வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (14/08/2018)

கடைசி தொடர்பு:04:00 (14/08/2018)

ரத்தக்குழாய் நோய்கள்... அறிகுறிகள்... தீர்வுகள்... மருத்துவ விளக்கங்கள் !

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மக்கள் -மருத்துவர் உறவை மேம்படுத்துவதற்கான விழிப்பு உணர்வு கூட்டம், வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெற்று வருகிறது. நேற்று (ஆகஸ்ட் 13-ம் தேதி) ரத்தநாள அறுவை சிகிச்சை துறை சார்பில் கூட்டம் நடந்தது.  இந்த கூட்டத்துக்கு அறுவை சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் என்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். 

ரத்தக்குழாய் - மருத்துவர் விளக்கம்

ரத்தக்குழாய் நோய்களும் சிகிச்சை முறைகளும் குறித்து டாக்டர் இளையகுமார் விளக்கினார்.``மனித வாழ்க்கைக்கு உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம். உடலிலுள்ள உறுப்புகள் அனைத்தும் சரியான முறையில் இயங்கினால்தான் இது சாத்தியம். இதற்கு ரத்த ஓட்டம் சீராக இருத்தல் அவசியம். ரத்தக்குழாய்கள் வழியேதான் அனைத்து உறுப்புகளுக்கும் ரத்தம் கொண்டு சேர்க்கப்படுகிறது. இது, இயல்பாகச் சுருங்கி விரியும் தன்மை உடையவை. ஆனால், தேவையில்லாத கொழுப்பு ரத்தக்குழாய்களில் சேர்வதால் அதன் சுருங்கி விரியும் தன்மை குறைந்து, தடிமனான குழாய்களாக மாறிவிடுகிறது. இதன் விளைவாக சீரான ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.

எந்த உறுப்புக்குச் செல்லும் ரத்தக்குழாயில் சீரான ரத்த ஓட்டம் இல்லையோ அந்த உறுப்பும், அந்த உறுப்பு தொடர்பான செயல்களும் பாதிக்கப்படும். மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு எனில் `மூளை முடக்குவாதம்' (Stroke)அல்லது `பக்கவாதம்' (Paralysis) ஏற்படலாம். இதயத்திற்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டால் மாரடைப்பு வரலாம். கால்களுக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பினால் கால்வலி, ஆறாத புண் தோன்றலாம்.இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை சந்தித்து, உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.” என்கிறார் இளையகுமார். 

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 50 ஆண்டுகளாக ரத்தக்குழாய் அறுவைசிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. ரத்தக்குழாய் பிரச்னைகளை ஆரம்பநிலையிலேயே மருத்துவர்கள் கண்டறிந்து மருந்துகள், அதிநவீன அறுவைசிகிச்சை, ஆஞ்சியோ பிளாஸ்டி முறையினால் முழுமையாக குணப்படுத்துகின்றனர். இது முழுக்க முழுக்க இலவசமாக வழங்கப்படுகிறது.