வெளியிடப்பட்ட நேரம்: 15:43 (27/09/2018)

கடைசி தொடர்பு:19:30 (27/09/2018)

அதிகரிக்கும் குழந்தைகள் இறப்பு... காரணம் என்ன?- ஓர் அலசல்

ஒரு குழந்தை எங்கு பிறக்கிறது, யாருக்குப் பிறக்கிறது, எப்படிப் பிறக்கிறது ஆகிய 3 காரணிகளின் அடிப்படையில்தான் குழந்தை இறப்பு நடைபெறுகிறது.

அதிகரிக்கும் குழந்தைகள் இறப்பு... காரணம் என்ன?- ஓர் அலசல்

வ்வொரு 5 விநாடிக்கும் 14 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது என்ற அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது உலக சுகாதார நிறுவனம். 2017-ம் ஆண்டு நிலவரப்படி, குழந்தைகள் இறப்பு விகிதம் குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஓராண்டில் மட்டும் உலகம் முழுவதும் 63 லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதில் பாதிக்கும் மேற்பட்ட இறப்பு, சகாரா பாலைவனத்துக்குத் தெற்கில் உள்ள ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஏற்பட்டுள்ளது. 30 சதவிகித உயிரிழப்புகள் தெற்காசியாவில் நடைபெறுகின்றன. 

குழந்தைகள் இறப்பு

இந்தியாவைப் பற்றி என்ன சொல்கிறது ஆய்வறிக்கை?

* 5 வயதுக்குட்பட்ட ஆயிரம் குழந்தைகளில் 39 ஆண் குழந்தைகள், 40 பெண் குழந்தைகள் உயிரிழக்கின்றனர்.

* பிறந்து 29 நாள்களுக்குள்ளான பச்சிளங்குழந்தை இறப்பு எண்ணிக்கை 6.5 லட்சம்

* ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை 8.02 லட்சம்

* 5 - 14 வயது வரையுள்ள குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை 24 ஆயிரம்

இதில் வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால் தடுக்கக்கூடிய காரணங்களால்தாம் பெரும்பாலான குழந்தைகள் உயிரிழக்கின்றன என்பதுதான். மிகவும் எளிய தீர்வுகளான தூயத் தண்ணீர், ஊட்டச்சத்து, தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள், அடிப்படை மருத்துவ சேவை, மின்சார வசதி ஆகியவை எளிதில் கிடைத்துவிட்டாலே குழந்தை இறப்பு விவகாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்கின்றனர் மருத்துவத் துறை நிபுணர்கள். 

தடுப்பூசி

குழந்தைகள் இறப்பு விகிதம் என்பது கடந்த 30 ஆண்டுகளில் படிப்படியாகக் குறைந்து வருகிறது என்றாலும், நாம் கவனம் செலுத்த வேண்டிய இடங்கள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன.

ஒரு குழந்தை எங்குப் பிறக்கிறது, யாருக்குப் பிறக்கிறது, எப்படிப் பிறக்கிறது ஆகிய 3 காரணிகளின் அடிப்படையில்தான் குழந்தை இறப்பு நடைபெறுகிறது. சகாராவுக்குத் தெற்குப்பகுதியில் உள்ள ஆப்பிரிக்காவில் 13 குழந்தைகளில் ஒரு குழந்தை தனது 5-வது பிறந்தநாளை  கொண்டாடுவதற்கு முன்பு உயிரிழக்கிறது. ஆனால், அதிக வருமானம் கொழிக்கும் நாடுகளில் இந்த எண்ணிக்கை 185 குழந்தைகளுக்கு 1 என்ற விகிதத்தில்தான் இருக்கிறது. 

சுகாதாரத்துக்கும் பொருளாதாரத்துக்கும் தொடர்பு உள்ளது என்பதை இது காட்டுகிறது. குழந்தை பிறந்த முதல் மாதம்தான் மிகவும் சவாலான காலகட்டம். 2017-ம் ஆண்டில் 25 லட்சம் குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்துக்குள் உயிரிழந்துள்ளன. பணக்கார நாடுகளில் பிறக்கும் குழந்தைகளைக் காட்டிலும் தெற்கு ஆசியா மற்றும் சகாரா கீழமை ஆப்பிரிக்காவில் பிறக்கும் ஒரு குழந்தை, பிறந்த ஒரு மாதத்தில் உயிரிழப்பதற்கு 9 மடங்கு வாய்ப்பிருக்கிறதாம். 

`பல முயற்சிகள், நடவடிக்கைகள் எடுத்தாலும், பச்சிளம் குழந்தைகள் இறப்பைத் தடுப்பது என்பது இந்த நொடி வரை சவாலாகத்தான் உள்ளது' என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் இறப்பு

5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உயிரிழப்புக்குப் பிரசவம் நடக்கும்போது ஏற்படும் சிக்கல்கள், நிமோனியா, வயிற்றுப்போக்கு, பச்சிளம் குழந்தைக்கு ஏற்படும் ரத்தத்தில் நச்சேற்றம், மலேரியா ஆகியவை முக்கியக் காரணங்களாகும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப்புறங்களில் 50 சதவிகிதம் அதிகமாகக் காணப்படுகிறது.

 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்குப் பெரும்பாலும் விபத்துகள், காயங்கள்தாம் காரணமாக அமைகின்றன. அதாவது, நீரில் மூழ்குதல், சாலை விபத்துகளில் சிக்குதல் உள்ளிட்டவை. 

பெண் கல்வியறிவு

குழந்தைகளின் இறப்புக்கும் தாய்மார்களின் கல்வியறிவுக்கும் மிகப்பெரிய தொடர்புள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு நிகழ்வுகளில், அடிப்படை பள்ளிப்படிப்பை முடித்த பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கையைக் காட்டிலும். படிப்பறிவில்லாத பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதம் இரண்டு  மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது. ஒரு பெண் கல்வியறிவு பெறுதலின் முக்கியத்தையும் அவசியத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது. 

தமிழகத்தின் நிலை

ஆனால் இந்த விஷயத்தில் தமிழகத்தின் நிலை சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் வகையில்தான் உள்ளது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் குழந்தைகள் இறப்பைக் கட்டுப்படுத்தியதில் தமிழகம் முன்னிலையில்தான் உள்ளது. தமிழக அரசின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் ஆயிரம் குழந்தைகள் பிறப்புக்கு ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 34 பேர் உயிரிழக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் அந்த எண்ணிக்கை 17 ஆகக் குறைந்துள்ளது.

தாய்ப்பால்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய யுனிசெஃப் அமைப்பின் தகவல் தொடர்பு நிபுணர் சுகாதா ராய், ``குழந்தைகள் இறப்பு குறைவதற்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் தாய், சேய்க்குக் கிடைத்தல், குழந்தை பிறந்த 6 மாதம் தொடர்ச்சியாக தாய்ப்பால் கொடுத்தல், தடுப்பூசிகள் போன்றவையே காரணம். தமிழகத்தில் 99 சதவிகிதம் பிரசவங்கள் மருத்துவமனைகளில்தாம் நடைபெறுகின்றன. அதன் 100 சதவிகிதம் என்ற நிலைக்கு அதிகரிக்க வேண்டும். பிறவியிலேயே ஏற்படும் இதயநோய் பாதிப்புகளைக் கண்டறியும் திட்டங்களையும் தீவிரப்படுத்த வேண்டும். குழந்தைகள் இறப்பு அதிகமாக உள்ள மாவட்டங்கள், பகுதிகளைக் கண்டறிந்து, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள  வேண்டும். 

நமது நாட்டில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆயிரம் பிறப்புக்கு 43 ஆக உள்ளது. ஆனால் தமிழகத்தில் 20 என்ற நிலைதான் உள்ளது. குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்திய காரணத்தினால் ஒரிசா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் தமிழகத்தின் சுகாதார திட்டத்தை மாதிரியாகக் கொண்டு செயல்பட ஆர்வம் காட்டுகின்றன" என்றார்.

இறப்பு நிகழ்வுகளை முழுவதுமாக தடுத்து நிறுத்துவதில்தான் நமது முழு வெற்றி உள்ளது. அவசர அத்தியாவசிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் 2030- ம் ஆண்டுக்குள் 5 வயதுக்குட்பட்ட 56 லட்சம் குழந்தைகள் உயிரிழக்க நேரும். அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் புதிதாக பிறந்த குழந்தைகளாக இருப்பர் என்றும் எச்சரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். 


டிரெண்டிங் @ விகடன்