முடியும். சந்திரன் சிவப்பு நிறத்தில் ஜொலிக்கப் போகிறது’’ என்கிறார்கள் வானியல் ஆராய்ச்சியாளர்கள். 

சந்திரன்

இந்தியாவில் தெளிவாகப் பார்க்கலாம்!

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த அதிசய நிகழ்வைப் பார்க்க முடியும். `இன்று (ஜுலை 27-ம் தேதி) இரவு 11:44 மணிக்கு இந்தியாவில் சந்திர கிரகணம் தென்படும். மேலும், நாளை (ஜூலை 28-ம் தேதி) நள்ளிரவு 12:45 மணிக்கு மேல் முழுமையான சந்திர கிரகணத்தைக் காணமுடியும்’ என்றும் அறிவியலாளர்கள் கணித்திருக்கிறார்கள். `இந்தியாவில் மட்டுமல்லாமல் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் கிரகணம் தென்படும்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

ஒருபுறம் சந்திர கிரகணத்தைக் காண ஆர்வத்தோடு தயாராகிறவர்களும் இருக்கிறார்கள். இன்னொருபுறம், கிரகணத்தைப் பார்த்தால் ஏதாவது உடல்நலக் கோளாறுகள் வந்துவிடுமோ என்று அச்சம்கொள்பவர்களும் இருக்கிறார்கள்.  த.வி.வெங்கடேஸ்வரன்

``கிரகணம் பற்றிப் புராணங்களிலும் ஜோதிடத்திலும் பல்வேறு கதைகளும் நம்பிக்கைகளும் நிலவிவருகின்றன. கிரகணங்கள் ஏற்பட என்ன காரணம் என்று தெரியாத காலத்தில் இதுபோன்ற நம்பிக்கைகள் நிலவிவந்தன. ஆனால், உண்மையான காரணத்தை, 1,500 ஆண்டுகளுக்கு முன்னரே ஆரியப்பட்டா கண்டறிந்து, அந்தப் பொய்யான நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.  இன்னமும் அதையே நம்பிக்கொண்டிருக்கவேண்டியதில்லை. கிரகணம் ஏன் நடக்கிறது என்பதன் அறிவியல் விளக்கத்தைத் தெரிந்துகொண்டால் போதும், வீண் வதந்திகளுக்கு இடம்கொடுக்க மாட்டோம்’’ என்கிறார் மத்திய அரசின் விக்யான் பிரசார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், எழுத்தாளருமான த.வி.வெங்கடேஸ்வரன்.

மேலும், சந்திர கிரகணம் எப்படி நடக்கிறது, இப்போது அதிக நேரம் அது நீடிக்க என்ன காரணம் என்பதையும் விவரிக்கிறார்...

``சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்பது சந்திரன், பூமியின் பின்னால் கடந்து செல்லும்போது, பூமி சூரியனின் கதிர்களை சந்திரன் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுகிறது. அதாவது சூரியனால் பூமிக்கு நிழல் தோன்றுகிறது. அந்த நிழல் சந்திரன் மீது விழுகிறது. இதனால், சந்திரன் தெளிவாகத் தெரியாமல் போகும். இந்ந நிகழ்வையே சந்திர கிரகணம் என்கிறோம். முழு நிலவில் மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும். இந்த கிரகணத்தின்போது எந்தக் கோளிலும் எந்த மாற்றமும் நிகழாது. குறிப்பாக, எந்தக் கதிர்வீச்சும் வெளியாகாது. இது வெறும் நிழல் விளையாட்டே.  

சந்திர கிரகணம்

மிக நீளமான சந்திர கிரகணம்... காரணம் என்ன? 

இந்த நூற்றாண்டில் நிகழும், அதிக நேரம் நீடிக்கும் சந்திர கிரகணம் இது. ஒரு மணி நேரம் 43 நிமிடங்கள் (103 நிமிடங்கள்) நீடிக்கிறது. கிரகணம் தொடங்கி முடிய 3 மணி நேரம் 55 நிமிடங்கள் ஆகும். கிரகணத்தின் வகை மற்றும் நீளம், நிலவின் இடம் அதன் சுற்றுப்பாதைகளில் எங்கிருக்கிறது என்பதைப் பொறுத்து அமையும். அதாவது, சந்திரன் நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. இதனால், சில நேரங்களில் அது பூமிக்கு அருகில் இருக்கும்; சில நேரங்களில் மிக தொலைவில் இருக்கும். அருகில் இருக்கும்போது, சந்திர கிரகணம் ஏற்பட்டால் குறுகிய காலம்தான் நீடிக்கும். தொலைவில் இருந்தால், நீண்ட நேரம் நீடிக்கும். இந்த முறை பூமிக்கு மிகத் தொலைவில் சந்திரன் இருக்கிறது; அதனால் கிரகணம் நீண்ட நேரம் நடக்கிறது. 

அதேபோல, பூமியின் மையப் பகுதியும், சந்திரனின் மையப் பகுதியும் ஒரே நேர்க்கோட்டில் இருந்தாலும் கிரகணம் அதிக நேரம் நீடிக்கும். இந்த முறை பூமியிலிருந்து தொலைவில் இருப்பதோடு, மையக்கோடும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கிறது. எனவே, மிக நீளமான சந்திர கிரகணம் நடக்க இதுதான் அறிவியல் சொல்லும் காரணம். நீண்ட நேரம் கிரகணம் நடக்கிறது என்பதால், அதிகக் கதிர்வீச்சு வெளியாகும் என்று அச்சப்படத் தேவையில்லை. முதலில் சொன்னதுபோல இது வெறும் நிழல் விளையாட்டுதான். எனவே, இந்த நேரத்தில் சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது, தூங்குவது, வெளியில் வருவது எதையும் செய்யலாம். பழைய நம்பிக்கைகளையும், வீண் வதந்திகளையும் நம்ப வேண்டாம். அவையெல்லாம் கட்டுக்கதைகள். எனவே, பொதுமக்கள் இந்த அழகான, அற்புதமான நிகழ்வைத் தவறாமல் பார்த்து ரசியுங்கள். இதுவும் மற்ற நாள்களைப்போல, வழக்கமான நாள்தான். இதை வெறும் கண்ணாலும் பார்க்கலாம். டெலஸ்கோப் வழியாக இந்தக் காட்சியை முழுமையாகவும் ரசிக்கலாம்.மகப்பேறு மருத்துவர் சசித்ரா

மற்றுமோர் அதிசயம்!

அதோடு இந்த மாத இறுதியிலேயே (ஜூலை 31-ம் தேதி) மற்றோர் அற்புத நிகழ்வும் நடக்கப் போகிறது. பூமி, செவ்வாய், பூமி, சூரியன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வருகின்றன. அதனால், செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் தென்படப் போகிறது. அன்று இரவு நம் தலைக்கு மேல் செவ்வாய் இருக்கும். அன்றைக்கு வானம் தெளிவாக இருந்தால், சிவப்பான நிலாவையும், சிவப்பான செவ்வாயையும் ஒரே நேரத்தில் காண முடியும்" என்கிறார் வெங்கடேஸ்வரன்.

``சந்திர கிரகணத்தின்போது, கர்ப்பிணிகள் வெளியில் வரலாமா, இது குறித்து மருத்துவத்தில் ஏதேனும் சொல்லப்பட்டிருக்கிறதா?’’ - மகப்பேறு மருத்துவர் சசித்ரா தாமோதரனிடம் கேட்டோம்...

`` `சந்திர கிரகணத்தின்போது, கர்ப்பிணிகள் வெளியில் வரக் கூடாது. அப்படி வந்தால் அவர்களுக்குக் குழந்தை குறைபாட்டுடன் பிறக்கும்’ என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், அதற்கு அறிவியல் பூர்வமாக, எந்த ஆதாரமும் இல்லை. மருத்துவத்திலும் அப்படி ஒன்றும் சொல்லப்படவில்லை. எனவே, கர்ப்பிணிகள் சந்திர கிரகணத்துக்காக, வெளியில் வர அச்சப்படத் தேவையில்லை’’ என்கிறார் சசித்ரா தாமோதரன். 
 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்