வெளியிடப்பட்ட நேரம்: 14:02 (30/07/2018)

கடைசி தொடர்பு:17:56 (30/07/2018)

பிரசவம்... கோமா... இப்படியும் நடக்குமா; மருத்துவம் என்ன சொல்கிறது?

சிசேரியனில் நஞ்சுக்கொடியை எடுப்பது உட்பட எல்லாமே வெளியில் நடப்பதால், த்ராம்போஎம்பாலிக் டிஸாடர் வராமல், ஒரு சிசேரியனை எப்படிச் செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் மிக மிகக் கவனமாக இருப்போம்.

பிரசவம்... கோமா... இப்படியும் நடக்குமா; மருத்துவம் என்ன சொல்கிறது?

னதை வலிக்கச் செய்யும் நிகழ்வு ஒன்று, ஒரு வாரமாக வாட்ஸ்அப் குழுக்களில் பரவிக்கொண்டிருக்கிறது. 'கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு சிசேரியன் மூலம் குழந்தைப் பிறந்தபோது, கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். சிசேரியன் செய்தபோது, ரத்தக் குழாய்களில் ஏற்பட்ட அடைப்பு, மூளை நரம்புகளுக்கு நகர்ந்துபோனதே காரணம்' என்கிறது அந்தத் தகவல். சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்துவிட்ட இந்தக் காலத்தில், இப்படியொரு செய்தியைத் திரும்பத் திரும்ப பரப்புவது, கர்ப்பிணிகள் மத்தியில் பதற்றத்தையும் பயத்தையும் ஏற்படுத்தும் அல்லவா? இதில் இருக்கும் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள, மகப்பேறு மருத்துவர் வாணி ஷ்யாம் சுந்தரிடம் பேசினேன்.

சிசேரியன் - கோமா

``அந்த வாட்ஸ்அப் மெசேஜ் சொல்லும் பிரச்னையின் பெயர், த்ராம்போஎம்பாலிக் டிஸாடர்ஸ் (Thromboembolic Disorders). டெலிவரிக்குப் பிறகு நஞ்சுக்கொடி வெளியே வரும் இல்லையா? இந்த நஞ்சுக்கொடியானது, கருப்பையினுள் இணைந்திருக்கும் பகுதிகளில் பெரிய பெரிய துவாரங்கள் இருக்கும். சிசு வெளியே வந்து, கருப்பைச் சுருங்கும்போது, அந்தத் துவாரங்களில் இருந்தெல்லாம் ரத்தம் வெளியேறும். அடுத்து, கருப்பையினுள் அடர்ந்து கிடக்கும் நஞ்சுக்கொடி, பிரசவத்துக்குப் பிறகு வெளியேறும்போது அல்லது மருத்துவர் வெளியே எடுக்கும்போது, அந்தப் பகுதியில் இருக்கும் ரத்தநாளங்கள் எல்லாம் திறந்துகொள்ளும். கருப்பைச் சுருங்குவது மற்றும் நஞ்சுக்கொடி வெளியேறுவது என.. இரண்டு சம்பவங்கள் நடக்கிறபோது, இரண்டு பக்கங்களிலிருந்து ரத்தம் வெளியே வரும். இந்தச் சமயத்தில், ரத்தத்தின் சில துளிகள் உறைந்து... இதயம், மூளை அல்லது நுரையீரலுக்குச் சென்றுவிடலாம். வாட்ஸ்அப் தகவலில் சொல்லப்பட்ட பெண்ணுக்கு, இப்படி உறைந்த ரத்தத்துளிகள் மூளைக்குள் சென்றிருக்கிறது. அதனால்தான் குழந்தைப் பிறந்ததும் கோமா நிலைக்குச் சென்றுவிட்டிருக்கிறார்'' என்றவர், இந்தப் பிரச்னை யாருக்கெல்லாம் வரக்கூடும் எனச் சொல்கிறார்.

மருத்துவர் வாணி ஷ்யாம் சுந்தர்''நீரிழிவு, குடும்பத்தில் யாருக்காவது ரத்தம் உறைவதில் பிரச்னை இருப்பது, கருவுற்ற காலத்தில் அதிகமாக வாந்தி எடுப்பது, ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைச் சுமப்பதால் கருப்பை விரிவடைந்து போவது, அதிக ரத்த அழுத்தம், கை கால்களில் வீக்கம், கர்ப்பம் தரித்தது முதல் படுக்கையிலேயே இருப்பது போன்றவையே இந்தப் பிரச்னைக்கான பொதுவான காரணங்கள். அதேநேரம், மேலே சொன்ன எந்தப் பிரச்னைகளும் இல்லாத சில பெண்களுக்கும் நடக்கலாம். இந்தப் பிரச்னை, டெலிவரி நடந்த 24 மணி நேரத்துக்குள் வரலாம்'' என்றவர், த்ராம்போஎம்பாலிக் டிஸாடர்ஸ் வருவதற்கான இன்னொரு முக்கியமான காரணத்தையும் குறிப்பிட்டார். 

``குழந்தைப் பிறந்ததும் நஞ்சுக்கொடி அதுவாகவே வந்துவிடும். 30 நிமிடம் கழித்தும் வரவில்லை என்றால், சம்பந்தப்பட்ட பெண்ணின் வயிற்றின் மேல் லேசாக அழுத்தி, நஞ்சுக்கொடியை வெளியே எடுத்துவிடுவோம். ஆனால், இப்படி எடுக்கும்போது லேசான அழுத்தம் மட்டுமே கொடுக்க வேண்டும். அதிக அழுத்தம் கொடுத்து நஞ்சுக்கொடியை வெளியே எடுத்தால், இந்தப் பிரச்னை வரலாம். அடுத்தது, சிசேரியனில் நஞ்சுக்கொடியை எடுப்பது உள்பட எல்லாமே வெளியில் நடப்பதால், த்ராம்போஎம்பாலிக் டிஸாடர் வராமல், ஒரு சிசேரியனை எப்படிச் செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் மிக மிகக் கவனமாக இருப்போம். மிக மிக மென்மையாகத்தான் நஞ்சுக்கொடியை எடுப்போம். என் அனுபவத்தில் இப்படி ஒரு பிரச்னையைச் சந்தித்ததில்லை; கேள்விப்பட்டதும் மிகவும் குறைவுதான். ஏனென்றால், கர்ப்பமாக இருக்கும்போது பெண்களுக்கு வரும் நீரிழிவு, ரத்த அழுத்தம், அதிகமான வாந்தி, ரத்த உறைவதில் பிரச்னை என எல்லாவற்றையும் நாங்கள் கன்ட்ரோலில் வைத்துத்தான் பிரசவம் பார்ப்போம். அதனால், அந்த வாட்ஸ்அப் மெசேஜ்க்கு கர்ப்பிணிகள் பயப்படத் தேவையில்லை. சுகப் பிரசவமோ, சிசேரியனோ... பயப்படாமல் உங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றி நிம்மதியாகக் கனவு கண்டுகொண்டிருங்கள்'' என்கிறார் வாணி ஷ்யாம். 


டிரெண்டிங் @ விகடன்