வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (04/09/2018)

கடைசி தொடர்பு:22:56 (04/09/2018)

99 சதவிகிதம் உயிர்பிழைக்கவே முடியாத நோயாளியைக் காப்பாற்றி அரசு மருத்துவர்கள் சாதனை!

குடல் அழுகி, ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு நவீன சிகிச்சை முறையில் உயிர்பிழைக்கவைத்து, அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

மருத்துவர்கள் சாதனை

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் ஜெயராமையா, வயது 50. ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்னர் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டு, ரத்த வாந்தி மற்றும் ரத்தபேதி ஆனது. உறவினர்கள் அவரை உடனடியாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். அவருக்கு, ரத்தநாள அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதுபற்றி ரத்தநாள அறுவைசிகிச்சை துறையைச் சேர்ந்த மருத்துவர் இளஞ்சேரலாதன் கூறும்போது, ``மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது மிகவும் மோசமான நிலையில் ஜெயராமையா இருந்தார். அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருந்ததால், 6 பாட்டில் ரத்தம் ஏற்றினோம். பிறகு, அவரின் நிலைமை சீர் அடைந்ததும், பிற பரிசோதனைகளை மேற்கொண்டோம். சி.ஜி ஸ்கேன் பரிசோதனையில், அவருடைய இதயத்திலிருந்து வயிற்றுக்குச் செல்லும் பெருந்தமணி (Aorta) வெடித்துக் காணப்பட்டது. அதன் அருகிலுள்ள சிறுகுடல் அரிக்கப்பட்டிருந்தது. இதனால், அதில் ஓட்டை விழுந்து ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதையும் கண்டறிந்தோம். அவருக்கு, ஆகஸ்ட் 14-ம் தேதி உயிர்காக்கும் முயற்சியாக அவசர அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

வயிற்றின் உள்பகுதியில் உள்ள பெருந்தமணி வெடித்து சிறுகுடலுடன் ஒட்டிக்கொண்டிருந்தது, கவனமாகச் சிறுகுடலிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டது. பின், பெருந்தமணிக்குள் இருந்த ரத்தக் கட்டிகள் அகற்றப்பட்டன. பெருந்தமணியிலிருந்து கால்களுக்கு செயற்கை ரத்தக் குழாய் (Dacron-14X7X7mm Synthetic graft) பொருத்தப்பட்டு, அவரின் இரண்டு கால்களைக்  காப்பாற்றினோம். சுமார், நான்கு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக முடித்தோம்” என்கிறார் இளஞ்சேரலாதன். 

இவரைத் தொடர்ந்து, மருத்துவமனையின் டீன் பொன்னம்பல நமச்சிவாயம் பேசினார். 

``வயிற்றிலுள்ள பெருந்தமணி வெடித்தோ, குடல் அழுகியோ போனால், 99 சதவிகிதம் உயிர் இழப்புக்கு வாய்ப்புள்ளது. இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்தால், சுமார் 10 லட்சம் ரூபாய் வரை செலவாகியிருக்கும். ஆனால், அரசு ஸ்டான்லி மருத்தவமனையில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்மூலம் இலவசமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் துறையில், கடந்த ஆண்டில் மட்டும் 77 பெருந்தமணி அறுவைசிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அவற்றில், 15 திறந்த பெருந்தமணி அறுவை சிகிச்சைகளும், 18  திறந்த `இலியாக் ' (Iliac) அறுவைசிகிச்சைகளும் மற்றும் 44 நுண்துளை அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. இவை அனைத்தும், உலகத் தரத்துக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது” என்கிறார் பொன்னம்பல நமச்சிவாயம்.

“எனக்கு 15 வயசுலேர்ந்தே பீடி,சிகரெட் புகைக்கிற பழக்கமிருக்கு. அதுதான் இந்த நோய்க்கான காரணமென்று டாக்டருங்க சொன்னாங்க. நான் அனுபவித்த கொடுமையை சொல்லத்தெரியல. தயவுசெய்து சிகரெட் பழக்கத்தை விட்டுடுங்க.” கைகூப்பி வேண்டுகொள் விடுக்கிறார் ஜெயராமையா.