வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (20/09/2018)

கடைசி தொடர்பு:15:40 (20/09/2018)

` பாதுகாப்பற்ற கருக்கலைப்பில் யாரும் ஈடுபட வேண்டாம்` - எச்சரிக்கும் தமிழக அரசு

``பாதுகாப்பற்ற, மருத்துவரின் பரிந்துரை இல்லாத கருக்கலைப்பில் யாரும் ஈடுபட வேண்டாம்`` என மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குநர் மரு.ருக்மணி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கருக்கலைப்பு

மதுரை மாவட்டம் உத்தப்புரத்தைச் சேர்ந்தவர்  ராமர். இவரின் மனைவி ராமுத்தாய். இந்தத் தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில், ராமுத்தாய் நான்காவது முறையாக கர்பமானார். இதனிடையே, நான்காவது குழந்தையும் பெண் குழந்தையாக இருக்குமோ என்று எண்ணி கருக்கலைப்பு செய்ய முற்பட்டதாகத் தெரிகிறது. அது தோல்வியில் முடிந்தது. 

இந்த நிலையில், 7 மாத கர்பிணியாக இருந்த ராமுத்தாய், கருவைக் கலைக்க முடிவுசெய்தார். இதைத் தொடர்ந்து தொட்டப்பநாயக்கனூரில் உள்ள செவிலியர் லட்சுமி என்பவரின் உதவியோடு கருவைக் கலைக்க முற்பட்டு, கடந்த செவ்வாய்க்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், உசிலம்பட்டி போலீஸார் செவிலியர் லட்சுமியைக் கைதுசெய்து விசாரணை  மேற்கொண்டுவருகின்றனர்.

இந்தச் சம்பவம்குறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் ருக்மணியிடம் பேசினோம், 

``  கரு உருவாகி முதல் 12 வாரங்களுக்குள்  அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்துகொள்ளலாம். 12 வாரங்களுக்கு மேல், கருவால் குழந்தைக்கும், தாய்க்கும் ஏதாவது பாதிப்பு ஏற்படும் எனத் தெரியவந்தால், அதுவும் 20 வாரங்களுக்குள் இருந்தால்  இரண்டு மகப்பேறு நல மருத்துவரிடம் அனுமதிபெற்று, கருக்கலைப்புசெய்துகொள்ளலாம். 20 வாரங்களுக்கு மேல் சென்றுவிட்டால், நீதிமன்ற அனுமதிபெற்று மட்டுமே கருக்கலைப்பு செய்யமுடியும். 

ராமுத்தாய்

பெண் குழந்தை என்று கருக்கலைப்பு செய்திருக்கிறார்கள், போஸ்ட்மார்ட்டம் ரிப்போட்டில் கருவில் இருந்தது ஆண் குழந்தை என்று தெரிய வந்திருக்கிறது. காலம் கடந்து, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கருக்கலைப்பு  செய்வது சட்டப்படி குற்றம். இணை இயக்குநரின் தலைமையில் விரிவான விசாரணை நடந்துவருகிறது. அந்தப் பெண், ஸ்கேன் செய்த இயந்திரத்தைப் பறிமுதல் செய்திருக்கிறோம். இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் `` என்று வேண்டுகோள் விடுக்கிறார் ருக்மணி.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க