மன அழுத்தம் குறைக்கும், புத்துணர்ச்சி தரும் எண்ணெய்க் குளியல்..! | Benefits of doing oil bath

வெளியிடப்பட்ட நேரம்: 07:24 (31/08/2018)

கடைசி தொடர்பு:11:46 (31/08/2018)

மன அழுத்தம் குறைக்கும், புத்துணர்ச்சி தரும் எண்ணெய்க் குளியல்..!

எண்ணெய்க் குளியல் மேற்கொள்ளும் நாளில் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் மற்றும் உணவு முறைகள் உள்ளன.

மன அழுத்தம் குறைக்கும், புத்துணர்ச்சி தரும் எண்ணெய்க் குளியல்..!

னிப்பாறைகள் உருகும் அளவுக்கு, அண்டத்தில் வெப்பம் அதிகரித்து தாண்டவமாடிக் கொண்டிருக்கும் வேளையில், நம் பிண்டத்தின் (உடல்) ஆரோக்கியமும் வெப்பம் காரணமாக அதிகமாகப் பாதிக்கத் தொடங்கிவிட்டது. வெப்பத்தால் ஏற்படும் நோய்களைத் தடுக்க, எண்ணெய்க் குளியல் சிறந்த வழி. நம் முன்னோரால் பின்பற்றப்பட்டுவந்த எண்ணெய்க் குளியல் முறை அடுத்த தலைமுறையினரால் கைவிடப்பட்டு மீண்டும் தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளது.

எண்ணெய்க் குளியல்

எண்ணெய்க் குளியல் மேற்கொள்ளும் நாளில் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் மற்றும் உணவு முறைகள் உள்ளன. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஆண்களும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பெண்களும் எண்ணெய்க் குளியல் செய்ய மருத்துவ நூல்கள் அறிவுறுத்துகின்றன. தலைக்கு எண்ணெய் தேய்த்தால், குளிப்பதற்கு மிதமான வெந்நீரையே பயன்படுத்த வேண்டும். அதிகம் சூடுள்ள நீரைப் பயன்படுத்துவதும் தவறு. `சதுர் நாட்கொருகால் நெய்முழுக்கைத் தவிரோம்’ என்ற சித்தர் தேரையரின் வரிகள், நான்கு நாள்களுக்கு ஒருமுறை தலைக்கு எண்ணெய் வைத்துக் குளிக்க வேண்டும் என்னும் தெளிவுரையை நமக்கு வழங்குகிறது. இதை வாரத்தில் இரண்டு நாள்கள் என வைத்துக்கொள்ளலாம். பயன்படுத்தும் எண்ணெயை லேசாக சூடுபடுத்தி பயன்படுத்த வேண்டும். 

தலைக்குத் தேய்த்த எண்ணெயை உடலுக்கும் பயன்படுத்தக் கூடாது. உடலில் தேய்க்கவும் தலையில் தேய்க்கவும் எனத் தனித்தனியாக எண்ணெயைப் பிரித்து வைத்துக்கொள்வது நல்லது. உச்சந்தலை, உள்ளங்கை, உள்ளங்கால், தொப்புள், அக்குள் ஆகிய இடங்களில் மட்டும் எண்ணெய் தடவி குளிப்பது ஒருமுறை. உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து, அரை மணிநேரமாவது சூரிய ஒளியில் நின்று குளித்தால் பலன்கள் இரட்டிப்பாகும். எண்ணெய்ப் பசை முழுமையாக நீங்க, சிகைக்காய் அல்லது அரப்புப் பொடி தேய்த்துக் குளிக்க வேண்டியது அவசியம். வெட்டிவேர், ஆவாரம்பூ, பாசிப்பருப்பு சேர்ந்த குளியல் பொடி வகைகளைப் பயன்படுத்தலாம்.

குளியல்

எண்ணெய் குளியல் மூலம் அதிக பலன்களை எதிர்பார்க்கும் எண்ணத்தில் சிலர் முதல் நாள் இரவே தலைமுழுக்க எண்ணெய் தேய்த்துக் கொண்டு உறங்கிவிடுவார்கள். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு உடலில் கபம் அதிகரித்து சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். `எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சாலே, உடனே சளி பிடிச்சிடுது… அதனாலேயே தலைக்குக் குளிக்கறதே இல்ல…’ என்ற தவறான எண்ணம் உள்ளவர்கள் பலர் உள்ளனர். உண்மையில் முறையாக எண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால் சளி, இருமல், சைனஸ் பிரச்னைகள் ஏற்படாது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சிறிது மிளகுத் தூளை உச்சந்தலையில் தடவி எண்ணெய்க் குளியல் எடுத்தால் கபம் அதிகரிக்காது. அதேபோல் குளித்து முடித்து தலையை நன்றாகக் காய வைத்ததும், சிறிது மிளகைப் பொடியாக்கி மெல்லிய துணியில் வைத்து உச்சந்தலையில் தேய்த்தால் சளித்தொந்தரவு நெருங்காது. நல்லெண்ணெயில் சிறிது பூண்டு, மிளகு, சுக்கு, வெற்றிலை சேர்த்து கொஞ்சம் சூடேற்றி தலைக்குத் தேய்த்துக் குளித்தாலும் கப நோய்கள் ஏற்பட வாய்ப்பில்லை. 

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். உடல் முழுவதும் எண்ணெய்த் தேய்ப்பதால், உடலின் உட்கழிவுகளை வெளியேற்றும் நிணநீர்க் கோளங்கள் மற்றும் சுற்றோட்டத்தின் (Lymphatic channels) செயல்பாடுகள் முறைப்படுத்தப்படும் என்கிறது நவீன ஆய்வு. உடலில் அடங்கியிருக்கும் வர்மப் புள்ளிகள் தூண்டப்பட்டு உடல் புத்துணர்ச்சி பெறும். மன அழுத்தத்தின் தீவிரம் குறைக்க எண்ணெய்க் குளியலைவிட சிறந்த ஆயுதம் எதுவுமில்லை. உடலில் உண்டாகும் பித்த நோய்களுக்கான சிறந்த தடுப்பு மருந்து எண்ணெய்க் குளியல். அதிக ரத்த அழுத்தம், உறக்கமின்மை மற்றும் தோல் நோய்களுக்கும் எண்ணெய்க் குளியல் நல்லது. சில வகையான மன நோய்களைக் கட்டுப்படுத்தவும் எண்ணெய்க் குளியல் மேற்கொள்ள அறிவுறுத்தலாம். தோலுக்குப் புத்துணர்வும் பொலிவும் கொடுக்கும். தேகத்துக்குத் தேவையான நீர்த்துவத்தையும் தக்க வைக்கும். தலைமுடி உதிர்வது தவிர்க்கப்பட்டு, வளர்ச்சி அதிகரிக்கும். மூட்டுகள் இயங்குவதற்குத் தேவையான நெய்ப்புத் தன்மையை அளிக்கும். 

குளியல்

எண்ணெய்க் குளியல் செய்யும்போது சில உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டியிருக்கும். அத்துடன் ஒரு சில செயல்களையும் தவிர்க்க வேண்டும். கோழி, மீன், நண்டு, ஆடு, மாங்காய், அகத்திக்கீரை, கடுகு, புளி, தயிர், புகையிலை, மொச்சை போன்ற உணவுகளைத் தவிர்க்கச் சொல்கிறது சித்த மருத்துவம். ‘நண்டு, மீன், கோழி… மாப்பண்டம்… கடுகு புளி…’ எனும் தேரையரின் பாடலில் அதுபற்றி கூறப்பட்டுள்ளது. எண்ணெய்க் குளியல் செய்த நாளில், உடல் சற்று சோர்வுற்றிருக்கும். அப்போது செரிமானத்துக்குக் கடிமனமான அசைவ உணவுகளைத் (கோழி, நண்டு, ஆடு) தவிர்ப்பது முக்கியம். 

மருந்தை முறிக்கும் தன்மையுள்ள அகத்தி, புளி, மாங்காய், புகையிலை போன்றவையும் எண்ணெய்க் குளியலின் பலனைத் தடுக்கும் என்பதால் அவற்றைச் சாப்பிட வேண்டாம். எண்ணெய்க் குளியல் செய்த நாளன்று அதிக நேரம் பகலில் உறங்குவதையும் தவிர்க்க வேண்டும். பகல் உறக்கம் உடலுக்கு அதிகளவிலான வெப்பத்தைக் கொடுத்து மேலும் சோர்வுறச் செய்யும். எண்ணெய்க் குளியல் எடுத்துக்கொண்டு, அதிகளவிலான அசைவ உணவுகளை மதுபானத்துடன் சேர்த்துப் பருகுவது பாதிப்புகளை உண்டாக்கும். நீர்வரத்து நிறைந்த சுற்றுலாத் தளங்களில் இதுபோன்ற செயல்பாடுகள் அடிக்கடி நிகழ்வதைப் பார்க்கலாம். 

எண்ணெய்க் குளியல் செய்யும்போது என்னென்ன பதார்த்தங்களைச் சாப்பிடலாம் எனப் பட்டியலிடுகிறது சித்த மருத்துவம். அவரைப் பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, கத்திரிப் பிஞ்சு, தூதுவளைக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, சுண்டை வற்றல், மணத்தக்காளி வற்றல், ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு, பீர்க்கு, புடலங்காய் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம். 

தலையில் தேய்த்துக் குளிக்க நல்லெண்ணெயைத் தவிர விளக்கெண்ணெய், பசு நெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள அரக்குத் தைலம், அசைத் தைலம், சுக்குத் தைலம், கையான் தைலம் போன்றவை மருத்துவரீதியாகப் பயன்படக்கூடியவை. ஒரு நோய்க்கான மருந்துகளைத் தொடங்குவதற்குமுன், எண்ணெய்க் குளியலை வலியுறுத்தி உடலில் உள்ள வாத, பித்த, கபம் எனும் தத்துவ இயங்கியல் அமைப்பை முறைப்படுத்தும் வழக்கமும் சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் உண்டு. 

காய்ச்சல், இருமல், செரியாமை அதிகரித்திருக்கும்போதும் நரம்பு சார்ந்த நோய்கள் பாதித்திருக்கும்போதும் எண்ணெய்க் குளியலைத் தவிர்க்கலாம். விடாமல் மழை பெய்யும் காலத்திலும், மாதவிடாய் நாள்களிலும் எண்ணெய்க் குளியல் கூடாது. வெப்ப மண்டலப் பகுதியில் வாழும் நமக்கு, எண்ணெய்க் குளியல் ஒரு வரம். கிடைத்த வரத்தைப் பயன்படுத்திக் கொள்வோம். ஆரோக்கியத்தின் ஸ்வரங்களை உணர, நல்லெண்ணெயின் நல்லெண்ணத்தைப் போற்றுவோம்! 

 


டிரெண்டிங் @ விகடன்