இரட்டை கர்ப்பப்பை... இரு குழந்தைகள்... 50 கோடியில் ஒருத்தி! | Mother with TWO wombs becomes pregnant in both at the same time and gives birth to two babies

வெளியிடப்பட்ட நேரம்: 09:52 (01/08/2018)

கடைசி தொடர்பு:09:52 (01/08/2018)

இரட்டை கர்ப்பப்பை... இரு குழந்தைகள்... 50 கோடியில் ஒருத்தி!

இரட்டை கர்ப்பப்பை கொண்ட பெண், பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள்! - இது இங்கிலாந்து அதிசயம்

இரட்டை கர்ப்பப்பை... இரு குழந்தைகள்... 50 கோடியில் ஒருத்தி!

குழந்தைகள் இருக்கிற வீடுகள் குதூகலம் நிறைந்தவை. அதிலும், வீட்டில் இரட்டைக் குழந்தைகள் என்றால் சொல்லவே வேண்டாம்... அவர்களை வளர்ப்பதில் பெற்றோருக்குச் சில சங்கடங்கள் இருந்தாலும், தங்களுக்குக் கிடைத்த பொக்கிஷமாகத்தான் பெற்றோர்கள் தங்களின் இரட்டைக் குழந்தைகளை நினைப்பார்கள். பெற்றோருக்கு மட்டுமல்ல... நம்மில் பலருக்குமே இரட்டைக் குழந்தைகள் இன்றைக்கும் ஓர் அதிசயமே. நிலைமை இப்படியிருக்க, குழந்தைப் பிறப்பில் சிக்கல் என்று கருதப்படுவது ஒரு பெண்ணுக்கு இரண்டு கர்ப்பப்பைகள் இருப்பது. அப்படிப்பட்ட பெண் ஒருவருக்கு இரண்டு குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறந்திருப்பது அவரை மட்டுமல்லாமல், மருத்துவ உலககையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. உலகளவில் இதுவரை இரட்டை கர்ப்பப்பைகள் கொண்ட நூறு பெண்களுக்கு இதுபோல இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. 50 கோடி பெண்களில் ஒருவருக்குத்தான் இது போல இயல்பாகக் குழந்தை பிறப்பதும் நேரும். இப்போது இந்த அரிய நிகழ்வு நடந்திருப்பது இங்கிலாந்தில்!

கர்ப்பப்பை

இங்கிலாந்தின் கார்ன்வால் (Cornwall) கவுன்ட்டியிலிருக்கும் கம்போர்ன் (Camborne) நகரில் வசிப்பவர் ஆண்ட்ரூ. தீயணைப்பு வீரராகப் பணியாற்றி வருகிறார். இவர் மனைவி ஜெனிஃபர்தான் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார். கர்ப்பமாக இருந்த ஜெனிஃபருக்கு, கடந்த பிப்ரவரி மாதம், ஸ்கேன் செய்து பார்த்தபோதுதான் அவருக்கு இரண்டு கர்ப்பப்பை இருந்ததும், ஒவ்வொன்றிலும் ஒரு குழந்தை இருந்ததும் தெரியவந்திருக்கிறது. சரியாக கருத்தரித்த 34-வது வாரத்தில் அவருக்கு பிரசவவலி ஏற்பட்டிருக்கிறது. அறுவைச்சிகிச்சையின் மூலமாக இரண்டு குழந்தைகளையும் வெளியே எடுத்திருக்கிறார்கள். குழந்தைகளில் ஒன்று ஆண்; மற்றொன்று பெண் என்பது ஜெனிஃபருக்குக் கூடுதல் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. பெண்களின் மலட்டுத்தன்மைக்கான காரணிகளில் மிக முக்கியக் காரணியாக இருப்பது இரண்டு கர்ப்பப்பை.மனுலஷ்மி

`இரண்டு கர்ப்பப்பைகொண்ட பெண்களுக்கு குழந்தை பிறப்பதே கடினம் என்ற நிலையில், இரண்டு குழந்தைகள் பிறப்பதென்பது ஓர் மருத்துவ விந்தை’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

``தாயின் வயிற்றில் இருக்கும் அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும், முதலில் இரண்டு கர்ப்பப்பை உருவாகி பின்னர்தான் ஒரே கர்ப்பப்பையாக மாறும். சிலருக்கு மாறாமல் அப்படியே இரண்டாகவே இருந்துவிடும். 3,000 பெண்களில் ஒருவருக்கு இதுபோல இருக்கும். இதற்கு சிறப்புக் காரணம் என்று ஏதுவுமில்லை. குழந்தையாகப் பிறக்கும்போதே அவர்கள் இரட்டை கர்ப்பப்பையுடன் (Bicornuate uterus) பிறப்பார்கள். அவர்களில் நூற்றுக்கு ஐம்பது பெண்களுக்குத்தான் இயற்கையாகக் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிலும், பலருக்கு கரு வயிற்றில் தங்காது, கலைந்துவிடும். ஒரு சிலர்தான் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள்.

இரண்டு கர்ப்பப்பை உடைய பெண்களுக்கு, ஒரு கர்ப்பப்பையில் குழந்தை வளர்வதே கஷ்டம். ஜெனிஃபருக்கு இரண்டு கர்ப்பப்பையிலும் குழந்தைகள் வளர்ந்து, பிறந்திருக்கின்றன. ஏழாவது மாதத்திலேயே வலி எடுத்து, அறுவைச்சிகிச்சை செய்துதான் குழந்தைகளை வெளியே எடுத்திருக்கிறார்கள். என்றாலும், மருத்துவத்துறையைப் பொறுத்தவரை இது அரிதான ஒரு நிகழ்வு.

செயற்கை கருத்தரிப்பு

இரட்டைக் கர்ப்பப்பை உடைய பெண்கள் தங்களுக்குக் குழந்தை பிறக்காது என்று கவலைப்படத் தேவையில்லை. இப்போது ஏராளமான நவீன மருத்துவ வசதிகள் இருக்கின்றன. செயற்கை கருத்தரித்தல் மூலமாகக்கூட அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்’’ என்கிறார் மகளிர் நல மருத்துவர் மனுலஷ்மி.

இதேபோன்ற சம்பவங்கள் நம் நாட்டிலும் அரிதிலும் அரிதாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இயற்கையாக இல்லாவிட்டாலும், செயற்கை முறையில் இரட்டைக் கர்ப்பப்பை கொண்ட பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து கொண்டிருக்கின்றன.

அதுபோன்ற ஒரு பிரசவத்தில், தனக்கேற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி,

``உருவாகும்போது வலது மற்றும் இடமாக இரண்டு கர்ப்பப்பைகள் உருவானாலும், இரண்டுக்கும் நடுவில் உள்ள திசுக்கள் மறைந்து ஒரே கர்ப்பப்பையாக தாயின் வயிற்றில் இருக்கும்போதே மாறிவிட வேண்டும். சில பெண்களுக்கு இரண்டு பைகளும் அப்படியே இருந்துவிடும். பொதுவாக இரட்டை கர்ப்பப்பை உள்ள பெண்களுக்கு அவற்றில் கரு தங்காது. கர்ப்பப்பை வாய் வளைந்து இருப்பதால், விந்தணுக்கள் உள்ளே செல்வதில் சிக்கல் இருக்கும். அதனால், இயற்கையான முறையில் கருத்தரிப்பது கடினம்.

குழந்தை

எங்களிடம், செயற்கையான முறையில் இரட்டை கர்ப்பப்பை கொண்ட பெண் ஒருவர் சிகிச்சைக்காக வந்திருந்தார். அவருக்கு ஐ.யூ.ஐ (Intrauterine insemination) சிகிச்சையளித்து கருத்தரிக்கச் செய்தோம். பரிசோதனை செய்து பார்த்தபோது இரண்டு கர்ப்பப்பைகளிலும் குழந்தை வளர்வது தெரிந்தது. சற்று சவாலாகவே இருந்தது அந்தப் பிரசவம். அறுவைச்சிகிச்சை செய்துதான் இரண்டு குழந்தைகளையும் வெளியே எடுத்தோம். இரண்டுமே பெண் குழந்தைகள்; இருவருக்கும் இப்போது ஐந்து வயது. ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அந்தப் பெண்ணுக்கு இரண்டு கர்ப்பப்பைகள் இருந்தாலும், ஒரு கர்ப்­பப்பைவாய்தான் இருந்தது. சில பெண்களுக்கு கர்ப்பப்பைவாயும் இரண்டாக இருக்கும்.

இங்கிலாந்தில் இரண்டு கர்ப்பப்பை கொண்ட பெண், இயற்கையாகக் கருத்தரித்து, இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார் என்பது ஆச்சர்யமான நிகழ்வு’’ என்கிறார் மருத்துவர் ஜெயராணி.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்