பாலக்காடு மணிகண்டனின் உறுப்புகளைத் தானம் பெற்றதில் மோசடி - சிக்கும் மருத்துவமனைகள்!

தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நடக்கும் மோசடிகளையும் அத்துமீறல்களையும் அம்பலப்படுத்துகிறது...

பாலக்காடு மணிகண்டனின் உறுப்புகளைத் தானம் பெற்றதில் மோசடி - சிக்கும் மருத்துவமனைகள்!

ந்திய அளவில் உடலுறுப்பு தானத்தில் முன்னிலையில் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. ஆனால், அதற்காக நாம் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது. தமிழகத்தில்தான் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பெருமளவு முறைகேடுகளும் நடக்கின்றன. அதற்கு உதாரணம், இதோ இந்தச் சம்பவம்..!

 உறுப்பு தானம்

மேல்மருவத்தூரில் நடந்த ஒரு திருமணத்துக்கு மேளம் வாசிக்க, கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து  எட்டுப் பேர் காரில் கிளம்பி வந்தார்கள். திருமணம் முடிந்து, மே 18-ம் தேதி பாலக்காட்டுக்குச் திரும்பிச் சென்றபோது, கள்ளக்குறிச்சி அருகே அவர்கள் சென்ற கார்  டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. அதில், பி.மணிகண்டன், ஏ. மணிகண்டன் ஆகிய இரண்டு மேளக் கலைஞர்கள் படுகாயமடைந்தார்கள்.

ஒரு தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர், இவர்களை அழைத்துச்சென்று சேலத்தில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சேர்த்தார். இருவரையும் ஐ.சி.யூவில் வைத்து, வெண்டிலேட்டர் உதவியோடு சிகிச்சையளித்தார்கள். 22-ம் தேதி பி.மணிகண்டன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மணிகண்டனை கேரளா அழைத்துச் செல்ல அவர்கள் குடும்பத்தினர் விரும்பினார்கள். ஆனால், `மருத்துவக் கட்டணத்தைக் கட்டினால் மட்டுமே அழைத்துச் செல்லமுடியும்' என்று தெரிவித்துள்ளார்கள். மணிகண்டனின் உறவினர்களால் பணம் கட்டமுடியவில்லை. இதையடுத்து, `உறுப்புதானம் செய்தால், பில் கட்டாமலேயே உடலைத் தருவதாக' மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. வேறு வழியின்றி உறவினர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள். மணிகண்டனின் உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்குத் தானம் தரப்பட்டன. இதயத்தையும், நுரையீரலையும் சென்னையில் உள்ள இரண்டு பிரதான மருத்துவமனைகள் பெற்றுள்ளன. 

மருத்துவர்கள்

`அந்த உறுப்புகளை, பலகோடி ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு வெளிநாட்டு நோயாளிகளுக்குப் பொருத்தியதாக' மணிகண்டனின் உறவினர்கள், கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் செய்ய, அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் எழுதினார். இன்னொரு மாநிலத்தின் முதல்வரே தலையிட்டதால் இதுகுறித்து விசாரிக்க, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் சார்பிலும் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சார்பிலும் காவல்துறை அதிகாரி  தாமஸ், இதய அறுவை சிகிச்சை நிபுணர் சிவன்ராஜ், அரசு சிறுநீரகவியல்துறை சிறப்பு நிபுணர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழு, மணிகண்டனின் இதயம், நுரையீரலைத்  தானமாகப் பெற்றுப் பொருத்திய மருத்துவமனைகளில் விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையில், `மணிகண்டனின் இதயம், நுரையீரலை விதிமீறல் செய்து வெளிநாட்டவர்களுக்குப் பொருத்தியது' கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இரண்டு மருத்துவமனைகளிலுமே, இதயம் மற்றும் நுரையீரலுக்காக இந்தியர்கள் பலமாதங்களாக காத்திருக்கும் நிலையில், அவர்களுக்குத் தகவலே தெரிவிக்காமல் வெளிநாட்டவர்களுக்கு உறுப்புகளைப் பொருத்தியிருக்கிறார்கள். இதுகுறித்து விசாரணைக் குழுவினர் கேட்டபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பதில் சொல்லியிருக்கிறார்கள்.  விசாரணை செய்த குழுவினர் தவறு நடந்ததை உறுதி செய்யும் ஆவணங்களை இணைத்து அறிக்கையை அரசுக்கு அளித்துள்ளார்கள். ஆனால், அதை அரசு கிடப்பில் போட்டுவிட்டது. அதுமட்டுமன்றி, விசாரணை செய்த குழுவினருக்கு, அறிக்கையை மாற்றி எழுதித்தருமாறு  மிரட்டல்கள் வருவதாகவும் கூறப்படுகிறது. 

உடலுறுப்பு

உடல் உறுப்புகளைத் தானம் வழங்கவும், தேவைப்படுவோருக்குப் பொருத்தவும் உரிய விதிமுறைகளை உள்ளடக்கி, `மனித உடல் உறுப்பு மாற்றுச் சட்டம் -1994' என்ற சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் அடிப்படையில்தான் இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்து வருகின்றன. ஆனால், இந்தச் சட்டத்தையோ, அரசு வகுத்துள்ள விதிமுறைகளையோ தனியார் மருத்துவமனைகள் மதிப்பதேயில்லை என்கிறார்கள் மருத்துவச் செயற்பாட்டாளர்கள். 

மணிகண்டன் விவகாரத்தில் என்னதான் நடந்தது...? 

கள்ளக்குறிச்சியில் விபத்தில் சிக்கியவர்களை, அருகிலேயே அரசு மருத்துவமனைகள் இருந்தும் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் ஏன் சேலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்..?

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான நடைமுறைகள், விதிகள் என்னென்ன?

மணிகண்டனின் உடல் உறுப்புகள் யாருக்குப் பொருத்தப்பட்டன?

சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் எந்தமாதிரியான விதிமீறல்களில் ஈடுபட்டன? 

விசாரணைக் குழுவின் விசாரணையில் நடந்தது என்ன?

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நடக்கும் மோசடிகள், அத்துமீறல்கள் என்னென்ன?

வெளிநாட்டவருக்கு உறுப்பு மாற்று சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் துடிப்பது ஏன்?

மணிகண்டனின் குடும்பத்தினர் வைக்கும் குற்றச்சாட்டுகள் என்னென்ன?

சிகிச்சையளித்த, உறுப்புகளை தானம் பெற்ற மருத்துவமனை நிர்வாகங்கள் குற்றச்சாட்டுக்குச் சொல்லும் பதில்கள் என்ன?

அரசு என்ன சொல்கிறது...?

எல்லாக் கேள்விகளுக்கும் நாளை (5.4.2018) வெளிவரும் ஜூனியர் விகடன் இதழில் பதில்கள் இருக்கின்றன. தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நடக்கும் மோசடிகளையும் அத்துமீறல்களையும் அம்பலப்படுத்துகிறது அதில் இடம்பெற்றுள்ள, `இதயம் 6 கோடி... அதிர வைக்கும் உடல் உறுப்பு பிசினஸ்' என்ற கட்டுரை! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!