வெளியிடப்பட்ட நேரம்: 19:58 (18/09/2018)

கடைசி தொடர்பு:19:58 (18/09/2018)

27 சதவிகித தமிழகக் குழந்தைகளை வதைக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடு! #Alert

27 சதவிகித தமிழகக் குழந்தைகளை வதைக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடு! #Alert

திக எடையும் உடல் பருமனும் இன்றைக்கு முக்கியமான ஒரு சுகாதாரப் பிரச்னையாக உருவெடுத்து நிற்கிறது. அதைப்போல ஊட்டச்சத்துக் குறைபாடும் இந்தியா போன்ற வளரும் நாடுகள் சந்திக்கும் மிகப்பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணம் கடந்த 10 ஆண்டுகளில் வெகுவாகக் குறைந்திருக்கிறது. ஆனாலும், உலகில் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளில் 50 சதவிகிதக் குழந்தைகள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்கின்றன சமீபத்திய புள்ளி விவரங்கள். 

ஊட்டச்சத்து குறைபாடு புள்ளி விபரம்

இந்தியாவில் 38 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய குடும்பநலம் மற்றும் சுகாதார அமைப்பு (National Family and Health Survey) மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மாநிலங்கள் அடிப்படையில் பீகார் 48 சதவிகிதம், உத்திரப்பிரதேசம் 46 சதவிகிதம், ஜார்கண்ட் 45 சதவிகிதம் என முதல் மூன்று இடங்களைப்பெற்று பின் தங்கியிருக்கின்றன. தமிழ்நாட்டில் 27 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் காணப்படுகின்றனர். அதோடு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டுள்ள குழந்தைகளில் 72 சதவிகிதம் பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சிச் செய்தியையும் தெரிவித்துள்ளது அந்தப் புள்ளி விவரம். 

குழந்தைகளின் எதிர்காலம் பற்றி ஒவ்வொரு பெற்றோருக்கும் ஆயிரம் கனவுகள் இருக்கும். ஆனால், அந்தக் கனவுகள் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற சமூக அந்தஸ்து பற்றியதாகவே இருக்கிறது. ஆனால், குழந்தைகளின் உடல் ஆரோக்கியமே, அவர்களது எதிர்காலத்துக்கு அடித்தளம் என்பதை மறந்துவிடுகிறார்கள். விளைவு, ஊட்டச்சத்துக் குறைபாடு, வளர்ச்சிக் குறைபாடு எனப் பல்வேறு பிரச்னைகளுடன் வளர்கிறார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.

குழந்தைகள்

குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்குக் காரணம் என்ன, அதைத் தவிர்க்க அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதுகுறித்து குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயனிடம் கேட்டோம். தேவநேயன்

"தாயின் வயிற்றில் இருக்கும்போதே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஆரம்பித்துவிடுகிறது. ஆனால், இந்தியாவில் குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தாய்க்கு ரத்தசோகை இருந்தால், பிறக்கும் குழந்தை குறைந்த உடல் எடையுடனும் குறைபிரசவத்திலும் பிறக்கலாம். அத்துடன் அந்தக் குழந்தைக்கும் ரத்தசோகை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் கர்ப்பகால பராமரிப்பு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியிருக்கிறது. அதற்கு வளரிளம் பருவம் முதல் பெண் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உறுதி செய்யவேண்டும். 

முதல் ஐந்து வயது என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியமான வயதாகும். இதை ஆங்கிலத்தில் இதை `கோல்டன் ஏஜ்' என்பார்கள். அதில் முதல் ஆயிரம் நாள்கள் மிக மிக முக்கியமானவை. அந்த காலகட்டத்திலிருந்தே மிகுந்த சிரத்தையுடன் கவனிக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். அடித்தல் உதைத்தல், குழந்தை தொழிலாளர் முறை ஆகியவையெல்லாம் எப்படிக் குழந்தைகளுக்கான உரிமை மீறலாகப் பார்க்கப்படுகிறதோ அதேபோலத்தான் ஊட்டச்சத்து மறுப்பும் பார்க்கப்படும். அதாவது, குழந்தைக்குக் கிடைக்க வேண்டிய சத்தான உணவுகள் கிடைக்காமல் போவதும் ஒருவகை உரிமை மீறல் என்ற பார்வை மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும். எனவே, ஆரம்பகால குழந்தை பராமரிப்புக்கான சட்டங்களை உருவாக்க வேண்டும்" என்கிறார் தேவநேயன்.

மூத்த குழந்தைகள் நல மருத்துவர் ரெக்ஸ் சண்முகத்திடம் பேசினோம்.

``பிறக்கும் குழந்தையின் உடல் எடை இரண்டரை கிலோவிலிருந்து 3 கிலோ வரை இருக்க வேண்டும். அதற்கு கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த உணவும், மருத்துவக் கண்காணிப்பும் அவசியம். கேரளா போன்ற மாநிலங்களைப்போல நம் மாநிலத்தில் உள்ள கிராமப்புற பெண்களுக்குக் கல்வியறிவு முழுமையாகச் சென்றடையவில்லை. அத்துடன் இளம் தாய்மார் மருத்துவப் பரிசோதனைக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் வீட்டில் உள்ள பெரியவர்கள் பழைமை நம்பிக்கையில் `அதெல்லாம் ஒன்றும் ஆகாது' என மெத்தனமாக விட்டுவிடுகிறார்கள். எனவே, கிராமப்புறங்களில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதுடன் கண்காணிப்பையும் மேற்கொள்ளலாம். ஆனால், குழந்தைகள் நலன் காக்கும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் போதிய ஊதியம் இல்லாததால், அதற்குண்டான தகுதிவாய்ந்த பணியாளர்கள் இல்லை. எனவே, உரிய ஊதியத்துடன் தகுந்த அங்கன்வாடி பணியாளர்களை நியமித்து அரசு வழங்கும் வசதிகள் பற்றியும் ஊட்டச்சத்துள்ள உணவுகளைப் பெறுவதற்கான வழிகாட்டுதலையும் வழங்கலாம்" என்கிறார் மருத்துவர் ரெக்ஸ் சண்முகம்.

கர்ப்பிணி

ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க அங்கன்வாடி எந்த வகையில் உதவியாக இருக்கிறது என்பதுபற்றி சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை செயலாளர் க.மணிவாசனிடம் கேட்டோம்.

``ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாடு முன்னிலையில்தான் இருக்கிறது. மேலும் அந்த எண்ணிக்கையைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, குழந்தைகள் ஊட்டச்சத்து குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்னையை விரைவில் களைய, இந்த மாதம் முழுவதும் ஊட்டச்சத்து விழிப்புஉணர்வு மாதமாகக்  கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் பல்வேறு விழிப்புஉணர்வு நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன. அத்துடன் அடுத்த 3 ஆண்டுகளில் ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கையை 3 சதவிகிதம் குறைக்கவும், குறைந்த உடல் எடையுடனும் ஊட்டச்சத்து குறைபாட்டுடனும் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை 2 சதவிகிதம் குறைக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளோம்.  

மாநிலம் முழுவதும் அங்கன்வாடியில் சேர்க்கப்படும் அனைத்துக் குழந்தைகளுக்கும் உடல் எடை, உயரத்தைப் பதிவு செய்து, ஆதார் அட்டையுடன் இணைக்கிறோம். இதைக் கண்காணிக்க அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கப்பட்டுள்ளது. இப்படி அரசு சார்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அங்கன்வாடியில் வாரத்தில் 3 நாள்கள் முட்டை, தினமும் சத்துமாவு, சத்துள்ள உணவு எனக் குழந்தைகளின் ஊட்டச்சத்தைப் பூர்த்தி செய்யும் உணவுகள் வழங்கப்படுகிறது. அதைப் பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டாலே ஓரளவு சத்துக்குறைபாட்டை எதிர்கொள்ளலாம். முன்பெல்லாம் 5 வயது வரை அங்கன்வாடியில் பயின்றவர்கள்தாம் அதிகம் இருந்தார்கள். 

இன்றைக்கு மொத்தக் குழந்தைகளில் 40 சதவிகிதக் குழந்தைகள்தாம் அங்கன்வாடியைப் பயன்படுத்துகிறார்கள். அந்த எண்ணிக்கையும் 2 முதல் 3 வயது வரைதான் நீடிக்கிறது. அதற்கு மேல், ஃப்ரீ ஸ்கூல், ப்ளே ஸ்கூல் போன்ற தனியார் கல்விக்கூடங்களுக்குச் சென்று விடுகிறார்கள். மேலும், தமிழகத்தில் பெண் கருவுற்றதும் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று பெயரைப் பதிவு செய்து கொண்டால் போதும். உரிய காலத்தில் இரும்புச்சத்து உள்ளிட்ட மாத்திரைகள், தடுப்பூசி கொடுப்பது, ஹீமோகுளோபின், சர்க்கரை அளவு கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளைச் செய்வது என முழுமையாக அப்பெண்ணுக்கான வசதிகள் செய்து தரப்படுகின்றன. இவற்றையெல்லாம் முறையாகப் பயன்படுத்தி பயன்பெறவேண்டும்" என்கிறார் க.மணிவாசன். 

பழங்கள், காய்கறிகள்

ஊட்டச்சத்துக் குறைபாடுகளைப் போக்க மேற்கொள்ள வேண்டிய உணவுப் பழக்கங்கள் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கற்பகத்திடம் பேசினோம்.

``குழந்தைப் பருவத்தில் கொடுக்கப்படும் சத்தான உணவுதான் அவர்களது உடலையும், மூளையையும் வளர்ச்சியடையச் செய்து வலுவானஉணவியல் நிபுணர் கற்பகம்நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கும். முக்கியமாகக் குழந்தை வளர்ப்பின்போது பெற்றோர் முக்கியக் கவனம் செலுத்தவேண்டும். ஆனால், குழந்தைகளுக்கு எந்த உணவைக் கொடுக்க வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதுபற்றி பெற்றோருக்கே போதிய விழிப்புஉணர்வு இல்லை. இவையெல்லாம்தாம் குழந்தைகளுக்குச் சத்துக்குறைபாடு ஏற்படக் காரணமாகின்றன. முக்கியமாக, முதல் 6 மாதம் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் முக்கியம். 6 மாதத்துக்குப் பிறகு குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டுமே போதுமானது அல்ல. எனவே, தாய்ப்பாலுடன் திட மற்றும் திரவ உணவுகள், பழங்கள், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவுகளையும் சேர்த்துக்கொடுக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகளைக் குழந்தைகளுக்குப் பிடித்தமாதிரி சமைத்துக் கொடுத்து சாப்பிடப் பழக்க வேண்டும். உதாரணமாக, பழங்களை அப்படியே சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சாலட் ஆகவோ, ஜூஸாகவோ செய்து கொடுக்கலாம். அத்துடன் அங்கன்வாடிகளில் கொடுக்கப்படும் சத்துமாவுகளில் சத்துகள் நிறைய உள்ளன. முட்டை உள்ளிட்ட சத்துள்ள உணவுகள் அங்குக் கொடுக்கப்படுகின்றன. அதை பொதுமக்கள் வாங்கி முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நகர்ப்புறங்களிலும் அங்கன்வாடி அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். போதிய விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டும். பிளே ஸ்கூல், ஃப்ரீ ஸ்கூல் என்ற பெயரில் நடத்தப்படும் கல்விக்கூடங்களில் அனுப்புபவர்கள், தாங்கள் கொடுத்தனுப்பும் உணவுகளைக் குழந்தைகள் சாப்பிடுகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும். பாக்கெட்டில் அடைத்த உணவுகள்,  நூடுல்ஸ் போன்ற சத்தில்லாத உணவுகளை வாங்கிக் கொடுத்து குழந்தைகளைப் பழக்கக் கூடாது"  என்கிறார் கற்பகம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்