வெளியிடப்பட்ட நேரம்: 10:57 (25/08/2018)

கடைசி தொடர்பு:10:57 (25/08/2018)

அதிகம் கண்ணீர் வடிவதற்கான காரணங்கள், தீர்வுகள்!

கண்ணீர் மட்டும் இல்லையென்றால் நம் கண்கள் வறண்டுபோய்விடும்.

அதிகம் கண்ணீர் வடிவதற்கான காரணங்கள், தீர்வுகள்!

கிழ்ச்சி... கவலை... கோபம்... என எல்லா உணர்ச்சிகளுக்கும் கண்ணீர்தான் அடையாளம். உணர்ச்சிகளை வெளிக்காட்ட மட்டுமின்றி கண்களைக் காப்பதிலும் கண்ணீருக்கு மிகவும் முக்கியமான பங்குண்டு. கண்ணீர் மட்டும் இல்லையென்றால் நம் கண்கள் வறண்டுபோய்விடும். கிருமிகளிடமிருந்து நம் கண்களைக் காப்பதும் கண்ணீர் தான். அழும்போது  சுரக்கும் கண்ணீரின் மூலம் கண்ணில் சேர்ந்திருக்கும் தூசு மற்றும் மாசுக்கள்  வெளியேறும். கண்ணீர் சுரத்தல் என்பது மிகமிக இன்றியமையாத நிகழ்வு. ஆனால், அளவுக்கு அதிகமாகக் கண்ணீர் சுரந்தால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பார்வையை நிரந்தரமாகப் பறிக்கும் சில நோய்களின் ஆரம்பநிலை அறிகுறி, கண்ணில் அதிகளவு நீர் வடிதல்தான். 

கண்

கண்ணீரின் செயல், கண்ணீர்ச் சுரப்பியின் அவசியம், கண்ணீர் அதிகம் சுரப்பதற்கான காரணங்கள் என்னென்ன என்று விளக்குகிறார் கண் மருத்துவர் திரிவேணி வெங்கடேஷ்...

"பொதுவாக, நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இயங்குவதற்குத் தேவையான ஊட்டச் சத்துகளையும் ஆக்சிஜனையும் ரத்தத்தின் மூலமே பெறுகின்றன. ஆனால், கண்ணில் உள்ள கருவிழிகளுக்கு மட்டும் ரத்தம் பாய்வதில்லை. கண்ணுக்குப் பின்புறம் உள்ள கண் திரவம் (Aqueous Eye Fluid) மூலமே கருவிழி தனக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெறுகிறது. கண்ணில் சுரக்கும் கண்ணீர் மூலம்தான் காற்று மண்டலத்திலிருந்து ஆக்சிஜனை நேரடியாகக் கருவிழி கிரகிக்கிறது. அதனால், கண்ணீர் அவசியமானது. நம் கண்களை நோய்த் தொற்றிலிருந்து காப்பதும் கண்ணீர் தான். கண்ணில் நீர் சுரக்கவில்லை என்றால் கண் உலர்ந்து பார்வை மங்கத் தொடங்கிவிடும். பார்வை இயல்பாக இருக்கவேண்டும் என்றால் சரியான விகிதத்தில் கண்ணீர் சுரந்து கருவிழியின்மீது படர வேண்டும். ஆனால், கண்ணில் நீர் அதிகளவு சுரந்து வெளியே வடியத் தொடங்கினால் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.

கண்ணில் தண்ணீர் அதிகம் வடிய இரண்டு முக்கியக் காரணங்கள் உண்டு. கண்ணீர்ச் சுரப்பிகளில் (Lacrimal glands) அளவுக்கு அதிகமாகக் கண்ணீர் சுரப்பது முதல் காரணம். கண்ணில் சுரக்கும் நீரானது, நாம் ஒவ்வொருமுறை இமைகளை மூடித் திறக்கும்போது கண்ணுக்கும் மூக்குக்கும் உள்ள நுண்ணிய குழாய் (Nasolacrimal duct) வழியாகத் தொண்டையில் இறங்கிவிடும். இந்த நுண்ணிய குழாயில் அடைப்பு ஏற்படும்போது கண்ணில் நிரம்பும் நீர் வெளியே வழியத் தொடங்கிவிடும். இது இரண்டாவது காரணம். 

கண்ணீர்

நுண்ணிய குழாயில் அடைப்பு ஏற்படுவது பெரும்பாலும் வயதானவர்களுக்கே ஏற்படும். நுண்ணிய குழாயில் அடைப்பு ஏற்பட்டால், கண்ணுக்குக் கீழே உள்ள 'லாக்ரிமல் சாக்' (lacrimal Sac) எனப்படும் பையில் கண்ணீர் தேங்கி நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது. அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே இந்த அடைப்பைச் சரிசெய்யலாம். இதன் அறிகுறியாகக் கண்ணில் தொடர்ந்து நீர் வடிதல், மூக்கின் மேலே வீக்கம், வலி இருக்கும். கண் மருத்துவர் திரிவேணி

இந்தப் பிரச்னை சில வேளைகளில் பிறந்த குழந்தைகளுக்கும்கூட  ஏற்படும். சில குழந்தைகளுக்கு பிறந்த பிறகே 'நேசோலாக்ரிமல் டக்ட்' எனப்படும் நுண்ணிய குழாய் முழு வளர்ச்சியடையும். குழந்தை பிறந்து ஒரு வாரத்துக்குப் பிறகும் கண்ணில் நீர் வடிந்தால் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்ய வேண்டும். இதனை மசாஜ் செய்தே சரிசெய்ய முடியும். அப்படியும் சரியாகவில்லை என்றால் அடைப்பை நீக்க அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு. 

மேலும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்த் தொற்று ஏற்பட்டாலும் கண்ணில் அதிகளவு நீர் சுரந்து வெளியே வடியும். சிலருக்கு எப்போதும் கண் சிவந்து ஒருவித எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். அவர்கள் கண்ணைக் கசக்கிக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கும் கண்ணில் நீர் வடியும். இது ஒவ்வாமையினால் ஏற்படும் பிரச்னை. கண்ணில் தூசி அல்லது வேறு ஏதேனும்  சிறுபொருள்கள்  விழுந்துவிட்டால் அதை வெளியேற்றத் தொடர்ந்து கண்ணில் நீர் பெருக்கெடுக்கும். கண்ணில் ஏற்படும் கட்டியினாலும் கண்ணீர் அதிகம் வழியும். நோய்த் தொற்று மற்றும் ஒவ்வாமைக்கான சொட்டு மருந்துகளைப் போட்டுக்கொண்டாலே இது குணமாகிவிடும். 

இதுமட்டுமல்லாமல், கண்களை இமைக்க மறந்து கம்ப்யூட்டர் திரையைப் பார்த்துக்கொண்டே வேலை செய்வதும் பிரச்னைதான். சீரான இடைவெளியில் கண்களை இமைக்காதபோது கண் உலர்ந்து, கருவிழிக்குச் செல்லவேண்டிய ஆக்சிஜன் தடைபடும். நம் உடல் இதை சரி செய்யும் பொருட்டே அதிகளவு கண்ணீரைச் சுரக்க வைக்கும். கருவிழிக்குத் தொடர்ந்து ஆக்சிஜன் கிடைக்காமல் உலர்ந்து போனால் பார்வைத் திறன் குறையும். இந்தப் பாதிப்பின் போதும் கண்ணில் நீர் வழியும். பார்வைக் கோளாறு இருந்தாலும் சிலர் கண்ணாடி அணியாமல் இருப்பார்கள். அவர்களது கண் அதிகளவில் அழுத்தம் பெற்று கண்ணீரைச் சுரக்க ஆரம்பிக்கும். 

கண்ணீர்

இமைகளில் ஏற்படும் பிரச்னைகளும்கூட கண்ணில் நீர்ப் பெருக்கை ஏற்படுத்தும். சிலருக்கு இமையின் உள்பக்கமாக முடி வளரும். வயதானவர்களின் தோல் தளர்வடையும்போது கண் இமைகள் தொங்கிவிடும். இவர்களது கண்கள் விரைவில் உலர்ந்து அதிகமாக நீர் வடியும். கண் இமையில் பிரச்னை ஏற்பட்டால் அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு. நரம்புத் தளர்ச்சி ஏற்படும்போது கண்ணைச் சரியாக மூட முடியாதவர்களுக்கும் கண்ணில் நீர் வடியும்.

இதுவரை கூறிய நோய்களைவிட அபாயகரமானது கண் அழுத்த நோய். பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் இது வரலாம். குழந்தைகளுக்கு வரும் கண் அழுத்த நோயின் ஆரம்பநிலை அறிகுறி கண்ணில் நீர் வடிதல். அதனுடன், வெளிச்சத்தைப் பார்க்க முடியாத அளவு கண் கூச்சம் ஏற்பட்டால் அது கண் அழுத்த நோய்க்கான அறிகுறியாக இருக்க  வாய்ப்புண்டு. இதை சாதாரணமாக விட்டுவிடக் கூடாது. கண் அழுத்த நோய் கண் பார்வையை பாதிக்கும் அபாயமுடையது. ஆனால், பெரியவர்களுக்குக் கண் அழுத்த நோய் ஏற்பட்டால் அறிகுறிகள் வெளிப்படாது. சில வேளைகளில் சாதாரணமாக கண்ணீர் வடியும். கண் கூச்சம் ஏற்படுதல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் கண் அழுத்த நோய் ஏற்பட்டு நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்தும்.

பொதுவாகக் கண்ணில் நீர் வடிதலுக்கான காரணத்தை அறிந்து அதற்கான சிகிச்சை மேற்கொள்வதே சிறந்த தீர்வு. சில பிரச்னைகளை சாதாரணமாக சொட்டு மருந்து போடுவதன் மூலம் சரி செய்துவிடலாம். அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருந்தால் அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும்" என்கிறார் திரிவேணி வெங்கடேஷ்.

இயற்கை மருத்துவத்தைப் பொறுத்தவரை கண்ணில் நீர் வடிதல் பிரச்னைக்கு நந்தியாவட்டை பூக்கள் நல்ல தீர்வு தரும். நீர் வடியும் கண்ணை மூடிக்கொண்டு அதன்மேல் ஒன்றிரண்டு நந்தியாவட்டை பூக்களை வைத்து காட்டன் துணியின் உதவியால் கட்டிக்கொள்ள வேண்டும். ஓய்வு நேரங்களிலோ, இரவு உறங்கச் செல்லும்போதோ இதைச் செய்து வந்தாலே நல்ல தீர்வு கிடைக்கும். மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் எடுத்து நீர் விட்டுக் கரைத்து அதில் மெல்லிய பருத்தித் துணியை நனைத்து நிழலில் காய வைக்க வேண்டும். அந்தத் துணி நன்றாகக் காய்ந்ததும் அதைக் கொண்டு கைக்குட்டை பயன்படுத்துவதுபோல கண்ணைத் துடைத்து வர வேண்டும்.

மருதாணி இலைகளை அரைத்து கண்களின்மீது கட்டி வந்தாலும் கண்ணில் நீர் வடிதல் சரியாகும். முருங்கைக்கீரையை நீர் விடாமல் வதக்கி கண்களின்மீது கட்டி வந்தால் கண் தொடர்பான பிரச்னைகள் சரியாகும்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்