தாய்ப்பால் புகட்டினால் மார்பகப் புற்றுநோயைத் தடுக்க முடியுமா? - மருத்துவ ஆராய்ச்சிகள் சொல்வதென்ன? #WorldBreastFeedingWeek

தாய்ப்பால் புகட்டினால் மார்பகப் புற்றுநோயைத் தடுக்க முடியுமா? - மருத்துவ ஆராய்ச்சிகள் சொல்வதென்ன? #WorldBreastFeedingWeek

தாய்ப்பால்  என்பது வெறும் பசியாற்றும் திரவம் மட்டுமல்ல... குழந்தைக்கான முதல் தடுப்பு மருந்தும் கூட.  குழந்தைக்கு மட்டுமின்றி, தாய்க்கும் பல நன்மைகளை வாரி வழங்கும் அற்புதம், தாய்ப்பால். தாய்ப்பால் கொடுப்பதை வலியுறுத்தும்விதமாக, ஆண்டுதோறும் ஆகஸ்ட்  1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை `உலக தாய்ப்பால் வார விழா’ கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பிரசாரங்களும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு `தாய்ப்பால் ஊட்டுதல் வாழ்க்கையின் அடித்தளம்’ என்பதை அது மையக் கருத்தாக அறிவித்துள்ளது உலக சுகாதார மையம். 

தாய்சேய்

சில தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுவதை சுமையாகக் கருதுகிறார்கள். குறிப்பிட்ட காலம்வரை  தாய்ப்பால் தருவதைத் தவிர்த்தால்  குழந்தைக்கு மட்டுமல்ல,  தாய்க்கும் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம் என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள். 

வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளைத் துணிவுடன் எதிர்கொள்ள மன உறுதியும் உடல் வலிமையும் தேவை.  உடல் வலிமைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அவசியம். பிறக்கும் குழந்தைக்கு முதலில் நோய் எதிர்ப்புச் சக்தி கிடைப்பது தாய்ப்பால் மூலமே. அதேபோல, தாயின் ஆரோக்கியம் மேம்பட வேண்டுமென்றால் தாய்ப்பால் புகட்டுவதை வெறுமனே கடமையாகச் செய்யாமல், அது குழந்தையின் எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளம் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். 

தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மாருக்கு நிறையப் பலன்கள் உண்டு. குழந்தைக்குத் தாயின்மீது ஒரு பிணைப்பை ஏற்படுத்தும்; பல்வேறு நோய்களில் இருந்து காக்கும். பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளில் முக்கியமானது மார்பகப் புற்றுநோய். `தாய்ப்பால் கொடுக்கும் பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு' என்று பிரேசிலில் நடைபெற்ற ஆராய்ச்சியில், மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். `குழந்தைக்குத் தாய்ப்பால் தரும் கால அளவு எந்த அளவுக்கு நீடிக்கின்றதோ, அந்தளவுக்கு மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்' என்று துனீசிய நாட்டின் மருத்துவத்துறை வல்லுநர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குழந்தை

பெண்களுக்கு இயல்பாகச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன், தாய்ப்பால் சுரக்கும்போது குறைந்துவிடும். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் மார்பகப் புற்றுநோய் செல்களுக்கு மிகப்பெரிய ஊக்கியாகச் செயல்படும் என பல மருத்துவ ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளன. 

`தாய்ப்பால் சுரக்கும்போது சாதாரண செல்களும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய செல்களும் தனித்துப் பிரிகின்றன. அப்போது புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களைத் தாய்ப்பாலில் இருக்கும் `ஹாம்லெட்’ (Hamlet) என்ற புரதமானது தாக்கி அழித்துவிடும். ஆனால், சாதாரண செல்களின்மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது’ என்று, `ஆசிய-பசிபிக் புற்றுநோய் தடுப்பு பத்திரிகை'யில் வெளியிடப்பட்டுள்ள பிரேசில் நாட்டு வல்லுநர்களின் ஆராய்ச்சிக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் ஆராய்ச்சி மைய மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்விலும் இது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

ஆனால், `இந்தியாவில் குழந்தை பிறந்த அரைமணி நேரத்தில் தாய்ப்பால் ஊட்டுபவர்களின் எண்ணிக்கை வெறும் 43.1 சதவிகிதம் மட்டுமே!’ என்கிறது உலக சுகாதார மைய அறிக்கை. `கிராமத்தில் உள்ளவர்களைக் காட்டிலும் நகர்ப்புறங்களில் உள்ள தாய்மார்கள் மிக மிகக் குறைந்த அளவிலேயே தாய்ப்பால் தருகின்றனர்' என்பதாக `ஹெல்த் இஷ்யூஸ் ஆஃப் இந்தியா'வின் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. 

தாய்ப்பால் புகட்டும் தாய்

குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே  மீண்டும் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு. ஆனால், தொடர்ச்சியாகக் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டி வருவதன்மூலம் கருத்தரித்தலைத் தள்ளிப்போட முடியும். 

குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைப்பது என்பது அவர்களின் அடிப்படை உரிமை. அதைச் சரியாகக் கொடுக்காதபோது வயிற்றுப்போக்கு, வாந்தி, ஆஸ்துமா, பெருங்குடல் அழற்சி, நுரையீரல் தொற்றுகள் உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படும். வளர்ந்தபிறகு சர்க்கரைநோய், உடல்பருமன் ஏற்படலாம்.  `தேவையான அளவு தாய்ப்பால் கிடைக்காததால் ஏற்படும் நோய்களால் மட்டும், இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றன’ என்று `யுனிசெஃப் அறிக்கை' எச்சரித்துள்ளது. ஆகவே, தாய்ப்பால் ஊட்டுவதை கடமையாகக் கருதாமல், அது குழந்தைக்கும் தனக்கும் பல நன்மைகளைத் தரும் மகத்துவமான செயல் என்றே தாய்மார் கருத வேண்டும்!

குழந்தைகளின் எதிர்காலம் தாய்ப்பாலில்தான் உள்ளது. அதை அவர்களுக்கு சரியாக வழங்கி அந்தக் குழந்தைகளைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு தாய்மாரிடம்தான் இருக்கிறது. ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க அனைவரும் உறுதியேற்போம்!

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!