குழந்தைகளைக் காக்க புதிய ஆய்வகம்! - மரபணுக் குறைபாடுகளுக்குத் தீர்வு | Egmore Child Hospital Starts Rare Genetic Disorders Diagnostic Lab

வெளியிடப்பட்ட நேரம்: 13:59 (15/09/2018)

கடைசி தொடர்பு:15:19 (15/09/2018)

குழந்தைகளைக் காக்க புதிய ஆய்வகம்! - மரபணுக் குறைபாடுகளுக்குத் தீர்வு

800  படுக்கைகள், தினமும் 1000 குழந்தைகளுக்கு சிகிச்சை என மிகச் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை. மருத்துவமனையாக மட்டுமில்லாமல், ஆராய்ச்சி நிறுவனமாகவும் இது செயல்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்து இங்கே பல்வேறு விதமான ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. அந்த வகையில், அமினோ ஆசிட் குறைபாடு, யூரியா சைக்கிள் குறைபாடு, லைசோசோமல் ஸ்டோரேஜ் குறைபாடு போன்ற மிக அரிய வகை மரபியல் குறைபாடுகளை முதல் நிலையிலேயே கண்டறிவதற்கான நவீன ஆய்வுக்கூடம் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், பயோகெமிஸ்ட்ரி துறையின் ஆய்வுக்கூடங்கள் யாவும் நவீனமயமாக்கப்பட்டு, திறப்பு விழாவுக்காகக் காத்திருக்கின்றன. 

அரிய மரபியல் கோளாறுகள் ஆய்வகம்

இந்தப் புதிய  ஆய்வகம்குறித்து பயோகெமிஸ்ட்ரியின் துறைத் தலைவர் ப்ரமிளா நம்மிடம் பேசினார். 

``மரபணுக்குறைபாடுகளை, முதல் நிலையிலேயே கண்டறிவதுதான் இந்த ஆய்வகத்தின் நோக்கம். ஏற்கெனவே உபயோகத்திலிருந்த பயோகெமிஸ்ட்ரியின் துறைத்தலைவர் ப்ரமிளாகருவிகள் யாவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. புதிதாகவும் சில கருவிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் பிறந்து இரண்டு நாள்களில், அவர்களுடைய ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட `பச்சிளங் குழந்தை சிறப்பு பரிசோதனை மையம்' உருவாக்கப்பட்டுள்ளது. 'Pilot project' என்ற திட்டத்தின் அடிப்படையில், தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் இந்தவகை 'நோய் கண்டறியும் பரிசோதனைகளை' செயல்படுத்த திட்டமிட்டுவருகிறோம்.

கிராமப்புறங்களைச் சேர்ந்த பத்தாவது மற்றும் ப்ளஸ் டூ வகுப்பு மாணவர்கள் மத்தியில் மரபுக்குறைபாடு பற்றி நிறைய விழிப்பு உணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. திறப்பு விழாவுக்குப் பிறகு, அரசு மருத்துவமனையில் பிறக்கும் அனைத்துக் குழந்தையும், 'Dried Blood Sample' என்ற முறை மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். மற்ற மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் ரத்த சாம்பிள்கள் கொரியர் மூலம் எங்கள் துறையை வந்து சேரும். இறக்குமதி செய்யப்பட்டுள்ள கருவிகளில், முக்கியமானவையாக இரண்டு பார்க்கப்படுகிறது. 

பச்சிளங் குழந்தை சிறப்பு பரிசோதனை மையம்

* INTEGRATED CHEMISTRY HORMONE &ELECTROLYTE ANALYSER கருவி மூலம், ஒருமுறை எடுக்கப்படும் சாம்பிள் மூலமாகவே, அனைத்து வகை பரிசோதனைகளையும் கண்டறியலாம். பொதுவாக ஒவ்வொரு பரிசோதனைக்கும், குழந்தையின் உடலிலிருந்து ஒவ்வொரு முறை சாம்பிள் எடுக்கப்படும் அவசியம் இனி இருக்காது. 

* TANDEM Mass Spectrometry கருவி மூலம், ஒரே நேரத்தில் 96 சாம்பிள்களை பரிசோதனை செய்யலாம். வெளிமாவட்டங்களிலிருந்து ஒரேநேரத்தில் நிறைய சாம்பிள்கள் தரப்படும்போது, தாமதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இவை வைக்கப்பட்டுள்ளது. இக்கருவி, ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது " என்கிறார் ப்ரமிளா.  

தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு செய்யப்படும் இந்தப் பரிசோதனைகள் யாவும், இங்கு முற்றிலும் இலவசம் என்பதால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இவை இருக்கக்கூடும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க