1.4 பில்லியன் மக்களுக்குக் கொடிய நோய் ஏற்படும் அபாயம் - காரணம் என்ன?

``உலகில் உள்ள மக்களில் 1.4 பில்லியன் பேருக்கு கொடிய நோய் ஏற்படும் அபாயம்'' உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 

சுகாதாரம்

நம் முன்னோர்கள் கடுமையாக உழைத்ததால் அவர்களின் உடல்நிலை மிகவும் வலிமையாக இருந்தது. அதனால அவர்கள் நூறு வருடத்தையும் தாண்டி வாழ்ந்தனர். ஆனால், நாம் வாழும் டிஜிட்டல் உலகில் நம் செயல்பாடு அனைத்தும் குறைந்துவிட்டன. நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில், எந்தப் பொருளை பெற்றுக்கொள்ளலாம் மற்றும் இணையம் மூலம் எதுவும் செய்யலாம் என்ற நிலை ஏற்பட்ட பிறகு மக்களின் வேலை முற்றிலும் குறைந்துவிட்டது. அதனால் பெரும்பாலான மக்கள் பெரிதும் உழைக்காமலே தங்களின் வேலைகளை எளிதாகச் செய்கின்றனர். ஆனால், இது பெரும் ஆபத்தில் முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

சரியான உடற்பயிற்சி இல்லாததால் உலகில் வாழும் மக்களில் 1.4 பில்லியன் பேருக்கும் கொடிய நோய் வரும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் உலகளவில் மக்களின் உடற்பயிற்சி பெரிதும் குறைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். உடற்பயிற்சி திறனை அதிகரிக்காவிட்டால் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கும் நான்கில் ஒரு பங்கு ஆண்களுக்கும் இதய நோய், நீரிழிவு, புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உடற்பயிற்சியின் மூலம் உடலும் மனமும் சீரடையும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் நீச்சல், நடைப்பயிற்சி சைக்கிள் ஓட்டுவது போன்ற எளிமையான உடற்பயிற்சிகளை 150 நிமிடங்கள் செய்ய வேண்டும் என்றும் வாரம் ஒருமுறை ஓடுதல், குழு விளையாட்டு போன்ற கடும் உடற்பயிற்சிகளை 75 நிமிடங்கள் செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு 168 நாடுகளில் உள்ள சுமார் 1.9 பில்லியன் மக்களிடம் ஆய்வு நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. 2001-ம் ஆண்டுக்குப் பிறகு மனிதர்களிடையே உடற்பயிற்சி திறன் குறைந்துவிட்டதாகவும் இதை அதிகரிக்க அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுகாதார அமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!