வெளியிடப்பட்ட நேரம்: 11:37 (13/08/2018)

கடைசி தொடர்பு:11:37 (13/08/2018)

வீடியோ கேம் பழக்கத்திலிருந்து குழந்தைகளை மீட்க சில ஆலோசனைகள்!

குழந்தைகளை மனப் பாதிப்புக்கு உள்ளாக்கும் வீடியோ கேம்- ஓர் எச்சரிக்கை!

வீடியோ கேம் பழக்கத்திலிருந்து குழந்தைகளை மீட்க சில ஆலோசனைகள்!

பெற்றோர் கவனத்துக்கு... அளவில்லாமல் வீடியோ கேம் விளையாண்டால் குழந்தை மனநோய் பாதிப்புக்கு உள்ளாகலாம்!  

தெருவில் நின்று ஒரு சுற்று திரும்பிப் பார்த்தால் 99 சதவிகிதம் பேர் மொபைல் போனில் ஏதோவொரு வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்கள். கிராமம், நகரம் வித்தியாசமின்றி, எல்லா இடங்களிலும் இதுதான் நிலை. மொபைல் மொத்தப் பொழுதுகளையும் தின்று தீர்த்துக்கொண்டிருக்கிறது. 

வீடியோ கேம்ஸ்

``தொழில்நுட்ப வளர்ச்சி என்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அதுவே அடிமைப்படுத்துவதும் நிலைக்குச் செல்வது ஆபத்து" என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். 

2016-ல் உலக மக்கள் தொகையில் 251 கோடி பேர் வீடியோ கேம் (Online and Offline) விளையாடியிருக்கிறார்கள். 2018-ல் உலக அளவில் வீடியோ கேம் நிறுவனங்களின் சந்தை மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 8.2 லட்சம் கோடி என்கிறது புள்ளிவிவரங்களைச் சேகரித்து வெளியிடும் `ஸ்டேடிஸ்டா’ என்ற இணையதளம். இதன்மூலம் மொபைல் நம் வாழ்க்கையில் எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். 1971-ம் ஆண்டு, முதல்முதலாக வர்த்தக நோக்கில் வீடியோ கேம் இயந்திரங்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. அதன் பிறகு வரிசையாகப் பல படிநிலைகளைக் கடந்து இன்று விஸ்வரூப வளர்ச்சியடைந்திருக்கிறது வீடியோ, டிஜிட்டல் கேம் உலகம்.

வீடியோ கேம், டிஜிட்டல் வீடியோ கேம் விளையாட்டுகளுக்கு அடிமையாவது ஒரு வகை `மனநல பாதிப்பு’ (Mental Disorder) என்று ஐ.சி.டி-ன்( International Classification of Diseases) 11-வது பதிப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. உலகச் சுகாதார நிறுவனத்தின் கீழ் செயல்படும் நோய்களை வகைப்படுத்தும் சர்வதேச அமைப்பான ஐ.சி.டி-யின் 11 வது பதிப்பு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. `அடிமையாகும் குணாதிசயத்தால் ஏற்படும் மனநல பாதிப்பு` என்ற பிரிவின் கீழ் `கேமிங் டிஸ்ஆர்டர்’ வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

வீடியோ கேம்

கேம் விளையாடுபவர்கள் அனைவருக்கும் இந்த பாதிப்பு ஏற்படுவதில்லை. அதிகநேரம் விளையாடுபவர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, சமூகச் செயல்பாடுகளிலோ, குடும்ப வாழ்க்கையிலோ ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே கவனிக்கவேண்டும். இதுபோன்ற பாதிப்புகள் அவர்களுக்கு `கேமிங் டிஸ்ஆர்டர்` மனநோய் இருப்பதற்கான அறிகுறிகள்.

அன்றாடம் செய்ய வேண்டிய அடிப்படையான வேலைகளைக்கூட செய்யாமல் எப்போதும் கேம் விளையாடிக்கொண்டே இருப்பது, வேறு எதிலும் கவனமின்றி தீவிரமாக விளையாடுவது, இடைவெளியே இல்லாமல் அதிகநேரம் விளையாடுவது, போன்றவை `கேமிங் டிஸ்ஆர்டர்`-க்கான அறிகுறிகள். தொடர்ந்து கேம் விளையாடிக்கொண்டே இருந்தால் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, கல்வி, வேலை, பிற அன்றாடச் செயல்பாடுகள் பாதிக்கப்படும். ஒரு கட்டத்தில் பெரும் மன அழுத்தம் ஏற்படும். 

``வீடியோ கேம் விளையாடுவது ஒரு பொழுதுபோக்காக இருக்கும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை’’ என்கிறார் மனநல மருத்துவர் விகாஸ்.

``வீடியோ கேம் நிறுவனங்களின் இன்றைய அசுர வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கிறது. இந்த வளர்ச்சிதான் இன்று ஆபத்தாக நம்முன் நிற்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வீடியோ கேம் என்பது ஒரு பொழுதுபோக்காகத்தான் இருந்தது. டிவி பார்ப்பது, கிரிக்கெட் விளையாடுவது போன்று ஒரு பொழுதுபோக்கு. 80-களில் பிறந்தவர்கள் தெருக்களில், மைதானங்களில் விதவிதமான விளையாட்டுகளை விளையாடினார்கள். இப்போது இருக்கும் சிறுவர்கள் பெரும்பாலும் வீட்டிலேயேதான் இருக்கிறார்கள். கட்டாயத்தின் பேரில்தான் வெளியே செல்கிறார்கள்.

வீடியோ கேம் விளையாடுவது தவறில்லை. `அது உங்கள் தினசரி வாழ்க்கையை பாதித்தாலோ, அதனால் ஏதாவது கெட்டது நடந்தாலோ, அதை மனநல பாதிப்பு' என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். கேம் விளையாடுவதே மனநல பாதிப்பு என்று சொல்லமுடியாது. கேம் விளையாடுவதால் உறவோ, படிப்போ, வேலையோ பாதிக்கப்பட்டால் மட்டுமே அது மனநல பாதிப்பு..." என்கிறார் அவர். 

கேம்ஸ்

இப்போது ஆன்லைன் கேமில் பணம் சம்பாதிக்கவும், வெவ்வேறு இடங்களில் இருக்கும் நண்பர்களுடனும் சேர்ந்து விளையாடவும் முடியும். இது விளையாடுபவர்களுக்குக் கூடுதல் உற்சாகத்தைக் கொடுக்கிறது. விளையாட்டில் ஒவ்வொரு முறை வெற்றிபெறும் போதும், மற்றவர்களால் புகழப்படுவார்கள். அந்த உடனடி பாராட்டுதல் அவர்களை மேலும் மேலும் விளையாடத் தூண்டுகிறது. இங்கே புகழ்ச்சி, பாராட்டுக்கு மயங்காதவர்களே இல்லை. எந்தவொரு செயலுக்கு உடனடியாகப் பாராட்டு கிடைக்கிறதோ, அதை நாடிச் செல்வது இயல்பான ஒன்றுதான். அப்படிப்பட்ட உத்தியைத்தான் கேம் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. அதேபோல, விளையாட்டில் ஒரு சுவாரஸ்யமும், பணம் ஈட்டும் வழியும் இருந்தால் சொல்லவே வேண்டாம்.

வீடியோ கேமால் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் சிறுவர்களே. திரைப்படங்களுக்கு வயது தரச்சான்று இருப்பது போலவே, கேம்களுக்கும் இருக்கிறது. குறிப்பாக சிறுவர்கள் விளையாடும் கேம்களுக்கு இதை முறையாகக் கடைபிடிக்கவேண்டும். 18 வயதுக்கு மேலுள்ளவர்கள் விளையாடும் விளையாட்டை, அதற்குக் கீழ் இருப்பவர்கள் விளையாடக் கூடாது. 5 வயதுக்கு மேல், 10 வயதுக்கு மேல், 12 வயதுக்கு மேல், 15 வயதுக்கு மேல் எனப் பல பிரிவுகளாக கேம்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. கேம் சிடிக்கள், ஆன்லைன் கேமை `லாகின்' செய்யும்போதும், ஸ்மார்ட்ஃபோனில் கேம் டவுன்லோடு செய்யும் போதும், எத்தனை வயதுக்கு மேல் இருப்பவர்கள் அந்த கேமை விளையாடலாம் என்று தெளிவாகக் குறிப்பிடுவார்கள். ஆனால், அதையெல்லாம் பெற்றோர்கள் சரியாகக் கவனிப்பதில்லை. சிறுவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியாது. சிறுவர்கள் அடம்பிடித்தே வீடியோ கேம் போன்ற கருவிகளை வாங்கிவிடுவார்கள். `வாங்கிக் கொடுத்துவிட்டோம், ஏதோ விளையாடுகிறான்’ என்று பெற்றோர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும்.

சிறுவர்கள் விளையாடக்கூடாத வன்முறை, பாலியல் தொடர்பான கேம்கள் அவர்களின் மனதில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதை பெற்றோர்களே முறைப்படுத்த வேண்டும். சிறுவர்களுக்கு அதன் பின்விளைவுகள் தெரியாது. `குழந்தைகள் என்ன விளையாடுகிறார்கள்', `என்ன டவுன்லோடு செய்கிறார்கள்' என்றெல்லாம் கண்காணிக்க முடியவில்லையென்றால், கேம், ப்ளே ஸ்டேஷன், மொபைல்ஃபோன்கள் போன்றவற்றை அவர்களுக்கு வாங்கித்தரக் கூடாது. 

வயது வந்தவர்களும் இப்போது அதிகமாக கேம் விளையாடுகிறார்கள். செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யாமல் விளையாடுவதே பிரச்னைகளுக்குக் காரணம். நீண்டநேரம் கேம் விளையாடுவதால், தலைவலியும் கண்களுக்குப் பாதிப்பும் ஏற்படும். உடற்பயிற்சி செய்யாமல், சரியாகச் சாப்பிடாமல், போதிய அளவுக்குத் தண்ணீர் குடிக்காமல் விளையாடிக்கொண்டே இருந்தால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதை உடனடியாகக் கவனித்தாக வேண்டும்.

`எங்கள் வீட்டுக் குழந்தைகள் வீடியோ கேம் விளையாடுகிறார்கள்', `ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள்' என்று யாரும் பயப்படவேண்டிய அவசியமில்லை. வீடியோ கேம் ஒரு நல்ல பொழுதுபோக்குதான், ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு செய்வது நல்லது.

விளையாட்டு

சிறுவர்கள் கேமுக்கு அடிமையாவதைத் தடுக்க, பெற்றோருக்குச் சில ஆலோசனைகளை வழங்குகிறார் மனநல ஆலோசகர் விகாஸ்.

* தங்களுக்கான அடிப்படை வேலைகள் அனைத்தையும்  முடித்தபிறகே சிறுவர்களை மொபைல்போன், இணையதளம், வீடியோ கேம் போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.  

* வீடியோகேம் உள்ளிட்ட கருவிகளை ஒரு நாளில் இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாகப் பயன்படுத்துமாறு பெற்றோர்கள் பார்த்துக்கொள்ளவேண்டும். விடுமுறை நாள்களாக இருந்தாலும் அதுதான் அளவு. 

* வீடியோ கேம் விளையாட்டுகளுக்கும் வயதுக் கட்டுப்பாடு இருக்கிறது. ஈ.எஸ்.ஆர்.பி (ESRB - Entertainment Software Rating Board), பி.ஈ.ஜி.ஐ (PEGI - Pan European Game Information) வயது விதிமுறைகளைப் பெற்றோர்கள் தெரிந்துகொள்வது அவசியம்.

* `பெற்றோர் கட்டுப்பாட்டு மென்பொருளை' (Parental Control Software) அனைத்துத் தொழில்நுட்பக் கருவிகளிலும் இன்ஸ்டால் செய்வது நல்லது.

* ஸ்மார்ட்போன் உள்ளிட்ட திரையுடன் இருக்கும் அனைத்துக் கருவிகளையும் பெற்றோரின் பார்வையில், வீட்டின் பொதுவான இடத்தில் பயன்படுத்த சிறுவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

* அறிவுத்திறனை வளர்க்கும் பொழுதுபோக்குகளான செஸ், புதிர் விளையாட்டுகள் போன்ற மற்ற விளையாட்டுகளை விளையாடச் செய்து, அவர்களைப் பாராட்டுங்கள். 

* எரிச்சலூட்டும் மனநிலையை மாற்றுவதற்காக தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம். பெற்றோர் வேலையாக இருக்கும்போது, குழந்தைகள் தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக ஸ்மார்ட்போன்களை அவர்களிடம் கொடுக்கவேண்டாம்.

* கட்டுப்பாடற்ற, பல பேர் சேர்ந்து விளையாடும் ஆன்லைன் கேம்களைத் தவிர்க்க வேண்டும். அவை ஆஃப்லைன் கேம்களைவிட மோசமாக அடிமையாக்குபவை.

* குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகளை பெற்றோர்களும் விளையாடக் கற்றுக்கொள்வது நல்லது. அவர்களுடன் நேரம் செலவிடுங்கள். மேலே சொன்ன ஆலோசனைகளைக் கடைபிடித்தால், வீடியோ கேம் போன்ற தொழில்நுட்ப விளையாட்டுகள் நல்ல பொழுதுபோக்காக அமையும்.

* தொழில்நுட்பமோ, வீடியோ கேமோ குழந்தைகளின் படிப்பையோ, அன்றாட செயல்பாடுகளையோ பாதிக்குமானால், குழந்தைகளிடம் பேசுங்கள். குழந்தைகள் எதையும் கேட்காத பட்சத்தில், அவர்களை நல்ல மனநல ஆலோசகரிடம் கூட்டிச் செல்லுங்கள். அவர்களின் ஆலோசனைப்படி இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்யலாம்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க