``புரோட்டீன் நிறைந்த சத்தான உணவைத் தர தாய்மாருக்கு விழிப்பு உணர்வு தேவை'' - நடிகை சினேகா | What are proteins and what do they do?

வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (30/08/2018)

கடைசி தொடர்பு:20:50 (30/08/2018)

``புரோட்டீன் நிறைந்த சத்தான உணவைத் தர தாய்மாருக்கு விழிப்பு உணர்வு தேவை'' - நடிகை சினேகா

``புரோட்டீன் நிறைந்த சத்தான உணவைத் தர தாய்மாருக்கு விழிப்பு உணர்வு தேவை'' - நடிகை சினேகா

டலின் வளர்ச்சிக்கு உதவும் சத்துகளில் மிக முக்கியமானது `புரோட்டீன்'. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும்.  புரோட்டீன் சத்தின் அவசியம் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. `கிராஃப்ட் ஹெயின்ஸ்’ என்னும் அமைப்பு நடத்திய இந்நிகழ்ச்சியில், தங்களது குழந்தைகளுடன் நிறைய பெற்றோர் கலந்துகொண்டனர். நட்சத்திர ஜோடிகளான பிரசன்னா - சினேகா தம்பதியும் வந்திருந்தார்கள். விழாவில், புரோட்டீன் சத்து எந்த அளவுக்கு அவசியம், அதன் பயன்கள் என்னென்ன என்பது பற்றிப் பேசினார் நியூட்ரீஷியன் தாரிணி கிருஷ்ணன்... 

புரோட்டீன் - நடிகை சினேகா

`இன்றைக்குப் பல பெற்றோர் தங்களது குழந்தைகள் பரீட்சையில் எவ்வளவு மதிப்பெண் எடுக்கிறது என்பதைத்தான் பார்க்கிறார்கள். ஆனால், அவர்கள் சாப்பிடும் உணவிலுள்ள புரோட்டீன் சத்துக்கு எவ்வளவு மதிப்பெண் என்பதைக் கவனிப்பதில்லை. காலையில் எழுந்ததும் அவசர அவசரமாகப் பள்ளிக்கு அனுப்புவதில் காட்டும் வேகத்தை, அந்தக் குழந்தை சத்தான உணவுகளைச் சாப்பிடுகிறதா என்பதில் காட்டுவதில்லை. இதனால்தான் சிறு வயதிலேயே பல குழந்தைகள்,  நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து நோய்களின் பிடியில் சிக்கிக்கொள்கின்றனர். 

இப்போது, உணவுப் பழக்கத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பு, நம் வீடுகளில் பெரியோர் சொல்லும் உணவுகளைத்தான் குழந்தைகள் சாப்பிட்டு வளர்ந்தார்கள். அந்த உணவுகளில் சத்துகள் அதிகம் நிறைந்திருந்தன. அதனால், எல்லோரும் ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால், இப்போதெல்லாம் குழந்தைகள் எந்த உணவைக் கேட்கிறார்களோ, அதைத்தான் பெரும்பாலான பெற்றோர் வாங்கிக் கொடுக்கிறார்கள். இதனால், குழந்தைக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் போய்விட்டன. 

அண்மையில், `நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷன்' (National Institute of Nutrition) என்ற அமைப்பு புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், குழந்தைகளின் வயதுக்கேற்ப எவ்வளவு சத்துகள் தேவை, அவர்கள் என்ன வகையான உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதில், `பெற்றோர் தங்களது குழந்தைகளுக்குத் தேவையான புரோட்டீன் அளவில்  20 சதவிகிதம்கூட  தருவதில்லை' என்ற அதிர்ச்சிகரமான ஒரு புள்ளிவிவரத்தைக் கூறியிருக்கிறார்கள். எனவே, பெற்றோர் புரோட்டீன் நிறைந்த உணவுகளைத் தர வேண்டும். எலுமிச்சை, புளிசாதம் என்று கொடுக்காமல் பருப்பு, பால், மீன், முட்டை, கோழியிறைச்சி, ஆட்டு இறைச்சி போன்ற உணவுகளைச் சாப்பிட ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான வளர்ச்சி சாத்தியம்” என்றார் தாரிணி கிருஷ்ணன். 

இவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் பிரசன்னா, ``ஒரு குழந்தை பிறக்கும்போது, கூடவே கனவும் பிறக்கிறது. நான் பிறக்கும்போது என் அப்பாவுக்கு ஒரு கனவு இருந்தது. என்னை மருத்துவராக்கிப் பார்க்க ஆசைப்பட்டார். ஆனால், நான் என்னுடைய கனவை நோக்கி வளர்ந்தேன். இப்போது, ஒரு நடிகனாக உங்கள் முன் நிற்கிறேன். பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது, எங்கள் வீட்டுக்கு அப்பாவின் நண்பர்கள் நிறையபேர் வருவார்கள். அவர்கள் எல்லோரும் என்னிடம் கேட்ட கேள்வி, `எந்த சப்ஜெக்ட்ல எவ்வளவு மதிப்பெண்?’ என்பதுதான். ஆனால், இப்போது அந்தக் கேள்வியைவிட முக்கியமான ஒரு கேள்வி இருக்கிறது என்பதை, இப்போது தெரிந்துகொண்டேன். நம்முடைய குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவுகளில் எவ்வளவு சத்துகள் இருக்கின்றன, அதற்கு எவ்வளவு மதிப்பெண் என்பதை எல்லா அப்பாக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன். இனிமேல், என்னுடைய பையன் எடுக்கும் மதிப்பெண்ணைவிட, அவன் சாப்பிடும் உணவின்மீது கவனம் செலுத்துவேன். அவனுக்கு நான் நல்ல தோழனாகவும் இருப்பேன்” என்றார் பிரசன்னா. 

பிரசன்னாவைத் தொடர்ந்து நடிகை சினேகா பேசினார்.  ``இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு தனித்திறமை இருக்கிறது. அதைக் கண்டுபிடித்து, ஊக்குவித்தாலே போதும். குழந்தைகளுக்குக் கல்வி அவசியம்தான். அதற்காக, அவர்களைப் `படி... படி...' என்று சொல்லி, நச்சரிக்கக் கூடாது. பொதுவாக, குழந்தைகள் ஒரு விஷயத்தைச் சிறப்பாக செய்யவேண்டுமென்றுதான் நினைப்பார்கள். எப்போதுமே ஒருவர்போல இன்னொருவர் ஆக முடியாது. ரகுமான் ரஜினியாகவோ, ரஜினி சச்சினாகவோ மாற முடியாது. ஒவ்வொருவருக்கும் என்ன மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கிறதோ அதை வைத்துக்கொண்டு, அந்தத் துறையில் சாதித்துக் காட்டுவார்கள். இதைப் பெற்றோராகிய நாம், முதலில் புரிந்துகொள்ள வேண்டும். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் என்னிடம் வந்து பேசினார்கள். அப்போது, ஒரு சினிமா நட்சத்திரம் என்பதைத்தாண்டி நானும் ஒரு குழந்தையின் அம்மா என்பதுதான் என் நினைவில் வந்தது. என்னுடைய குழந்தைக்குச் சத்தான உணவுகளைக் கொடுத்திருக்கிறேனா என்று சிந்தித்தேன். இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி, என் மகனுக்கு புரோட்டீன் நிறைந்த சத்தான உணவுகளைக் கொடுக்க வேண்டும் என்ற விழிப்பு உணர்வு வந்திருக்கிறது. இது எல்லா அம்மாக்களுக்கும் வர வேண்டும். ஒவ்வொரு தாயும் தன் குழந்தையின் உடல்நலனில் கவனமாக இருக்க வேண்டும். நானும் அதுபோல் இருப்பேன்!” என்று உற்சாகமாகப் பேசினார் சினேகா. 

நிகழ்ச்சியில் பங்கேற்ற பல தாய்மாரின் குழந்தைகளிடம் சில பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது,`ஒவ்வொரு நாளும் என்னவிதமான உணவுகளைக் குழந்தைகள் சாப்பிடுகிறார்கள்’ என்ற பட்டியலை பெற்றோர் தந்தனர். ஒரு குழந்தையின் வயதுக்கேற்ப அவர்கள் சாப்பிடும் உணவில் புரோட்டீன் சத்து எவ்வளவு இருக்கிறது என்பதை மருத்துவ நிபுணர்கள் கணக்கிட்டனர். இறுதியில், `பல குழந்தைகளுக்கு போதுமான அளவு புரோட்டீன் சத்து கிடைக்கவில்லை' என்பது ஆய்வில் தெரியவந்தது. நிகழ்ச்சியின் முடிவில் ஒவ்வொருவரும் `தங்களது குழந்தைகளுக்கு புரோட்டீன் நிறைந்த உணவுகளைத் தருவோம்’ என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

இன்றைய தலைமுறையினர் வீட்டுச் சாப்பாட்டைத் தவிர்த்து, பெரும்பாலும் ஃபாஸ்ட்புட் உணவுகளையே விரும்புகின்றனர். அதனால்தான், உணவகங்களுக்கு இணையாக மருத்துவமனைகளும் மருந்தகங்களும் நிறைந்து காணப்படுகின்றன. பெற்றோரின் கனவு நிறைவேற வேண்டுமென்றால், குழந்தைகளுக்கு நல்ல கல்வி தந்தால் மட்டும் போதாது. புரோட்டீன் நிறைந்த சத்தான உணவுகளையும் ஊட்டி வளர்க்க வேண்டும். அப்போதுதான், ஆரோக்கியமான தலைமுறை சாத்தியமாகும்!