சாப்பிடும்போதும் சாப்பாட்டுக்கு முன்பும் தண்ணீர் குடித்தால் என்னவாகும்? #Alert | Is Drinking Water While Eating Good For You?

வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (09/09/2018)

கடைசி தொடர்பு:09:10 (09/09/2018)

சாப்பிடும்போதும் சாப்பாட்டுக்கு முன்பும் தண்ணீர் குடித்தால் என்னவாகும்? #Alert

சாப்பிடும்போதும் சாப்பாட்டுக்கு முன்பும் தண்ணீர் குடித்தால் என்னவாகும்? #Alert

நீரை நாம் தாகம் தீர்க்கும் பண்டமாக மட்டுமே கருதுகிறோம். பல தருணங்களில் நீர் நமக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. ஒருகாலத்தில் இயற்கையின் மடியிலிருந்து கிடைத்த தண்ணீரை அப்படியே பருகினோம். ஆனால் இன்று சூழலியல் மாற்றங்களாலும் மனிதத் தவறுகளாலும் நிலத்தில் கிடைக்கும் நீரை அப்படியே பயன்படுத்த முடியாது. காய்ச்சிய வெந்நீரைப் பயன்படுத்துவதே ஆரோக்கியத்துக்கு நல்லது. 

தண்ணீர்

தண்ணீரை எப்போதெல்லாம் பருக வேண்டும் என்பதற்கு சித்த மருத்துவத்தில் இலக்கணமே இருக்கிறது. தவறான உணவு முறை மட்டுமே, செரிமானத்தை பாதிக்கும் காரணி அல்ல. தவறான நேரத்தில் அதிகளவில் தண்ணீர் பருகுவதும் செரிமானத்தை பாதிக்கும். உணவியல் முறைகளில் சில ஒழுக்கங்களை கடைப்பிடித்து வந்தால், உடல் ரீதியான உபாதைகளில் இருந்து தப்பிக்கலாம். 

உணவுக்கு முன்பு... 

’ஊணுக்கு முன்பு வெந்நீர் உண்டக்காற் தீபனம் போம்…’ எனும் 'பதார்த்தகுண சிந்தாமணி' பாடல், தண்ணீரை எப்போதெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை வலியுறுத்துகிறது. சாப்பிடுவதற்கு சற்று முன்பு அதிகளவில் தண்ணீர் பருகினால், பசி மந்தப்பட்டு செரிமானம் பாதிப்படையும். செரிமான சுரப்புகளின் தாக்கம் குறைந்து, உள்ளே போகும் உணவு முழுமையாக செரிமானம் அடையாது. மந்தம், உப்புசம், பசியின்மை போன்ற அறிகுறிகள் மெதுவாக தலைகாட்டத் தொடங்கும். சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் பருகுவது, உணவு வகைகளை கூழ்மமாக்க வீரியத்துடன் காத்திருக்கும் செரிமான சுரப்புகளை தண்ணீர் ஊற்றி சாந்தப்படுத்துவதற்கு சமம். உடல் எடையை குறைக்க சிலர் இம்முறையை பரிந்துரைத்தாலும், ஊட்டங்கள் உடலில் சேராமல் பக்கவிளைவுகளையே உண்டாக்கும். 

சாப்பாடு

சாப்பிடும் போது...

வாய்ப்பகுதியில் வைத்த ஒவ்வொரு உணவுக் கவளத்தையும் இரைக்குடல் நோக்கித் தள்ள, சிலர் தண்ணீரின் துணையை நாடுவதைப் பார்க்கலாம். சாப்பிடும்போது அடிக்கடி தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்பது முறையல்ல. அதற்காக சாப்பிடும் நேரத்தில் விக்கல் எடுத்தால்கூட ’நான் தண்ணீரே குடிக்க மாட்டேன்’ என்று அடம்பிடிக்கக்கூடாது. சாப்பிடும்போது சிறிதளவு தொண்டையை நனைப்பதில் தவறில்லை. 

டம்ளர் கணக்காக தண்ணீர் குடித்துக்கொண்டே இருந்தால், செரிமானம் உறுதியாக பாதிக்கப்படும் என்கிறது ஆய்வு. மேலும் உணவு எதுக்களித்தல் தொந்தரவும் அதிகரிக்கும். இதையே ’ஊணுக்கு பாதியில் வெந்நீர் பருகினால் பசியும் பாதியாம்’ என்ற கருத்தை அழகாக முன்னிறுத்துகிறது சித்த மருத்துவம். 

உணவுக் கவளங்களுக்கு இடையில் தண்ணீர் மட்டுமே பருகப்பட்ட காலம் மருவி, இப்போது வாயு நிரப்பப்பட்ட குளிர்பானங்களும், மதுபானங்களும் பருகப்படுகின்றன. வறட்சியை உருவாக்கும் ஒரு கனமான பீட்ஸாவையோ, பர்கரையோ சாப்பிடும்போது, அதை உட்செலுத்த கலர்கலர் குளிர்பானங்கள் கைக்கெட்டும் தூரத்தில் உணவு மேஜையில் அடுக்கப்பட்டிருக்கும். இதன் காரணமாக செரிமானம் கேடடைவது மட்டுமின்றி, வயிற்றுப் புண் முதல் புற்றுநோய் வரை ஏற்படலாம். 

தண்ணீர்

சாப்பிடும்போது அதிகளவில் தண்ணீர் பருகுவதைத் தடுக்க, உணவில் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். உணவை நன்றாக மென்று எச்சில் சுரப்பின் ஈரத்தோடு கலந்து உட்தள்ளும் போது தாக உணர்வு அவ்வளவாக ஏற்படாது. அவசர அவசரமாக சவைக்காமல் சாப்பிடும்போது, தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக தோன்றும். சாப்பிடும் நேரத்தில் தேவைக்கேற்ப சிறிது தண்ணீரை அருகில் வைத்துக் கொள்ளலாம். பெரிய பாட்டில் முழுக்க தண்ணீரை நிரப்பி கண்முன்னே வைத்துக்கொண்டு சாப்பிட்டால், தேவையைவிட அதிக தண்ணீர் பருக வேண்டிய சூழல் ஏற்படும்.

சாப்பிட்ட பின்

சாப்பிட்டு முடித்த சிறிது நேரம் கழித்து தண்ணீர் பருகுவதே செரிமானத்திற்கு உகந்தது. செரிமான கருவிகளின் சீரிய செயல்பாட்டுக்கு தண்ணீரும் அவசியம். ஆனால் அது சரியான நேரத்தில் குடிப்பதும் முக்கியம். நாம் உட்கொண்ட உணவுகளின் உட்கூறுகள் செரிமானத்தின்போது உடைந்து சத்துக்களாக உருவாக செரிமான சுரப்புகளோடு சேர்த்து தண்ணீரின் துணையும் தேவை. ’ஊனுக்கு பின்பு வெந்நீர் பருகினால் ஊதியமாம்’ என சாப்பிட்ட பிறகு வெந்நீர் குடிப்பதன் பலன்களை எடுத்துரைக்கிறது அதே சித்த மருத்துவப் பாடல்.  

நீர்

பொதுவாக தண்ணீர் உடனடியாக உடலுக்கு பலத்தை அளிக்கக்கூடியது. அதுவும் மிதமான வெந்நீர், குடற்பகுதியின் இயக்கத்தையும் துரிதப்படுத்தும். அவற்றின் ’பெரிஸ்டால்டிக் அசைவுகளை’ (Peristaltic movements) ஊக்கப்படுத்தி செரிமானத்தை முறைப்படுத்தும். உடலில் சேரும் கழிவுகள் விரைவாக வெளியேறுவதற்கும் உதவும். வெந்நீரை அருந்துவதால் வாத நோய்கள் ஏற்படாது என்கிறது சித்த மருத்துவம். 

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, குழாயில் வரும் நீரைத் தூய்மைப்படுத்த, ஒரு வெள்ளைத் துணி மட்டும் போதும். சிறந்த வடிகட்டியாக செயல்பட்டு நீரில் உள்ள மலினங்களை நீக்கும். ஆனால் இன்று வெள்ளைத் துணியை மட்டும் நம்பி தண்ணீரை அருந்த முடியுமா? இயற்கையாக விளையும் காய்களில் கூட மாசு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், குடிக்கும் நீரில் அதிகரித்திருக்கும் மாசைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே தண்ணீரைக் காய்ச்சும்போதே, சீரகம், நெல்லிவற்றல், தூதுவளை இலைகள், தேற்றான் கொட்டை போன்ற மூலிகைகளை தேவைக்கேற்ப சேர்த்துக்கொண்டால் தண்ணீரோடு சேர்த்து, நமது உடலில் தேங்கியிருக்கும் மலினங்களும் நீங்கும். 

 

 


டிரெண்டிங் @ விகடன்