வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (31/07/2018)

கடைசி தொடர்பு:13:25 (31/07/2018)

ஐந்தில் 3 குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதில்லை! ஆய்வில் தகவல்

பிறந்த முதல் ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்கப்படாத குழந்தைகளுக்கு, ஆபத்தான விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

குழந்தைகள்

யூனிசெஃப் (UNICEF) மற்றும் உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில், பிறந்த முதல் ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் ஊட்டப்படும் குழந்தைகள்  பிழைத்துக்கொள்வதாகவும், தாய்ப்பால் கொடுப்பதில் சிக்கல் ஏற்படும் குழந்தைகளுக்கு,  உயிருக்கு ஆபத்தான விளைவுகள் ஏற்படுவதாகவும் அறியப்பட்டுள்ளது.  தாய்ப்பால் ஊட்டுவது கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவில் (65%) அதிகமாக உள்ளது. கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் இது (32%) குறைவாக உள்ளது.  இலங்கை, புருண்டியில் ( Burundi) பிறக்கும் 10 குழந்தைகளில் 9 பேருக்கு உடனடியாகத் தாய்ப்பால் ஊட்டப்படுவதாக ஆய்வு கூறுகிறது.

இதுதொடர்பாகப் பேசிய  யூனிசெஃப் அமைப்பின் நிர்வாக இயக்குநர், “குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் நேரம் முக்கியானது. இது, பல நாடுகளில் வாழ்வா... சாவா என்ற போராட்டத்துக்கு அழைத்துச் செல்கிறது.  ஒவ்வொரு வருடமும், பிறக்கும் குழந்தைகளில் 5ல் மூன்று குழந்தைகளுக்கு ஆரம்ப நிலையில் தாய்ப்பால் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. குழந்தை பிறந்த அந்த நிமிடங்களில் தாய்மார்களுக்குப் போதிய ஆதரவு இல்லாதது, சில மருத்துவக் காரணங்கள் மற்றும் உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட காரணங்களால் இந்தச் சிக்கல் ஏற்படுகிறது' என்று கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் கூறுகையில்,  `தாய்ப்பால் ஊட்டுவது குழந்தைகள் தங்கள் வாழ்வை சிறப்பாகத் தொடங்க வழிவகுக்கும். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு குடும்ப உறுப்பினர்கள், சுகாதார மைய ஊழியர்கள், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க உதவ வேண்டும்' என்றார்.